Banner Image

08-11-2026
பொதுக்காலம் 32 வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
இன்று நாம் பொதுக்காலம் 32வது ஞாயிறை கொண்டாடுகிறோம். உலக அறிவு வரையறைக்குட்பட்டது. மெய்யறிவு எல்லையற்றது. இவ்வேளையில் நாம் இன்றைய நற்செய்தியில் வரும் அறிவிலிகளைப் போல இல்லாது முன்மதியுள்ளவர்களைப்போல் இருக்க வேண்டும். மானிட மகன் வரும்பொழுது தயாராக இருப்போர் அழைத்துக்கொள்ளப்படுவர். எனவே நாம் அனைவரும் எப்பொழுதும் முன்மதியுடைய தோழிகளைப்போல் ஞானமுள்ளோராய் வாழ வேண்டி இத்திருப்பலியில் தொடர்ந்து பங்கெடுப்போம்.
முதல் வாசகம் – சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16
ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.
ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 63: 1. 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1b)
பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

6 நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். 7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18
இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.
சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
மத் 24: 42a, 44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
ஆயனே எம் இறைவா!

எம் தாய் திருச்சபையை வழி நடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவறத்தார் ஆகிய அனைவரும் பெரிய குருவாகிய இயேசுவின் வழி நடந்து மக்களுக்காக உழைத்திட வேண்டிய ஞானத்தைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
வழிகாட்டும் எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் தங்களது கடமைகளை சரிவர செய்து மக்களுக்கு ஏற்ற தலைவர்களாக உண்மை வழியில் வாழவேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
ஆசிரியரே எம் இறைவா!

எங்கள் ஊரில் உள்ள அனைவரும் உம்மை அறிந்து, என்றும் உண்மை உள்ளவர்களாகவும் உம் வழி நடப்பவர்களாகவும் வாழ வேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
மருத்துவரே எம் இறைவா!

எம் ஊரில் உடல் நோயினாலும் மனநோயினாலும் வாடுவோரை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாக வாழ வேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
''மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர்
தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
அவர்களுள் ஐந்துபேர் அறிவிலிகள்; ஐந்துபேர் முன்மதி உடையவர்கள்'' (மத்தேயு 25:1-2)
இறையாட்சி நம்மிடையே வந்துகொண்டிருப்பதை நாம் அடையாளம் கண்டு, அதில் பங்கேற்றிட எப்போதும் ''விழிப்பாயிருக்க வேண்டும்'' என்னும் கருத்தை வலியுறுத்த இயேசு கூறிய கதை ''பத்துத் தோழியர் உவமை'' ஆகும் (மத் 25:13). இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இந்த உவமையின் பொருளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அக்காலத் திருமணப் பழக்கம் பற்றி நாம் அறிவது தேவை. இந்திய நாட்டின் பல பகுதிகளில் இன்றும்கூட திருமணம் என்றால் இரு தனி ஆள்களுக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தம் என்றில்லாமல் இரு குடும்பங்களுக்கிடையே நிகழ்கின்ற உடன்பாடு என்றே உள்ளது. அதுபோலவே, இயேசு வாழ்ந்த காலத்திலும் பெற்றோரே தங்கள் பிள்ளைக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது வழக்கம். திருமண நிகழ்வு இரு கட்டங்களாக அமைந்தது. முதல் கட்டம் திருமண ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. மணமகனின் தந்தை மணமகளின் தந்தையின் வீட்டுக்குச் சென்று, மணமகனிடமிருந்து திருமண ஒப்பந்த ஏட்டையும் வரதட்சணையையும் பெற்றுக்கொள்வார். மணமகள் தன் தந்தையின் வீட்டிலேயே ஏறத்தாழ ஒரு வருடம் தொடர்ந்து தங்கியிருந்த பின்னரே மணமகனின் வீட்டுக்குச் சென்று தாம்பத்திய வாழ்க்கை நடத்துவார். இயேசு கூறிய உவமையில் வருகின்ற பத்துத் தோழியர் மணமகனின் வருகைக்குக் காத்திருக்கின்றனர். அவர் மணப்பெண்ணின் வீட்டில் தன் வருங்கால மாமனாரைச் சந்தித்து, அவரோடு திருமண ஏற்பாட்டுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். அது நன்முறையில் முடிந்ததும், ''இதோ மணமகன் வருகிறார்'' என்று அறிவிக்கப்படுகிறது. திருமண ஊர்வலம் புறப்பட்டு, மணமக்களோடு மணமகனின் வீட்டை நோக்கிச் செல்வதற்குத் தயாராகிறது. அங்கே திருமணக் கொண்டாட்டங்கள் நிகழும். ஆனால் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்த தோழியர் பத்துப்பேரில் ஐவர் மட்டுமே தயாராக உள்ளனர். மற்ற ஐவரும் போதிய எண்ணெய் இல்லாததால் தங்கள் விளக்குகளை ஏற்ற இயலாதிருக்கிறார்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற நேரம் பார்த்து மணமகனும் வெளியே வருகிறார். ஊர்வலமும் புறப்படுகிறது.



ஆயத்தமாயிருந்தவர்கள் மட்டுமே திருமண மண்டபத்துக்குள் சென்று கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். பிந்தி வந்தவர்கள் ஏமாற்றத்தோடு வெளியே நிற்கிறார்கள். இந்த உவமை வழியாக இயேசு இரு கருத்துக்களை உணர்த்துகிறார். முதலில் ''விளக்கு'' என்பது நாம் செய்கின்ற நற்செயல்களைக் குறிக்கிறது. ''உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் புகழ்வார்கள்'' (மத் 5:16) என இயேசு கூறுகிறார். மேலும் யார் அறிவாளி யார் அறிவிலி என்பதை இயேசு ஏற்கெனவே விளக்கியிருந்தார். அதாவது, முன்மதியோடு உறுதியான அடித்தளம் இட்டு வீடுகட்டுபவர் அறிவாளி; ஆனால் உறுதியற்ற மணல்மீது வீடுகட்டுபவர் அறிவிலி (மத் 7:24-27). அதுபோல, அறிவோடு செயல்பட்ட தோழியர் இயேசுவின் சொற்களைக் கேட்டு அவற்றை வாழ்வில் கடைப்பிடிப்போருக்கு ஒப்பாவர். அறிவிலிகளாகச் செயல்பட்ட தோழியரோ நற்செயல்கள் புரியாதோருக்கு ஒப்பாவர். ஒருவர் புரிகின்ற நற்செயலை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள இயலாது. ஒவ்வொருவரும் கடவுள் முன்னிலையில் பொறுப்போடு செயல்பட்டு, அவர் சொற்படி நடக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கை ஒளிர்கின்ற விளக்காகத் துலங்கிட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media