கர்தினால் dos Santosன் ஆன்மா நிறையமைதியடைய செபம்
மொசாம்பிக் நாட்டின் Maputo உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Alexandre José Maria dos Santos அவர்கள், செப்டம்பர் 29, இப்புதனன்று இறைபதம் சேர்ந்துள்ளதையடுத்து, அந்நாட்டு மக்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Maputo உயர்மறைமாவட்டத்தின் இப்போதைய பேராயர் Francisco Chimoio அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், கர்தினால் dos Santos அவர்கள், தலத்திருஅவைக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றி கூறியுள்ளதோடு, அவரது ஆன்மா நிறையமைதி அடைய இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ளார்.
கர்தினால் dos Santos
பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த கர்தினால் dos Santos அவர்கள், செப்டம்பர் 29, இப்புதன் மாலையில், தன் 97வது வயதில், இறைபதம் சேர்ந்தார். மொசாம்பிக் நாடு, உள்நாட்டுப் போர், மற்றும், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில், இவர், மணிக்கணக்கான அயராது மக்கள் பணியாற்றியவர். உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தபோது, அமைதிக்காகக் உழைத்த இவர், மொசாம்பிக் காரித்தாஸ் அமைப்பையும் உருவாக்கியவர். இவரின் ஆதரவோடு மப்புத்தோ நகரில், மொசாம்பிக் நாட்டின் புனித தாமஸ் São Tomás பல்கலைக்கழகமும் துவக்கப்பட்டது.
Angola, Cabo Verde, Guinea Bissau, Sao Tomé மற்றும் Principe ஆகிய போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் காலனி நாடுகளின் திருஅவை சமுதாயங்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்க தன்னை அர்ப்பணித்திருந்த கர்தினால் dos Santos அவர்கள், வறியோர், புலம்பெயர்ந்தோர், வறட்சியால் பாதிக்கப்பட்டோர் போன்ற மக்களுக்கு உதவும் திட்டங்களை ஊக்குவித்தவர்.
ஆப்ரிக்க நாடாகிய மொசாம்பிக்கின் Zavala என்ற ஊரில் 1924ம் ஆண்டு பிறந்த கர்தினால் dos Santos அவர்கள், 1947ம் ஆண்டில் பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்தார். போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் இறையியல் கல்வியை முடித்த இவர், 1953ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1974ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, மொசாம்பிக் நாடு, போர்த்துக்கல் நாட்டிடமிருந்து சுதந்திரம் அடைந்தபின்னர், 1975ம் ஆண்டில் கர்தினால் dos Santos அவர்கள், மப்புத்தோ உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டு, 2003ம் ஆண்டுவரை அப்பணியை ஆற்றினார்.
மொசாம்பிக் நாட்டு இளம் பெண்களுக்கென்று, 1981ம் ஆண்டில் "Franciscanas de Nossa Senhora de Mae de Africa" என்ற சபையைத் துவக்கிய இவர், மொசாம்பிக் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட முதல் அருள்பணியாளர், முதல் ஆயர் மற்றும் முதல் கர்தினால் ஆவார்.1988ம் ஆண்டில் கர்தினாலாக இவர் உயர்த்தப்பட்டார். இவரது அடக்கச்சடங்கு திருப்பலி, அக்டோபர் 7, வருகிற வியாழனன்று நடைபெறும்.
மொசாம்பிக் நாட்டு கர்தினால் dos Santos அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 216 ஆகவும், இவர்களில் புதிய திருத்தந்தை ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்களின் எண்ணிக்கை 121 ஆகவும் மாறியுள்ளன.