News

அமைதி, வரவேற்பு நற்செய்தியோடு மால்ட்டா திருத்தூதுப் பயணம்

மத்தியதரைக் கடல் பகுதி தீவு நாடான மால்ட்டாவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், மனித வாழ்வைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் தங்களை அர்ப்பணிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இருக்கும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 2,3 அதாவது இச்சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் மால்ட்டா நாட்டுத் திருத்தூதுப் பயணம் குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தையின் மால்ட்டா திருத்தூதுப் பயணம், தேவையில் இருப்போர், மக்களின் புலம்பெயர்வு, உக்ரைன் போர் உட்பட அனைத்துப் போர்கள் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்துவதாக இருக்கும் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

போர்கள், சித்ரவதை, அடக்குமுறை, வன்முறை போன்றவற்றுக்கு அஞ்சியும், சிறந்ததொரு வருங்காலத்தைத் தேடியும் தங்களின் பிறப்பிடங்களைவிட்டு வெளியேறும் மக்களை ஏற்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரவேற்றல், பாதுகாப்பளித்தல், ஊக்குவித்தல், மற்றும், ஒருங்கிணைத்தல் ஆகிய நான்கு வினைச்சொற்களைச் சுட்டிக்காட்டிவருவதையும், கர்தினால் பரோலின் அவர்கள் நினைவுகூர்ந்தார்.

ஐரோப்பியர்கள் அனைவரும், வளங்களை ஒருவர் ஒருவரோடு பகிர்ந்து, கடமையுணர்வோடு வாழுமாறு திருத்தந்தை அழைப்புவிடுத்து வருவதைக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இன்றைய உலகிற்கு அதிகம் தேவைப்படும், வாழ்வு மீது நம்பிக்கை ஏற்படுவதற்குரிய காரணங்களை எடுத்துரைக்கும்வண்ணம், நற்செய்தியை அறிவிப்பது, இத்திருத்தூதுப் பயணத்தின் மையமாக இருக்கும் என்றும் கூறினார்.

2020ம் ஆண்டில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த திருத்தந்தையின் மால்ட்டா திருத்தூதுப் பயணம், கோவிட்-19 பெருந்தொற்றால் தள்ளிவைக்கப்பட்டிருந்ததால், திருத்தந்தை தற்போது இந்நிகழ்வை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார் எனவும், உக்ரைனில் இடம்பெறும் போரினால் திருத்தந்தை மிகுந்த கவலையோடு இருக்கிறார் எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

ஐரோப்பா, உக்ரைன் புலம்பெயர்ந்தோருக்கு உதவி வருகின்ற இந்நேரத்தில், "நீலப் பாலைவனம்" என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ள, மத்தியதரைக் கடல் பகுதி வழியாக வருகின்ற புலம்பெயர்ந்தோருக்கு கூடுதலாக எத்தகைய உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று கேட்ட கேள்விக்கும் கர்தினால் பரோலின் அவர்கள் பதிலளித்தார்.

உக்ரைன் புலம்பெயர்ந்தோருக்கு உதவுகின்ற ஐரோப்பாவிற்கு நன்றி தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், இந்த உணர்வு, மற்ற புலம்பெயர்ந்தோர் மீது அதிகரிக்கப்படவேண்டும் என்ற தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மால்ட்டா குடியரசுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், அவரது 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகும்.

முந்தைய அடுத்தது