புதிய திருமறைச் சுவடி
மனிதர் இவ்வுலகில் மகிழ்சியாக வாழ விரும்புகின்றனர். உண்மையான மகிழ்சியைத் தருபவரும், அதற்கு ஊற்றாக இருப்பவரும் கடவுளே. எனவே, கடவுளை அடைவதில்தான் மனிதர் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.
1. கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?
கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்.
2. கடவுளை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?
கடவுள் தாம் படைத்த பொருள்கள் வழியாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். அவற்றைப் பார்த்து, படைத்தவரை நாம் அறிந்துகொள்ள முடியும். சிறப்பாக, இறைவளிப்பாடு வழியாகவும் அவரை அறிந்துகொள்ளலாம்.
3. கடவுளை நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
கடவுள் நம்மைப் படைத்துக் காத்துவரும் தந்தை; நாம் அவருடைய பிள்ளைகள். ஆகவே நாம் அவரை அன்பு செய்ய வேண்டும்.
4. கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
கடவுளின் விருப்பப்படி வாழ்வதன் வழியாக நாம் அவரை அன்பு செய்ய முடியும்.
5. கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன?
தாம் அளித்த கட்டளைகளுக்கும் நம் மனச்சான்றுக்கும் ஏற்ப நாம் வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.
6. எல்லா மனிதரையும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்; இதனால் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள். ஆகவே நாம் எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும்.
7. நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அன்பு செய்ததுபோல நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.
நாம் இவ்வுலகப் படைப்பிலே அழகையும் ஒழுங்கையும் காண்கிறோம். அவற்றைக் கண்டு பெரிதும் வியப்பு அடைகிறோம். ஆனால் இந்த அழகான உலகில் பாவமும் தீமையும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். இவற்றின் காரணத்தை அறிய ஆவல் கொள்கிறோம்.
8. அனைத்தையும் படைத்தவர் யார்?
கடவுள்.
9. கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை?
உடல் இல்லாத வானதூதரும், உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதரும் ஆவர்.
10. வானதூதர் என்பவர் யார்?
கடவுளை ஏற்று, அவருக்குப் பணி செய்து, அவரது பெரு மகிழ்வில் பங்குபெறுவர்களே வானதூவர் ஆவர்.
11. அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன?
கடவுளை ஏற்க மறுத்து நரகத்திற்குச் சென்றவர்களே அலகை ஆவர்.
12. கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்?
கடவுள் தம்முடைய அன்பையும் ஞானத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்த உலகைப் படைத்தார். மனிதருக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.
13. கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்?
கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார்.
14. கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்?
தம்மை அறிந்து, அன்பு செய்து, தமக்குப் பணி புரிந்து, தம்முடைய பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதரைப் படைத்தார்.
15. பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதருக்கு அளித்த கொடை என்ன?
மனிதரைத் தம்முடைய பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தி, தம்மை அப்பா என அழைக்கும் உரிமையை அளித்தார். இதுவே கடவுள் மனிதருக்கு அளித்த கொடையாகும். இதை அருள் நிலை என்றும் அழைக்கிறோம்.
16. மனிதர் இந் நிலையை எவ்வாறு இழந்தனர்?
அலகையை நம்பி, கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்ததால் மனிதர் அருள் நிலையை இழந்தனர்.
17. முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனை யாது?
1) கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை இழந்தனர்.
2) கடவுள் கொடுத்த அருள் நிலையை இழந்தனர்.
3) பாவ நாட்டம், துன்பம், சாவு முதலிய இன்னல்களுக்கும் நரகத் தண்டனைக்கும் உள்ளாயினர்.
18. பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா?
இல்லை. மனிதரைப் பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகக் கடவுள் வாக்களித்தார்.
கடவுளுக்குக் கீழ்ப்படியாத முதல் பெற்றோரின் குற்றத்தைத் தொடர்ந்து, மனிதர் மேன்மேலும் பாவத்தில் மூழ்கினர். இருப்பினும் கடவுள் உலகின் மீது இரக்கம் கொண்டார். தமக்கும் மனிதருக்கும் இடையே நட்பையும் உறவையும் ஏற்படுத்த இஸ்ரயேல் மக்களின் தந்தையான ஆபிரகாம் வழியாக உடன்படிக்கை செய்துகொண்டார். எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரயேல் மக்களை, மோசே தலைமையில் மீட்டு, சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். வாக்களிக்கப்பெற்ற கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற இஸ்ரயேல் மக்களோ இந்த உடன்படிக்கையை பல முறை மீறினார்கள்; கடவுளைப் புறக்கணித்தார்கள். எனினும் கடவுள் அவர்களைப் புறக்கணிக்கவில்லை; மாறாக, இறைவாக்கினர்களை அனுப்பி, மீட்பரின் வருகையை அவர்களுக்கு எடுத்துரைத்தார். எனவே இஸ்ரயேல் மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவருமே மீட்பராகிய இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருந்தார்கள்.
19. கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?
இயேசு கிறிஸ்து.
20. இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன?
இயேசு என்பதற்கு மீட்பர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்.
21. இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?
பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.
22. இயேசு எந்த ஊரில் பிறந்தார்?
பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார்.
23. இயேசுவின் தாய் யார்?
எப்பொழுதும் கன்னியான தூய மரியா.
24. இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?
தூய ஆவியாரின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகி, இயேசு மனிதராகப் பிறந்தார்.
25. இயேசுவின் தந்தை யார்?
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசெப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே.
26. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?
1) இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார்.
2) நாசரேத்தில் வளர்ந்து வந்தார்.
3) தம் தாய் தந்தையருக்குப் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
4) தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார்.
5) ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
27. இயேசு திருமுழுக்குப் பெற்றாரா?
ஆம். தமது முப்பதாம் வயதில் திருமுழுக்குப் பெற்றார்.
28. யாரிடம் திருமுழுக்குப் பெற்றார்?
திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
29. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?
வானம் திறக்க, கடவுளின் ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்கி வந்தார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. இதன் பிறகு இயேசு தமது மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.
30. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்துகொள்கின்றோம்?
கடவுள் ஒருவரே என்றும், அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்றும் அறிந்துகொள்கிறோம். இந்த உண்மையையே மூவொரு கடவுளின் மறைபொருள் என்கிறோம்.
31. தந்தை கடவுளா?
ஆம், கடவுள்தான்.
32. மகன் கடவுளா?
ஆம், கடவுள்தான்.
33. தூய ஆவியார் கடவுளா?
ஆம், கடவுள்தான்.
34. இம் மூவரும் மூன்று கடவுளா, ஒரே கடவுளா?
ஒரே கடவுள்.
35. எப்படி ஒரே கடவுள்?
யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே.
36. இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்துகொண்டார்?
இயேசு தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்து கொண்டார்; அவர்களைத் திருத்தூதர் என்று அழைத்தார்.
37. கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?
1) கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை; நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள்.
2) அனைத்திற்கும் மேலாக நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.
38. பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?
1) இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.
2) பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும்.
3) இயேசு நம்மை மன்னிப்பதுபோல நாமும் பிறரை மன்னித்து வாழ வேண்டும்.
39. தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?
தம் அரும் அடையாளங்களாலும் போதனையாலும் பாவிகளை மன்னித்ததாலும் சிலுவைச் சாவையே ஏற்றதாலும் தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு வெளிப்படுத்தினார்.
40. இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை?
1) தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார்.
2) அப்பம் பலுகச் செய்தார்.
3) புயலை அடக்கினார்; கடல்மீது நடந்தார்.
4) நோய்களைக் குணப்படுத்தினார்.
5) பேய்களை ஓட்டினார்.
6) இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்.
7) தாம் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்திழுந்தார்.
41. ஆகவே, இயேசு கிறிஸ்து யார்?
இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளும் மனிதரும் ஆனவர்; பாவத்திலுருந்து நம்மை மீட்பவர். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள உறவில் நிறை வாழ்வு காண நமக்கு வழி காட்டுபவர்.
42. இயேசு எவ்வாறு நம்மை மீட்டார்?
இயேசு தம் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். நம் பாவங்களுக்காகப் பாடுபட்டு, சிலுவையில் இறந்தார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தார். இவ்வாறு நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார்.
43. இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?
1) யூதத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டார்.
2) கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தினார்.
3) யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
4) கல்தூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.
5) முள்முடி சூட்டப்பட்டார்.
6) சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்கு உள்ளானார்.
44. சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்துவிட்டதா?
இல்லை. இயேசு தாம் முன்னுரைத்தவாறு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். உலக முடிவு வரை எந்நாளும் நம்முடன் இருக்கிறார்.
45. உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்?
உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குப் பல முறை தோன்றி, அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி வந்தார்.
46. இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்றால் என்ன?
இயேசு பாடுபட்டு, இறந்து உயிர்த்ததையே இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்கிறோம்.
