Banner Image

கத்தோலிக்க விசுவாசம்

கத்தோலிக்கத் திருச்சபை

கத்தோலிக்கத் திருச்சபை என்பது உண்மையான ஒரே விசுவாசத்தை ஏற்று பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் திருமுழுக்குப் பெற்று, இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் வழிமரபில் வந்த திருத்தந்தை (போப்) மற்றும் அவரோடு இணைந்து செயல்படும் ஆயர்களின் வழிநடத்துதலில் வாழும் உலகளாவிய சமூகம்.

பிதாவை பற்றிய நம்பிக்கை:

  1. பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
  2. கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறொறு கடவுள் இல்லை.
  3. அவர் தாமாயிருக்கிறார்; துவக்கமும் முடிவுமில்லாதவர்; முடிவில்லா முழுமை உடையவர்.
  4. சர்வ வல்லமை உடையவர்; முடியாததென்று ஒன்றுமில்லை.
  5. அவர் வெறுமையிலிருந்து அனைத்தையும் உண்டாக்கினார்; அனைத்திலும் இருப்பவர்; அனைத்தையும் அறிபவர்.
  6. ஒரே கடவுள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று ஆட்களாய் இருக்கிறார் (மூவொரு கடவுள்).
  7. மூவொருள் மெய்ப்பொருளில் ஒரே கடவுள்; அதில் பிதா முதன்மை பெறுகிறார்.

இயேசு கிறிஸ்துவை பற்றிய நம்பிக்கை:

  1. மூவொருள் கடவுளில் இரண்டாமவர் இயேசு கிறிஸ்து; அவர் பிதாவுடன் ஒரே பொருளானவர்.
  2. மனிதருடைய மீட்புக்காக மனித உடல் எடுத்தவர்.
  3. தெய்வீக தன்மையோடும், மனிதத் தன்மையோடும் ஒருங்கே இருந்தவர்.
  4. இதை “மனிதராக்கும் மறைபொருள்” என்கிறோம்.
  5. “இயேசு” என்பதற்கு “மீட்பர்”; “கிறிஸ்து” என்பதற்கு “அபிஷேகம் பெற்றவர்”.

இயேசுவின் பிறப்பு:

  1. இயேசு கிறிஸ்து தூய ஆவியால் கன்னிமரியாவிடம் கருவாகி பிறந்தார்.
  2. மரியாள் பாவமின்றி படைக்கப்பட்டவர்; கன்னிமை குன்றாமல் வாழ்ந்தார்.
  3. யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார்.
  4. பெத்லகேமில் கி.மு. 4ஆம் ஆண்டில், கடும் குளிர்காலத்தில் பிறந்தார்.

இயேசுவின் இரட்சிப்பு மரணம்:

  1. போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில், நம் பாவங்களுக்கு அஞ்சாத வகையில் அவர் பாடுபட்டார்.
  2. சிலுவையில் அறையப்பட்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
  3. எருசலேமின் வெளியே கல்வாரி மலைக்குப் புனித வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு உயிர்நீத்தார்.
  4. யூதர் கடவுள் செம்மறி பலியைக் காட்டியதைப்போல், இயேசுவும் நம் பாவங்களைத் தம்மீது ஏற்று பலியாக்கப்பட்டார்.

பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்

1. இயேசு கிறிஸ்து உண்மையாகவே மரித்தார். உண்மையாகவே அவரது ஆன்மாவும் உடலும் பிரிந்தது.

2. அவருடைய உடலானது குகைக் கல்லரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது ஆன்மா இறைவனால் மகிமைப்படுத்தப்பட்டது.

3. இயேசு கிறிஸ்து தம் வல்லமையால் மரித்த மூன்றாம் நாள் தம் உடலுக்கு உயிர்கொடுத்து உயிர்ப்பித்தார். தம் உயிர்ப்பின் மூலம் சாவை வென்றார்.

4. இயேசு கிறிஸ்துவின் பாடுகளும் உயிர்ப்பும் இரு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. தம் பாடுகளாலும் இறப்பாலும் நம் பாவங்களிலிருந்து விடுவிக்கிறார். தம் உயிர்ப்பின் மூலம் புது வாழ்விற்கு நம்மை அழைக்கின்றார்.

5. கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்கு மறுவாழ்வின் நம்பிக்கையைக் கொடுக்கின்றது.

