நாடுகள் போரின் பேரச்சத்தை தவிர்க்க திருப்பீடம் அழைப்பு
உக்ரைன் நாட்டின் மீது இரஷ்யா மேற்கொண்டுவரும் ஆக்ரமிப்பு அச்சுறுத்தலால், கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்துவரும் பதட்டநிலைகளை முடிவுக்குக் கொணர கலந்துரையாடல் அவசியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், OSCE எனப்படும், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அவை நடத்திய கூட்டத்தில் வலியுறுத்திக் கூறினார்.
OSCE அவையில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள், அந்த அவையின் 1355வது கூட்டத்தில், பிப்ரவரி 17 இவ்வியாழனன்று உரையாற்றியபோது, உக்ரைன் மற்றும், அந்நாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் நிலவிவரும் பதட்டநிலைகள் குறித்த திருப்பீடத்தின் கவலையை எடுத்துரைத்தார்.
அண்மை வாரங்களில், உக்ரைன் நாடு இரஷ்யாவின் ஆக்ரமிப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டதைக் குறிப்பிட்டுப் பேசிய அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், போர், முட்டாள்தனமானது எனவும், அதனால் துன்புறுவோர் அதனைத் தொடங்கியவர்கள் அல்ல, மாறாக, அப்பாவி குடிமக்களே எனவும் அனைவருக்கும் நினைவுபடுத்தினார்.
போரின் அச்சுறுத்தலுக்கு விடப்படும் எவ்வித சிறு குறிப்பும் நிறுத்தப்படவேண்டும் என்றும், ஆண்களும், பெண்களும், சிறாரும் போரின் பேரச்சத்திலிருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்றும், திருப்பீடம் விண்ணப்பிக்கின்றது என்று அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், OSCE அவையில் கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் நாட்டில் அமைதி நிலவுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து விண்ணப்பித்து வருவதையும், கடந்த சனவரி மாதம் 23ம் தேதியன்று உக்ரைன் நாட்டிற்காக ஒரு நாள் இறைவேண்டல் மற்றும், நோன்புக்கு திருத்தந்தை அழைப்புவிடுத்ததையும், அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் சுட்டிக்காட்டிப் பேசினார்.
உக்ரைன் எல்லையில் நிலவும் பதட்டநிலைகளைக் களைவதற்கு உலகளாவிய பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு கிடைக்கும் எவ்வித வாய்ப்பையும் நழுவவிடக் கூடாது என்றுரைத்துள்ள திருத்தந்தையின் சொற்களையும் குறிப்பிட்டு, அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், தன் உரையை நிறைவுசெய்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லையில் இருந்து, படைகள் அகற்றப்படும் என இரஷ்யா தெரிவித்ததற்கு மாறாக, அந்நாடு கூடுதலாக, 7,000 இராணுவ வீரர்களை அனுப்பியதால், மீண்டும் அப்பகுதியில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் எல்லையில், இரஷ்யா ஏற்கனவே ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரை நிறுத்தியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.