News

இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

"சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல். நம் பொதுவான இல்லத்தின் பராமரிப்பு மற்றும் படைப்பின் பாதுகாப்பு" என்ற பெயரில், உரோம் நகரின் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய பாடத்திட்டத்தை, அக்டோபர் 7, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைத்தார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பார்த்தலோமேயு, யுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குனர் Audrey Azoulay, மற்றும், இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் வேந்தர், கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தை, திருத்தந்தை தலைமையேற்று நடத்தினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் Azoulay அவர்கள், சுற்றுச்சூழலைக் குறித்த விழிப்புணர்வை இளையோரின் சிந்தனைகளில் ஆழப்பதிப்பதற்கு பல்கலைக் கழகங்கள் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளில் யுனெஸ்கோ முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதியளித்தார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பார்த்தலோமேயு அவர்கள் உரையாற்றுகையில், பேதுருவின் தலைமைப்பீடமும், அந்திரேயாவின் தலைமைப்பீடமும் இணைந்து, சுற்றுச்சூழல் குறித்த விடயங்களில், மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வண்ணம் உழைத்து வருவது குறித்து தன் மகிழ்வைப் பதிவுசெய்தார்.

இறுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையில், ஒவ்வொருவரும் தனக்கு என்ன வேண்டும் என்ற சுயநல நிலையிலிருந்து விடுதலையடைந்து, படைப்பைப் பொருத்தவரை, இறைவன் என்ன விழைகிறார் என்பதைக் கண்டுணர அழைக்கப்பட்டுள்ளோம் என்று முதுபெரும் தந்தை பார்ததலொமேயு அவர்கள் கூறியதை, நினைவுகூர்ந்தார்.

இவ்வுரைகளின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு மற்றும் யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் Audrey Azoulay, ஆகிய மூவரும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி, இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் துவக்கப்படும் புதிய பாடத்திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் வேந்தர், கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்களிடம் ஒப்படைத்தார்.

முந்தைய அடுத்தது