6. இது இயேசுவின் தியாகப்பலி மீது மீட்பு, பரிகாரம், உய்வித்தல், நிறைவு என்ற மேன்மைகளை வழங்கும் "இறுதிவரைக்கான அன்பு" ஆகும். புனிதனாய் இருந்தாலும் கூட எந்த மனிதனும் தன் மேல் அனைவரின் பாவங்களையும் ஏற்று, தன்னையே அனைவருக்காகவும் பலியாய் ஒப்புக்கொடுக்க இயலாது. அனைவரையும் கடந்து அனைத்தையும் இயங்குபவரும், மனிதகுலத்தின் தலையாகத் தன்னை அமைத்துக்கொண்டவருமான இறை மகனாகிய கிறிஸ்துவில் இருந்து அனைவருக்கும் தன் மீட்பில் பங்கு அருள்கின்றார்.

பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்

1. உயிர்த்த நாற்பது நாட்களில் இயேசு கிறிஸ்து ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எழுந்தருளிச் சென்றார்.

2. விண்ணகத்தில் இறைத் தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார்.

3. விண்ணகம் சென்ற இறைமகன் மீண்டும் வருவார்.

4. திருச்சபையின் தலைவராம் கிறிஸ்து நமக்கு முன்பாக இறைத் தந்தையோடு விண்ணகத்தில் அமர்ந்திருப்பதால் கிறிஸ்துவின் உறுப்புகளாகிய நாமும் ஒருநாள் விண்ணகத்தில் இறைத் தந்தையோடும் கிறிஸ்துவோடும் அமர்வோம்.

அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்

1. ஒவ்வொறு மனிதர் இறக்கும் போதும் கிறிஸ்து தனித் தீர்வையிட்டு தக்க சன்மானத்தையோ அல்லது தண்டனையோ தருவார்.

2. உலக முடிவில் பொதுத் தீர்வையில் அனைவருக்கும் தீர்ப்பு வழங்குவார்.

3. பொதுத்தீர்வையில் தனித் தீர்வைபெற்றவர்கள் அத்தீர்வில் உறுதிப்படுத்தப்படுவர்.

4. பொதுத்தீர்வையில் நற்செயல்கள் புரிந்தவர்கள் மோட்ச பாக்கியத்தையும் தீயவர்கள் நரகத்தையும் அடைவார்கள்.

பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்

1. தூய ஆவியானவர் மூவொறு கடவுளில் மூன்றாம் ஆள்.

2. தூய ஆவியானவர் இறைத்தந்தையோடும் இறை மகன் இயேசுவோடும் ஒன்றித்து செயல்படுபவர். இறைத்தந்தைக்கும் இறைமகன் இயேசுவுக்கும் சமமானவர்.

3. தூய ஆவியானவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்றபோதும் பெந்தகோஸ் திருவிழாவின் போது அக்கினி நா வடிவில் அப்போஸ்தலர்கள் மீதும் இறங்கி வந்ததை எடுத்துக்காட்டாக கூரலாம்.

4. ஆவியின் ஏழு கொடைகள்: ஞானம், புத்தி, அறிவு, திடம், பக்தி, விமரிசை, தெய்வபயம் (றளைனழஅஇ ரனெநசளவயனெiபெஇ மழெறடநனபநஇ கழசவவைரனநஇ pநைவலஇ உழரளெநடஇ கநயச ழக வாந டுழசன).

5. ஆவியின் கனிகள்: பரிவன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, கனிவு, பரிவு, நன்னயம், பெருந்தன்மை, மென்மை, நம்பிக்கை, ஒழுங்கு, தன்னடக்கம், கற்பு.

பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்

1. கிறிஸ்துவின் திருச்சபை கத்தோலிக்கத் திருச்சபையில் அடங்கியுள்ளது.

2. திருச்சபை என்பது ஒன்றே. அது புனிதமானது, உலகளாவியது, நற்செய்தி அறிவிப்புப் பணியை உள்ளடக்கியது.

திருச்சபை ஒன்றே, எனெனில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று ஆட்களான ஒரே கடவுள்தான் அதன் ஆதாரம். இந்த ஒரே ஆதாரத்திலிருந்துதான் ஒரே விசுவாசம் ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்கு, ஒரே திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்களை நாம் பெறுகிறோம்.

திருச்சபை என்பது புனிதமானது எனெனில் கிறிஸ்துவே அதன் தலைவர். தூய ஆவியின் கொடைகளால் அதை நிரப்பிப் புனிதப்படுத்துகிறார்.