47. கிறிஸ்தவருடைய பாஸ்கா என்பது என்ன?
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து தந்தையிடம் சென்றது போல, நாமும் பாவத்தை விட்டெழுந்து, அருள் வாழ்வுக்குக் கடந்து செல்ல வேண்டும். இதுவே கிறிஸ்தவருடைய பாஸ்கா.
48. இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற பத்தாம் நாள் யாரை அனுப்பினார்?
தூய ஆவியாரை அனுப்பினார்.
49. இயேசு கிறிஸ்து இப்பொழுது எங்கே இருக்கிறார்?
இறைத் தந்தையுடன் ஒன்றுபட்டு, இயேசு கிறிஸ்து உலகம் எங்கும் இருக்கிறார். அருள்சாதன முறையில் சிறப்பாக நற்கருணையில் இருக்கிறார்.
தாம் இவ்வுலகில் ஆற்றிவந்த மீட்புப் பணி உலக முடிவு வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கிறிஸ்து விரும்பினார். எனவே தமக்குப் பின் இப் பணி தொடர்ந்து நடைபெறத் தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தார். அதன்படி தாம் விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தூய ஆவியாரை அனுப்பினார். தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட திருத்தூதர்கள் அச்சம் இன்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தனர். அதற்குச் செவிகொடுத்த பல ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பித் திருமுழுக்குப் பெற்றார்கள். இவ்வாறு திருச்சபை பிறந்து வளரத் தொடங்கியது.
கடவுள் தம் மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரயேல் என்னும் ஒரு மக்களினத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தக் கிறிஸ்து திருச்சபையை ஏற்படுத்தினார்.
கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் மனிதருக்குச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்திய உண்மைகளையும் நிகழ்த்திய வரலாற்றையும் கொண்ட நூல்களின் தொகுப்பே திருவிவிலியம். இது தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்டது.
மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்து நம்மோடு உறவு கொண்டு, நம்மை அருள் வாழ்வில் வளரச் செய்கின்றார்; தம் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறை நிகழ்ச்சியில் நாம் பங்கேற்கச் செய்கின்றார். இவ்வாறு மனித வாழ்வில் முக்கிய கட்டங்களில் கிறிஸ்து ஆற்றும் செயல்களே திருவருள்சாதனங்கள் ஆகும்.
69. திருவருள்சாதனம் என்றால் என்ன?
அருள் வாழ்வைக் குறித்துக் காட்டவும், அதனை வழங்கவும், கிறிஸ்து ஏற்படுத்திய நிலையான அடையாளமே திருவருள்சாதனம் ஆகும்.
70. திருவருள்சாதனங்கள் எத்தனை?
ஏழு.
71. அவை யாவை?
1) திருமுழுக்கு
2) உறுதிப்பூசுதல்
3) நற்கருணை
4) ஒப்புரவு
5) நோயில்பூசுதல்
6) குருத்துவம்
7) திருமணம்
72. திருவருள்சாதனங்கள் வழியாக நாம் என்ன பெறுகிறோம்?
அருள் வாழ்வைப் பெறுகிறோம்.
73. திருமுழுக்கு என்றால் என்ன?
பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, கடவுளின் பிள்ளைகளாகவும் திருச்சபையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்றது.
74. உறுதிப்பூசுதல் என்றால் என்ன?
தூய ஆவியாராலும் அவருடைய கொடைகளாலும் நம்மை நிரப்பி, திருச்சபையின் பணிகளில் ஈடுபட ஆற்றல் அளிக்கிறது.
75. தூய ஆவியார் நமக்கு எவ்வாறு உதவுகிறார்?
நம்பிக்கையில் உறுதியாகவும், கடவுள்மேல் அன்புடன் வாழவும், கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக விளங்கவும், தம் கொடைகளை வழங்கி உதவுகிறார்.
76. தூய ஆவியாரின் கொடைகள் யாவை?
1) ஞானம்
2) மெய்யுணர்வு
3) அறிவுரைத் திறன்
4) நுண்மதி
5) ஆற்றல்
6) இறைப்பற்று
7) இறை அச்சம்
77. தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் யாவை?
1) அன்பு
2) மகிழ்ச்சி
3) அமைதி
4) பொறுமை
5) பரிவு
6) நன்னயம்
7) நம்பிக்கை
8) கனிவு
9) தன்னடக்கம்
10) பணிவு நயம்
11) தாராள குணம்
12) நிறை கற்பு
78. நற்கருணை என்றால் என்ன?
