News

திருஅவை, அனைவரும் உடன்பிறந்தோராக வாழ்கின்ற ஒரு குடும்பம்

திருஅவை, ஒரே இறைத்தந்தையோடு அனைவரும் சகோதரர், சகோதரிகளாக வாழ்கின்ற ஒரு குடும்பம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 19, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

“இயேசுவை சகோதரராக நமக்குத் தந்துள்ள இறைத்தந்தையோடு அனைவரும் சகோதரர், சகோதரிகளாக வாழ்கின்ற ஒரு குடும்பமாகிய திருஅவை, அவர், உடன்பிறப்பு உணர்வை எவ்வளவு அன்புகூர்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றது. உண்மையில், அனைத்து மனித சமுதாயமும், ஒரே உலகளாவிய குடும்பமாக மாறவேண்டுமென்று அவர் விரும்புகிறார்” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டரில் எழுதியுள்ளார்.

அனைவரும் உடன்பிறந்தோர் (#FrattelliTutti) என்ற தனது திருமடலை மையப்படுத்தி, இச்சனிக்கிழமையன்று இவ்வாறு தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள திருத்தந்தை, கடவுள் மற்றும், அயலவர் மீதுள்ள அன்பு, விண்ணகம் செல்வதற்கு கடவுட்சீட்டு என்று, மற்றொரு டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

“கடவுள் மற்றும், அயலவர் மீதுள்ள அன்பு, விண்ணகம் செல்வதற்கு கடவுட்சீட்டு. நம் இவ்வுலக உடைமைகள், சிதறுண்டிருக்கும் தூசியே. ஆனால், நம் குடும்பங்களில், பணியில், திருஅவையில், மற்றும், உலகில் நாம் பகிர்ந்துகொள்ளும் அன்பே நம்மைக் காப்பாற்றுகின்றது, இது என்றென்றும் நிலைத்திருக்கும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாகியுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Fratelli tutti அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தலைப்பில், தனது மூன்றாவது திருமடலை, 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி இத்தாலியின் அசிசி நகரில், புனித பிரான்சிசின் கல்லறையில் கையெழுத்திட்டார்

இன்னும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனம், வேளாண் வளர்ச்சி பன்னாட்டு நிதியகம், PAM அங்காடி (FAO, IFAD, PAM) ஆகியவற்றுக்கு திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் அருள்பணி Fernando Chica Arellanos, இஸ்தான்புல் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Massimiliano Palinuro, திருப்பீடத்திற்கு இத்தாலி நாட்டு புதிய தூதர் Francesco Di Nitto, தென் அமெரிக்க தலத்திருஅவையின் பிரதிநிதிகள் போன்றோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 19, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

முந்தைய அடுத்தது