திருத்தந்தையின் மால்ட்டா திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது
“சுடர்ஒளி வீசுகின்ற பூமி” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 30, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின், அன்பொழுக அழைத்துள்ள மால்ட்டா நாட்டுக்கு, அவர் தனது 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஏப்ரல் 2,3 அதாவது வருகிற சனி. ஞாயிறு ஆகிய இருநாள்களில் மேற்கொள்கிறார். திருத்தூதர் புனித பவுலடியாரின் பாதம் பட்டு, அவரது போதனையின்படி வாழ்ந்துவரும் மால்ட்டா மக்களை, அதே திருத்தூதரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தானும் அந்நாட்டுக்கு இரண்டு நாள் திருத்தூதுப் பயணம் ஒன்றை மேற்கொள்வதாகவும் திருத்தந்தை கூறியிருக்கிறார். மத்திய ஐரோப்பிய நாடான உக்ரைனில் போர் கடுமையாக இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஐரோப்பாவின் தென்முனையில் உள்ள மால்ட்டா நாட்டுக்குத் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் திருத்தந்தையின் மால்ட்டா திருத்தூதுப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளால் அது தள்ளிவைக்கப்பட்டது.
மால்ட்டா தீவு நாடு
மத்தியதரைக் கடலின் மத்தியில், ஒரு புள்ளிபோன்று காட்சியளிக்கின்ற மால்ட்டா அல்லது மோல்ட்டா (Malta) தீவு, முக்கிய யுக்திகள் நிறைந்த, பல்வேறு தீவுக்கூட்டங்களைக்கொண்ட ஒரு குடியரசாகும். ஆப்ரிக்கா, மற்றும், மத்தியக் கிழக்குப் பகுதியின் பழமையான கலாச்சாரங்கள், வளர்ந்துவந்த ஐரோப்பா ஆகியவற்றுக்கு இடையே, மத்தியதரைக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு குடியரசாக அமைவதற்கு, அந்நாடு பல கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. பல்வேறு வல்லரசுகளுக்கு முக்கிய கடற்படைத் தளமாக இது அமைந்திருந்தது. எனவே மால்ட்டா சமுதாயம், போனிசியர், உரோமர், கிரேக்கர், அராபியர், நார்மானியர், சிசிலித்தீவினர், அரகோனியர், புனித யோவான் வீரப்பெருந்தகையர், பிரெஞ்சுக்காரர், பிரித்தானியர்.. இவ்வாறு பல்வேறு வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகளால், பல நூற்றாண்டுகளாக உருவானதாகும். மால்ட்டா தீவு, இரண்டாம் உலகப் போர் சமயத்தில், நேச நாடுகளின் இராணுவ அடித்தளமாக அமைந்திருந்ததால், அத்தீவு, ஜெர்மானிய மற்றும், இத்தாலிய வான்வழித் தாக்குதல்களால் வெகு அதிகமாகப் பாதிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற சமயத்தில் மிக மோசமாக அழிக்கப்பட்டிருந்த மால்ட்டா மக்கள், போர்க் காலத்தில் காட்டிய திறமை, மற்றும் துணிச்சலைப் பாராட்டி, 1942ம் ஆண்டில் அவர்களுக்கு பிரித்தானிய அரசு George Cross விருதை வழங்கியது. 2ம் உலகப் போருக்குப்பின்னர் தன்னாட்சி பெறுவதில் அந்நாட்டினர் அதிகக் கவனம் செலுத்தியதன் விளைவாக, 1813ம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவின் காலனி நாடாக அமைந்திருந்த மால்ட்டா, 1964ம் ஆண்டில் விடுதலை அடைந்து, காமன்வெல்த் அமைப்போடும் இணைந்தது. 1974ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, மால்ட்டா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. வல்லமை மற்றும், நிலைகுலையாமை என்ற விருதுவாக்கோடு ஆட்சியை அமைத்துள்ள இக்குடியரசு, 2004ம் ஆண்டில் EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. 2008ம் ஆண்டில் யூரோ பணம் பயன்படுத்தப்படும் நாடுகளில் ஒன்றாகவும் இது மாறியது. கி.பி. அறுபதாம் ஆண்டில் திருத்தூதர் பவுல், கப்பல் விபத்தில் சிக்கி மால்ட்டா தீவில் கரை இறங்கியபோது அவரை அன்போடு வரவேற்ற அம்மக்கள், இன்றுவரை அந்நியர்களை மனத்தாராளத்தோடு இன்கனிவுடன் வரவேற்பதிலும், விருந்தோம்புவதிலும் சிறந்து விளங்குகின்றனர் என்று பலராலும் புகழப்பட்டு வருகின்றனர்.