திருச்சபை உலகளாவியது. ஏனெனில் திருச்சபையின் தலையாகிய பணி உலகெங்கும் நற்செய்தி அறிவித்தலே ஆகும். அப்போஸ்தலர்களின் வழியில் திருச்சபையானது கிறிஸ்துவின் மீட்புப் பணியை உலகெங்கும் தொடர்ந்து ஆற்றிக்கொண்டு வருகிறது.

திருச்சபை எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் மீட்பைத் தரவல்லது. ஏனெனில் திருச்சபையின் தலைவராகிய கிறிஸ்துவே மீட்பின் முழுமையை திருச்சபைக்கு கொடுத்திருக்கின்றார். முழுமையான விசுவாசம், முழுமையான அருள்வாழ்வு, அப்போஸ்தலர்களின் வழிவந்த அருள்பொழிவுபெற்ற ஆயர்களின் வழிநடத்துதல் ஆகியவைகளை திருச்சபை கொண்டுள்ளது.

3. திருச்சபையின் தலைவராம் கிறிஸ்துவே தமக்குப் பின் புனித பேதுருவை காணும் தலைவராக திருச்சபைக்கு ஏற்படுத்தினார்.

4. திருத்தந்தை (பாப்பரசர்) என்பவர் இன்றய உலகில் காணும் தலைவராக புனித பேதுருவின் வழிவந்தவர். அவரே ரோமை நகரின் ஆயருமாவார்.

5. புனித பேதுருவின் வழிமரபில், திருத்தந்தையும், திருத்தந்தையோடு இணைந்து ஆயர்களும் திருச்சபையின் நற்செய்தி அறிவிக்கும் பணி, புனிதப்படுத்தும் பணி, மற்றும் ஆளும் பணி ஆகியவைகளைத் தொடந்து ஆற்றிவருகின்றனர்.

6. திருத்தந்தை, புனித பேதுருவின் வழிவந்தவர் என்பதால் விசுவாசம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த அதிகாரப்பூர்வ போதனையில் தவறா வரம் பெற்றவர்.

7. கிறிஸ்துவே திருச்சபையின் தலைவராகவும் நிறுவனராகவுமிருப்பதால் உலகம் முடியும் வரை அவரே அதனைத் காத்தருள்வார்.

அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்

1. நாம் இவ்வுலகில் கடவுளின் சித்தத்திற்கு ஏற்ப நல்வாழ்க்கை வாழ்ந்தால் நமது இறப்பிற்குப் பின் நாம் விண்ணகத் தந்தையோடு அமர்வோம். ஆனால் சிறு குற்றங்கள் இருப்பின் விண்ணகத்தந்தையோடு உடன் அமர இயலாமல் உத்தரிக்கிற இடத்திற்குச்செல்வோம். அங்கு நம் குற்றம் குறைகளுக்காக உத்தரித்த பின் நாம் விண்ணகத் தந்தையோடு அமரும் பேறு பெறுவோம்.

2. இவ்வுலகில் திருமுழுக்குப் பெற்று கடவுளின் அருள் நிலையில் வாழ்கின்ற ஒவ்வொருவரும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உத்தரிக்கின்ற ஆன்மாக்களும், விண்ணகத்தில் கடவுளோடு அமர்ந்திருக்கின்ற வானதூதர்களும், புனிதர்களும், அனைத்து மக்களும் ஒருவர் ஒருவரோடு உறவுகொள்ளும் நிலையில் இருக்கின்றனர். இந்த மூன்று நிலைகளில் உள்ள ஒருவர் ஒருவரோடும் கிறிஸ்துவோடும் இணைந்துள்ளனர்.

நாம் புனிதர்கள் வழியாக ஜெபம் செய்யும் போது புனிதர்கள் மேன்மைப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார்கள். இவ்வுலகில் நாம் ஒருவர் ஒருவருக்காக ஜெபம், மற்றும் ஒருத்தல் முயற்சிகள், நற்செயல்கள் செய்வது மிகுந்த பலனைத் தரும். அதேபோல் நம்முடைய ஜெபங்கள், ஒருத்தல் முயற்சிகள், நற்செயல்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்றவர்களுக்குப் உதவிசெய்யும்.

பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன்

1. பாவம் என்பது நமது சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடவுளின் அன்பைப் புறக்கணித்து அவர் காட்டிய வழியில் நடவாமல், கடவுளை நோகச்செய்வதாகும். சுருக்கமாக கடவுளின் அன்பைப் புறக்கணிப்பது பாவம். கடவுள் அன்பே வடிவானவர். அந்த அன்பின் வெளிப்பாடு இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களான நாமும் அதே அன்பில் வாழ அழைக்கப்படுகிறோம். இத்தகைய அன்பில் வாழாமல் சுயநலத்திலும், உலக இன்பத்திலும் முழ்கி, கடவுள் நமக்கு கொடுத்த அன்புக் கட்டளைக்கு எதிராக செயல்படும்போது கடவுளின் அன்பைப் புறக்கணிக்கிறோம். நம்மை அன்பு செய்யும் கடவுளுக்கு எதிராகவும், அன்புசெய்து வாழவேண்டிய சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம்.

2. அற்ப காரியத்திலோ அல்லது முழு ஈடுபாடில்லாமலோ, அல்லது அறியாமையினாலோ நாம் செய்யும் தவறுகள், குற்றங்கள் அற்ப பாவம். எடுத்துக்காட்டு - நமது சௌகரியத்திற்காக சிறு பொய் சொல்லுதல் (அடுத்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது). கடவுளின் உறவில் பாதிப்பு ஏற்படுத்தினாலும் எழிதாக மீண்டும் அன்புறவை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.

கனமான காரியத்தில், மனம் பொருந்தி, முழு ஈடுபாட்டுடன், பாவம் என அறிந்தும் அதைச் செய்வது சாவான பாவம். எடுத்துக்காட்டு: மனமறிந்து மோக பாவம் செய்வது, கொலை செய்வது, போன்றவையாகும். (அடுத்தவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்க கூடிய செயல்கள் அனைத்தும்) இவை நமது ஆன்மாவை முற்றிலுமாக சாவுக்கு இட்டுச் செல்லும் காரியங்கள். கடவுளோடு உள்ள அன்புறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையை ஏற்படுத்துகிறது.

3. ஜென்ம பாவம் அல்லது ஆதிபெற்றோர் பாவம் என்பது ஆதாம் ஏவாள் செய்த முதல் பாவம். இதனால் நாம் புனிதத் தன்மை இழந்து பாவ இயல்புக்குள்ளாகிறோம். நாம் திருமுழுக்குப் பெறும்போது நாம் இந்தப் பாவம் நீக்கப்படுகிறது. நாம் கடவுளின் பிள்ளைகளாகிறோம்.

4. ஒப்புரவு என்னும் திருவருட்சாதனத்தைத் தகுதியுடன் பெறும் எவரும் அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்புப் பெற்று கடவுளோடும் மனிதரோடும் முழு ஒப்புறவு ஆகின்றனர்.

சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்

உலகம் முடியும் நாளில் நாம் அனைவரும் நமது உடலோடு உயிர்தெழுந்து அழியா உடலைப் பெறுவோம். அந்நாளில் நமது ஆன்மாவும் உடலும் மீண்டும் இணையும்.

நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்

1. உலகம் முடியும் நாளில் நாம் அனைவரும் நமது உடலோடு உயிர்தெழுந்து அழியா உடலைப் பெறுவோம். அந்நாளில் நமது ஆன்மாவும் உடலும் மீண்டும் இணையும். நீதிமான்கள் (கடவுளின் சித்தத்திற்கேற்ப வாழ்ந்தவர்கள்) இவ்வுலக வாழ்விற்குப்பின் நித்திய பேரின்பத்தை (மோட்சத்தை) சுதந்தரித்துக் கொள்வார்கள். தீயவர்கள் தண்டனைக்கும் அழியா நெருப்பிற்கும் (நரகத்திற்கும்) செல்வார்கள்.

2. உலகம் முடியும் நாளில் பொதுத் தீர்வையின் போது உத்தரிக்கிற இடத்தில் இருக்கின்றவர்கள் அனைவரும் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்தில் இறைத் தந்தையோடு அமர்வர். அதன் பின் உத்தரிக்கின்ற இடம் என்ற ஒரு நிலை இல்லாமல் போகும்.

ஆமென்

அப்படியே ஆகட்டும். (அல்லது) அதை நான் ஏற்றுக்கொள்கிறேன், நம்புகிறேன்.

மேலே தரப்பட்ட விசுவாசப் பிரமாண விளக்கமானது கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வ வெளியீடான "கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி" (Catechism of the Catholic Church) என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின் சுருக்கமாகும்.

Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Designed by DB Media