இயேசுவின் திருஉடலும் திருஇரத்தமும் அடங்கி இருக்கும் அருள்சாதனம்.
79. இயேசு எப்பொழுது நற்கருணையை ஏற்படுத்தினார்?
இறுதி இரவு உணவின்போது.
80. இயேசு எவ்வாறு நற்கருணையை ஏற்படுத்தினார்?
அப்பம், திராட்சை இரசம் ஆகியவற்றின் வழியாக தம் உடலையும் இரத்தத்தையும் வழங்கினார். "இது என் உடல்", "இது என் இரத்தம்" எனச் சொல்லி, நினைவாகச் செய்யும்படி கூறினார்.
81. திருப்பலியில் இது எவ்வாறு நிறைவேறுகிறது?
அப்பமும் திராட்சை இரசமும், கிறிஸ்துவின் திருஉடலாகவும் திருஇரத்தமாகவும் மாறுகின்றன.
82. இயேசு நற்கருணையை ஏன் ஏற்படுத்தினார்?
ஆன்ம உணவாகவும், தம் பாஸ்கா நினைவாகவும், நம்முடன் இருப்பதற்கான அடையாளமாகவும்.
83. நற்கருணை வாங்குவோர் எந்த நிலையில் இருக்க வேண்டும்?
பாவம் இல்லாமல், நல்லுறவில் இருக்க வேண்டும்.
84. திருப்பலியில் இரு பெரும் பகுதிகள் யாவை?
1) இறைவாக்கு வழிபாடு
2) நற்கருணை வழிபாடு
85. திருப்பலியில் பங்கேற்பது எவ்வாறு?
பார்வையாளராக இல்லாமல், இறை வார்த்தையைக் கவனித்து, பாடல்கள், வேண்டல்களில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.
86. ஒப்புரவு அருள்சாதனம் என்றால் என்ன?
திருமுழுக்குப் பிறகு செய்த பாவங்களை மன்னிக்கக் கடவுள் அருள் தரும் அருள்சாதனம்.
87. ஒப்புரவின் படிகள்:
1) பாவ நினைவு
2) மன வருத்தம்
3) தீர்மானம்
4) அறிக்கை
5) பரிகாரம்
88. நோயில்பூசுதல் என்றால் என்ன?
பாவமன்னிப்பு, சாந்தி, ஆன்ம நலம் தரும் அருள்சாதனம்.
89. குருத்துவம் என்றால் என்ன?
திருப்பலி, திருவருள்சாதனங்கள் மற்றும் போதனை செய்யும் அதிகாரம் வழங்கும் அருள்சாதனம்.
90. திருமணம் என்றால் என்ன?
கணவன் மனைவியாக இணைத்து, அன்புடன் வாழவும், பிள்ளைகளை வளர்க்கவும், இல்லத் திருச்சபையை உருவாக்கவும் அருள் தரும் அருள்சாதனம்.
மனித வாழ்வு சிறப்பாக அமைக் கடவுளே சில சட்ட திட்டங்களை நமக்கு வகுத்துக் தந்துள்ளார்; நம் இதயத்தில் பதித்து வைத்துள்ளார். இவற்றைப் பத்துக் கட்டளைகள் என அழைக்கிறோம். இந்தக் கட்டளைகளை இயேசுவே கடைப்பிடித்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். மேலும், கிறிஸ்துவின் போதனைகளைச் செம்மையாக கடைப்பிடிப்பதற்குத் திருச்சபையும் சில வழி முறைகளைக் கொடுத்துள்ளது. இவற்றைத் திருச்சபையின் ஒழுங்கு முறைகள் என்கிறோம். தூய ஆவியாரின் துணை கொண்டு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதே அன்றாடக் கிறிஸ்துவ வாழ்க்கை ஆகும்.
இறப்புடன் மனித வாழ்வு முடிவு அடைவதில்லை; வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கப்படுவதில்லை என்பதே நமது நம்பிக்கை. அதைப் பற்றிக் கிறிஸ்தவப் போதனையின் அடிப்படையில் திருச்சபை சில உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அளவில்லாக் கருணையும் ஞானமும் உள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டு, தம் மகனை உலகிற்கு அனுப்பினார். இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்ப்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியாரால் கன்னி மரியாவிடம் மனிதரானார். நம்பிக்கை கொண்டோர் நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும் எப்பொழுதும் கன்னியுமான மாட்சிமிகுந்த மரியாவுக்கு சிறப்பான வணக்கம் செலுத்துகின்றனர்.
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Designed by DB Media