News Image

மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதிக்குச் சான்று பகருமாறு கிரேக்க மெல்கைட் திருஅவைக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை!

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

போர், வன்முறை மற்றும் நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் சான்றுகளாக உருவாக கிரேக்க மெல்கைட் திருஅவைக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் 10, சனிக்கிழமையன்று, அந்தியோக் கிரேக்க மெல்கைட் திருஅவையின் ஆயர்கள் பேரவை உறுப்பினர்களைச் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இயேசுவைப் பின்தொடர்பவர்கள் முதன்முதலில் அந்தியோக்கில் தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று எடுத்துக்கா ட்டியதுடன் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்தல், கல்வி மற்றும் நலவாழ்வு வழங்குதல், மற்றும் துன்பப்படுபவர்களுடன் உடனிருத்தல் உள்ளிட்ட உறுதியான அன்பின் செயல்கள் மூலம் கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்துமாறு இறைமக்களை வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் குறிப்பாக சிரியா, லெபனோன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவ சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அங்கீகரித்த திருத்தந்தை, முழு கத்தோலிக்கத் திருஅவையின் ஒற்றுமையையும் தோழமையையும் வெளிப்படுத்தியதுடன், பாதுகாப்பின்மை, துன்புறுத்தல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவை பாதுகாப்பையும் வேலைவாய்ப்பையும் தேடிப் பல இறைமக்கள் இடம்பெயர கட்டாயப்படுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அதிகாரத்தை விட சேவைக்கும், தனிப்பட்ட இலாபத்தை விட வெளிப்படைத்தன்மைக்கும், தனிப்பட்ட வெற்றியை விட மேய்ப்புப் பணிக்கும் திருஅவை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஊக்குவித்த திருத்தந்தை, மேலும் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் அன்பிலும் இளைஞர்களை உருவாக்க முன்வருமாறு அருள்பணியாளர்களை வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் கத்தோலிக்கக் கல்விக்கு ஆதரவளிப்பதில் திருப்பீடம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை, கிழக்கத்திய திருஅவைகளுக்கான திருப்பீடத் துறையின் வழியாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், மாணவர்களின் பள்ளி மற்றும் பல்கலைக்கழகக் கட்டணங்களைச் செலுத்த உதவுகின்றன என்று தெரிவித்ததுடன் இதன் மூலம், கிறிஸ்தவக் குடும்பங்கள் அப்பகுதியில் தொடர்ந்து வாழ்வதோடு, தங்களது சமூகங்களையும் நிலைநிறுத்த முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

இறுதியாக துன்பங்களுக்கு மத்தியிலும் வெளிப்படும் அன்பின் செயல்கள், நற்செய்திக்குச் சிறந்த சான்றாகத் திகழ்வதோடு, உண்மையான அமைதியை ஊக்குவிக்கவும் உதவும் என்று வலியுறுத்தி திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.

முந்தைய அடுத்தது