News

எண்ணிம உலகில் மனித மாண்பையும் உண்மையையும் பாதுகாக்க வேண்டும்: பவுலோ ரூபினி

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ணிமத் தகவல் தொடர்பின் மையத்தில் மனித மாண்பு, உண்மையான உறவுகள் மற்றும் பொது நலன் ஆகியவற்றை வைக்க வேண்டும் என்று சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பவுலோ ரூபினி அவர்கள், கத்தோலிக்க ஊடகவியலாளர்களை வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் இடம்பெற்ற இரண்டாவது செபு பெருநகர கத்தோலிக்க வெகுமக்கள் ஊடக மாநாட்டிற்காகப் காணொளிச் செய்தி மூலம் உரையாற்றிய டாக்டர் பாவ்லோ ரூஃபினி அவர்கள், தொழில்நுட்ப வளர்ச்சியில் அறநெறிப் பகுத்தறிவு, ஊடகக் கல்வி மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இம்மாநாட்டில் திருஅவை ஊடகவியலாளர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊடக வல்லுநர்கள் என ஏறத்தாழ 800 பேர் பங்கேற்றனர்.

பகிரப்பட்ட மனிதநேயத்தையும் மனித உறவுகளையும் வலியுறுத்தும் பிலிப்பினோ பண்பாட்டுக் கருத்தாக்கமான ‘கப்வா’ குறித்து எடுத்துரைத்த டாக்டர் ரூஃபினி அவர்கள், வணிக நோக்கங்களுக்காக மனிதர்களை வெறும் தன்விவரங்களாகச் சுருக்கிப் பார்க்கும் எண்ணிம அமைப்புகள் குறித்து எச்சரித்தார். தொழில்நுட்பம் தன்னளவில் ஆபத்தானது அல்ல; மாறாக, அது பொறுப்பற்ற முறையில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதில்தான் மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

தவறான தகவல் மற்றும் பிளவுகளை எதிர்த்துப் போராடும் அதேவேளையில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையான கதைசொல்லல் ஆகியவற்றைப் பேணிக் காக்குமாறு ஊடகவியலாளர்களுக்கு டாக்டர் ரூபினி அழைப்பு விடுத்தார். நம்பிக்கை, புரிதல் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் கதைகளைப் பகிர்ந்துகொள்ள அவர் அவர்களை ஊக்குவித்தார்.

உலகத் தகவல் தொடர்பு நாளுக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் செய்தியை மேற்கோள்காட்டி, அதிகரித்து வரும் எண்ணிம சமுதாயத்தில் உண்மையையும் மனித அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான அவர்களின் பொறுப்பை அவர் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினார்.

உண்மையான தகவல் தொடர்பு என்பது தொழில்நுட்பத்தில் தொடங்கவில்லை, மாறாக மனித‌ ஈடுபாட்டிலேயே அது தொடங்குகிறது என்று கூறி தனது செய்தியை நிறைவு செய்தார்.

முந்தைய அடுத்தது