Banner Image

09-11-2026
பொதுக்காலம் 32 வாரம் திங்கட்கிழமை

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா
முதல் வாசகம் – இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2,8-9,12
நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.
அந்நாள்களில் ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார்.

இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது. அவர் என்னிடம் உரைத்தது: ``இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பல வகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.''

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 46: 1-2,3c. 4-5. 7-8 (பல்லவி: 4)
பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், 3c எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 9-11, 16-17
நீங்கள் கடவுளுடைய கோவில்.
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.
நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
2 குறி 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22
அக்காலத்தில், யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ``இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், ``உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, ``இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், ``இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். அப்போது யூதர்கள், ``இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள்.

ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர்
தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
அவர்களுள் ஐந்துபேர் அறிவிலிகள்; ஐந்துபேர் முன்மதி உடையவர்கள்'' (மத்தேயு 25:1-2)
இறையாட்சி நம்மிடையே வந்துகொண்டிருப்பதை நாம் அடையாளம் கண்டு, அதில் பங்கேற்றிட எப்போதும் ''விழிப்பாயிருக்க வேண்டும்'' என்னும் கருத்தை வலியுறுத்த இயேசு கூறிய கதை ''பத்துத் தோழியர் உவமை'' ஆகும் (மத் 25:13). இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இந்த உவமையின் பொருளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அக்காலத் திருமணப் பழக்கம் பற்றி நாம் அறிவது தேவை. இந்திய நாட்டின் பல பகுதிகளில் இன்றும்கூட திருமணம் என்றால் இரு தனி ஆள்களுக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தம் என்றில்லாமல் இரு குடும்பங்களுக்கிடையே நிகழ்கின்ற உடன்பாடு என்றே உள்ளது. அதுபோலவே, இயேசு வாழ்ந்த காலத்திலும் பெற்றோரே தங்கள் பிள்ளைக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது வழக்கம். திருமண நிகழ்வு இரு கட்டங்களாக அமைந்தது. முதல் கட்டம் திருமண ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. மணமகனின் தந்தை மணமகளின் தந்தையின் வீட்டுக்குச் சென்று, மணமகனிடமிருந்து திருமண ஒப்பந்த ஏட்டையும் வரதட்சணையையும் பெற்றுக்கொள்வார். மணமகள் தன் தந்தையின் வீட்டிலேயே ஏறத்தாழ ஒரு வருடம் தொடர்ந்து தங்கியிருந்த பின்னரே மணமகனின் வீட்டுக்குச் சென்று தாம்பத்திய வாழ்க்கை நடத்துவார். இயேசு கூறிய உவமையில் வருகின்ற பத்துத் தோழியர் மணமகனின் வருகைக்குக் காத்திருக்கின்றனர். அவர் மணப்பெண்ணின் வீட்டில் தன் வருங்கால மாமனாரைச் சந்தித்து, அவரோடு திருமண ஏற்பாட்டுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். அது நன்முறையில் முடிந்ததும், ''இதோ மணமகன் வருகிறார்'' என்று அறிவிக்கப்படுகிறது. திருமண ஊர்வலம் புறப்பட்டு, மணமக்களோடு மணமகனின் வீட்டை நோக்கிச் செல்வதற்குத் தயாராகிறது. அங்கே திருமணக் கொண்டாட்டங்கள் நிகழும். ஆனால் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்த தோழியர் பத்துப்பேரில் ஐவர் மட்டுமே தயாராக உள்ளனர். மற்ற ஐவரும் போதிய எண்ணெய் இல்லாததால் தங்கள் விளக்குகளை ஏற்ற இயலாதிருக்கிறார்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற நேரம் பார்த்து மணமகனும் வெளியே வருகிறார். ஊர்வலமும் புறப்படுகிறது.



ஆயத்தமாயிருந்தவர்கள் மட்டுமே திருமண மண்டபத்துக்குள் சென்று கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். பிந்தி வந்தவர்கள் ஏமாற்றத்தோடு வெளியே நிற்கிறார்கள். இந்த உவமை வழியாக இயேசு இரு கருத்துக்களை உணர்த்துகிறார். முதலில் ''விளக்கு'' என்பது நாம் செய்கின்ற நற்செயல்களைக் குறிக்கிறது. ''உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் புகழ்வார்கள்'' (மத் 5:16) என இயேசு கூறுகிறார். மேலும் யார் அறிவாளி யார் அறிவிலி என்பதை இயேசு ஏற்கெனவே விளக்கியிருந்தார். அதாவது, முன்மதியோடு உறுதியான அடித்தளம் இட்டு வீடுகட்டுபவர் அறிவாளி; ஆனால் உறுதியற்ற மணல்மீது வீடுகட்டுபவர் அறிவிலி (மத் 7:24-27). அதுபோல, அறிவோடு செயல்பட்ட தோழியர் இயேசுவின் சொற்களைக் கேட்டு அவற்றை வாழ்வில் கடைப்பிடிப்போருக்கு ஒப்பாவர். அறிவிலிகளாகச் செயல்பட்ட தோழியரோ நற்செயல்கள் புரியாதோருக்கு ஒப்பாவர். ஒருவர் புரிகின்ற நற்செயலை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள இயலாது. ஒவ்வொருவரும் கடவுள் முன்னிலையில் பொறுப்போடு செயல்பட்டு, அவர் சொற்படி நடக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கை ஒளிர்கின்ற விளக்காகத் துலங்கிட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media