News

உக்ரைன் சென்றது திருத்தந்தை வழங்கிய மருத்துவ அவசர ஊர்தி

போரினால் பெரும் துன்பங்களை அடைந்துவரும் உக்ரேனிய மக்களுக்குத் தனது நெருக்கம், ஆதரவு மற்றும் உதவி ஆகியவற்றின் உறுதியான அடையாளமாக, Lviv நகருக்குத் திருத்தந்தை வழங்கிய மருத்துவ அவசர ஊர்தி ஒன்றைக் கொண்டு சென்றார், திருத்தந்தையின் தர்மச்செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski.

உக்ரைனுக்குத் திருத்தந்தை கொடையாக வழங்கிய இந்த மருத்துவ அவசர ஊர்தியை அவரின் சார்பாக ஒப்படைப்பது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்று கூறிய கர்தினால் Krajewski அவர்கள், மனித உயிர்களைக் காப்பாற்றப் பயன்படும் இந்த ஊர்தி ஒரு குறியீட்டு மதிப்பைப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

திருத்தந்தை எப்போதும் உறவு பாலங்களைக் கட்டுபவர், அமைதியைக் கொண்டு வருபவர் என்றும், இந்த மருத்துவ அவசர ஊர்தி, குறிப்பாகத் துன்பப்படும் மக்களை அரவணைக்கும் திருத்தந்தையின் அடையாளமாக உள்ளது என்றும் கூறிய கர்தினால் Krajewski, “நான் உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறேன், நான் உங்களுடன் துயரப்படுகிறேன், மிகுந்த சிரமத்தில் இருக்கும் இந்த நாட்டிற்கு அமைதியைக் கேட்கிறேன், அதற்காக இறைஞ்சுகிறேன்” என்று கூறும் திருத்தந்தையின் அடையாளமாகவே இந்த ஊர்தி உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை வழங்கிய இந்த மருத்துவ அவசர ஊர்தியைப் பெற்றுக்கொண்ட உக்ரேனிய அதிகாரிகளில் ஒருவர், திருத்தந்தையின் அன்பிற்கும் செபத்திற்கும் நிறைந்த உள்ளத்துடன் நன்றி தெரிவித்ததுடன், இவ்வூர்தி புலம்பெயர்ந்து வரும் மக்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது என்று கூறியதாகவும் தெரிவித்தார் கர்தினால் Krajewski.

உக்ரைனில் போர் தொடங்கிய பிறகு திருத்தந்தையின் நெருக்கத்தையும், ஆதரவையும் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டிற்கு கர்தினால் Krajewski மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும். அவர், மார்ச் 6 முதல் 12 வரை Rivne, Zhovkva மற்றும் பிரச்சனைகளுக்குரிய சில இடங்களுக்கும் சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.

முந்தைய அடுத்தது