News

அக்டோபர் 10, உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பம்

ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கென உலக அளவில் இடம்பெறும் முதல் கட்ட தயாரிப்பு நிகழ்வை, இம்மாதம் 10ம் தேதி ஞாயிறன்று திருப்பலியோடு அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு அக்டோபர் 10ம் தேதி ஞாயிறு உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், விசுவாசிகளின் பங்கேற்புடன், திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியோடு இந்த முதல் கட்ட தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 09, சனிக்கிழமையன்று, வத்திக்கானின் உலக ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில், உலக ஆயர்கள் மாமன்றத்தின், ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பு பற்றி பல்வேறு மொழிக் குழுக்களில் தியானங்கள், சான்றுபகர்தல், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும்.

அக்டோபர் 09, சனிக்கிழமையன்று இடம்பெறும் இந்நிகழ்வுகளில், ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகள், உரோமைத் தலைமையகத்தின் உறுப்பினர்கள், துறவு சபைகள், இளையோர் இயக்கங்கள், இளையோர் அவைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்துகொள்வார்கள் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்நிகழ்வின் முதல் பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என்றும், Burkina Faso நாட்டைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணி Paul Béré அவர்களும், இஸ்பானிய இறையியலாளர் Cristina Inogés Sanz அவர்களும் வழங்கும் தியானச் சிந்தனையோடு அந்நிகழ்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் திருத்தந்தை உரை வழங்குவார். அதற்குப்பின், உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத் தொடர்பாளர் கர்தினால் Jean Claude Hollerich அவர்கள், அனைவரையும் வரவேற்றுப் பேசுவார். தென் ஆப்ரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடு, கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்நதவர்கள் தங்கள் சாட்சியங்களை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அடுத்தது