இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் திருத்தந்தை
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பாக அண்மை நாட்களில் சூறாவளி, மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மடகாஸ்கர், மற்றும் பிரேசில் மக்களுக்காக, ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் மக்களோடு இணைந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 20ம் தேதி புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கியபின், இயற்கை பேரிடர்களால் அண்மையில் இறந்தவர்களுக்காகச் செபித்ததுடன், இறந்தவர்களின் குடும்பத்தினருடன் தன் நெருக்கத்தையும், பாதிக்கப்பட்டோருக்கு உதவுபவர்களுக்கு தன் ஊக்கத்தையும் வழங்கினார்.
பல்வேறு சூறாவளிகளால் அண்மைக் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மடகாஸ்கர் குறித்தும், வெள்ளப்பெருக்காலும் நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் குறித்தும் அனுதாபங்களுடன்கூடிய ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறன்று, இத்தாலியில் நலப்பணியாளர் தேசிய நாள் சிறப்பிக்கப்பட்டத்தையும் நினைவூட்டி, அனைத்து நலப்பணியாளர்களுக்கும் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நோயுற்றோருக்கு அருகில் நின்று, அவர்களுக்கு குணமளிப்பதிலும், அவர்களுக்கு நல்லுணர்வுகளை வழங்குவதிலும் என, பல்வேறு வழிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர் மற்றும் தன்னார்வலர்களை இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய நலப்பணியாளர்கள் அனைவருக்கும் கைத்தட்டலுடன் நன்றியை வெளியிடுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மடகாஸ்கரில் வீசிய டுமாக்கோ புயலால் குறைந்தபட்சம் 14 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 4323 பேர் தங்கள் குடியிருப்புக்களை இழந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, இம்மாதத் துவக்கத்தில் மடகாஸ்கரில் இடம்பெற்ற புயலால் 124 பேர் இறந்திருக்க, மேலும் ஒரு புயலால் அந்நாடு இந்நாட்களில் மீண்டும் தாக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் Petropolis பகுதியில் இடம்பெற்றுவரும் கனமழையால் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த நூறாண்டுகளிலேயே மிகப்பெரிய அளவில் பிரேசிலில் பெய்துவரும் கனமழையால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.