மக்களின் குடியேற்றம்
மால்ட்டா தீவில், கி.மு.5,900மாம் ஆண்டிலிருந்து மக்கள் வாழத்தொடங்கியுள்ளனர். மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள இரு தீவு நாடுகளில் ஒன்றான மால்ட்டா, பெரிய தீவான மால்ட்டா, Gozo, Comino ஆகிய மக்கள் குடியிருக்கும் மூன்று தீவுகள் உட்பட ஐந்து தீவுகளைக் கொண்டிருக்கிறது. இத்தீவுகள் பெரும்பாலும், சுண்ணாம்புக்கற்களையும், அவற்றின் பெரும்பாலான கடற்கரைகள், சுண்ணாம்புக்கற்கள்கொண்ட செங்குத்தான பாறைகள், வளைகுடாக்கள், மற்றும், கழிமுகங்களையும் கொண்டிருக்கின்றன. சிசிலித் தீவிற்கே தெற்கே (93 கி..மீ), லிபியா நாட்டிற்கு வடக்கே (290 கி.மீ), துனிசியாவிற்கு கிழக்கே (290 கி.மீ.) இத்தீவு அமைந்துள்ளது. 316 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், ஏறத்தாழ ஐந்து இலட்சத்து 16 ஆயிரம் மக்களைக் கொண்டிருக்கும் இத்தீவு நாடு, பரப்பளவில், உலகில் பத்தாவது சிறிய நாடாகவும், இறையாண்மைபெற்ற நாடுகளில் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்டிருக்கும் நான்காவது நாடாகவும் உள்ளது. மால்ட்டாவின் தலைநகரமான வல்லேட்டா, ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறிய தேசிய தலைநகரமாக அமைந்துள்ளது. வரலாற்று புகழ்பெற்ற வல்லெட்டா நகரத்தில் அமைந்துள்ள, 16ம் நூற்றாண்டு கட்டடங்கள், உலகப் பாரம்பரிய அடையாளங்களாக, 1980ம் ஆண்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மால்ட்டா, பொதுவாக, நகர நாடு என்றே குறிப்பிடப்பட்டாலும், பெருநகரங்கள் பட்டியலிலும் அது இணைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள், ஆங்கிலம், மற்றும், மால்ட்டீஸ் ஆகும். எனினும், 66 விழுக்காட்டு மால்ட்டா மக்கள், இத்தாலிய மொழியையும் பேசுகின்றனர்.
இயற்கைச் சூழல்
மால்ட்டா கடல்பகுதியில், மத்தியதரைக் கடல் பகுதிகளுக்கே உரிய கடற்பாசிகள் மற்றும், மரவடைகள் அதிகமாக உள்ளன. மேலும், மால்ட்டா காடுகளின் பெரும்பகுதி மரவேலைகளுக்கும், வேளாண்மைக்கும் அழிக்கப்பட்டுள்ளன, ஆயினும் அக்காடுகளில் சில ஊசியிலை மரங்களைக் காண முடிகின்றது என்று சொல்லப்படுகிறது. அந்நாட்டில் இஸ்பானியச் சிட்டுக் குருவிகளை அதிகமாகக் காணலாம். நீலப் பாறை பாடும் பறவை, அந்நாட்டின் தேசிய பறவையாகும். மால்ட்டாவில், 96 விழுக்காட்டினர் மால்ட்டீஸ் இனத்தவர். 2 விழுக்காட்டினர் பிரித்தானியர். சிந்து, பாலஸ்தீனியர், கிரேக்கர் போன்ற இனத்தவரும் உள்ளனர். இந்நாட்டில் 2000மாம் ஆண்டுகளில் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளிலிருந்து மக்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர். மால்ட்டாவின் இதமான காலநிலையும், அந்நாட்டில் அமைந்துள்ள கலையழகுமிக்க, மற்றும், வரலாற்று நினைவிடங்களும், சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்த்து வருகின்றன.
மதம்
உலகில் கிறிஸ்தவம் பரவத்தொடங்கிய காலக்கட்டத்தில், மால்ட்டா முஸ்லிம்களால் ஆளப்பட்டுவந்தாலும், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அந்நாட்டு மக்கள் பிரச்சனையின்றி தொடர்ந்து கிறிஸ்தவத்தைப் பின்பற்றி வந்தனர். 1091ம் ஆண்டில் முதலாம் ரோஜர் அவர்களால் மால்ட்டா ஆக்ரமிக்கப்பட்டபோது, அப்பகுதியில் முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இன்று, மால்ட்டாவில் கத்தோலிக்கம் அரசு மதமாகும். ஆயினும், அந்நாட்டு அரசியலமைப்பு, மனச்சான்று சுதந்திரம் மற்றும், மதச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு உறுதியளிக்கிறது. அந்நாட்டில் 85 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், மற்றும், 15 விழுக்காட்டினர் மற்ற மதத்தினர். இந்நாடு கத்தோலிக்கரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தாலும், புதியவழியில் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டியதன் சவாலை எதிர்கொள்கிறது என்று கூறப்படுகிறது. மால்ட்டா நாடு சுதந்திரம் பெற்றபின்னர், 1965ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அந்நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டன.