சின்னக் குறிப்பிடம்
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. - ஆமென்
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. - ஆமென்
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. - ஆமென்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தின்மை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். - ஆமென்
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு, சதா காலமும், ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.
இந்த பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்:
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார்.
போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
அர்ச்சியஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். - ஆமென்
சர்வேசுரா சுவாமி! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்கு பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனத்தாபமில்லாமல் வேறு மனத்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களை செய்வதில்லையென்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்கு பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திரு இரத்த பலன்களை பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். - ஆமென்
என் சர்வேசுரா சுவாமி! தேவரீர் அளவில்லாத நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் என் பாவங்களால் உமக்கு செய்த துரோகத்திற்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன். இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால் இப்பேர்ப்பட்ட பாவங்களை செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன். - ஆமென்
எல்லாம் வல்ல சர்வேசுரனிடமும் எப்பொழுதும்த கன்னியான பரிசுத்த மரியாயிடமும் அதிதூதரான புனித மிக்தேலிடமும் ஸ்னாபகரான புனித அருளப்பரிடமும் அப்போஸ்தலரான புனித இராயப்பர், சின்னப்பரிடமும், புனிதர் எல்லோரிடமு; தந்தையே, உங்களிடமுமு; நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன். எனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என்பாவமே என்பாவமே என் பெரும் பாவமே. ஆகையால் எப்பொழுதும் கன்னியான பரிசுத்த மரியாயையும் அதிதூதரான புனித மிக்கேலையும் ஸ்னாபகரான புனித அருளப்பரையும் அப்போஸ்தலரான புனித இராயப்பர், சின்னப்பரையும், புனிதர் எல்லோரையும், தந்தையே உங்களையும் நம் ஆண்டவராகிய சர்வேசுரனிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன். - ஆமென்
ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்;
அவள் பரிசுத்த ஆவியினால் கர்பமானார் - அருள் நிறைந்த...
இதோ ஆண்டவருடைய அடிமை
உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறைந்த...
வார்த்தை மனிதுருவானார்
நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறைந்த...
இயேசு கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகும்படி
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
இறைவா! தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசு கிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் நாங்கள் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்துவழியாக மன்றாடுகிறோம் - ஆமென்
முதல்வர்: விண்ணக அரசியே! மனங்களிகூறும், அல்லேலூயா
துணைவர்: அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தார், அல்லேலூயா
மு. தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா
து. எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும், அல்லேலுயா
மு. எப்பொழுது கன்னியான மரியாவே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர், அல்லேலூயா
து. அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா
செபிப்போமாக:
இறைவா! உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பினாலே உலகம் மகிழ்திருக்க அருள்புரிந்தீரே! அவருடைய திருத்தாயாகிய கன்னிமரியாளின் துணையால் நாங்கள் என்றென்றும் நிலைத்த வாழ்வில் பேரின்பத்தைப் பெற, அருள்புரியுமாறு எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே! - இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக - சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - ஆமென்
இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - ஆமென்
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். - ஆமென்
இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி.
இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி - ஆமென்
எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். - ஆமென்
தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு, ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். - ஆமென்
சர்வேசுரா சுவாமி! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் - ஆமென்
சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர் எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.
இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.
ஜெபிப்போமாக: சர்வேசுரா சுவாமி! எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி - ஆமென்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது - ஆமென்
தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.
ஜெபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் - ஆமென்
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். - ஆமென்
என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கதக்கதாக. இன்றைக்கு என் கண் காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுமையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் நல்ல தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிற படியினாலே, என்னை உம்முடைய உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும். - ஆமென்
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்சரிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே - ஆமென்
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - அருள்நிறைந்த (மூன்று முறை)
Imprimatur: Most Rev. Arockiasamy, Bishop of Kottar, Nagarcoil – 30.05.1972
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Designed by DB Media