Banner Image

13-10-2026
பொதுக்காலம் 28 வாரம் செவ்வாய்க்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6
அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை. விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன்.

திருச்சட்டம் சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முயலும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய் விட்டீர்கள்; அருளை இழந்துவிட்டீர்கள். ஆனால் நாம் தூய ஆவியின் துணையால் நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம் என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம். கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்துகொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 119: 41,43. 44,45. 47,48 (பல்லவி: 41a)
பல்லவி: ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்.
41 ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்; உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக! 43 என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். பல்லவி

44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். 45 உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன். பல்லவி

47 உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன். 48 நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41
அக்காலத்தில் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.
ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: ``பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''ஆண்டவர், 'அறிவிலிகளே,...உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்.
அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்' என்றார்'' (லூக்கா 11:40-41)
உணவு அருந்துமுன் சட்டப்படி கைகழுவாத இயேசுவை லூக்கா ''ஆண்டவர்'' எனவும், சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயரை இயேசு ''அறிவிலிகளே'' எனவும் அழைப்பது நமக்கு முரண்பாடாகத் தோன்றலாம். ''அறிவிலி'' என்னும் சொல்லுக்கு விவிலியத்தில் ''தீயவர்'' என்றும் ''கடவுளை மறுப்பவர்'' என்றும் பொருளுண்டு (காண்க: நீமொ 6:12; திபா 14:1). மேலும் பரிசேயர்கள் பேராசை கொண்டு மக்களிடம் கொள்ளையடித்தார்கள் எனவும் இயேசு குற்றம் சாட்டுகிறார் (லூக் 39). இதற்கு மாற்று மருந்தாக இயேசு குறிப்பிடுவது ''தர்மம் கொடுத்தல்'' ஆகும் (லூக் 11:41). யூதர்கள் தர்மம் கொடுத்தலைச் சிறப்பான நற்செயலாகக் கருதினார்கள். நம்மை அணுகி வருகின்ற பிச்சைக்காரர்களுக்கு நாம் சில காசுகளைத் ''தர்மமாக''க் கொடுப்பது உண்மையான தர்மம் அல்ல. மாறாக, நாம் வாழ்கின்ற அநீதியான சமுதாயத்தில் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்னும் எண்ணத்தோடு நம்மிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதே உண்மையான ''தர்மம்''.



பரிசேயர் பிறரிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் ''தூய்மையடைவார்கள்'' என இயேசு குறிப்பிடுகிறார். தூய்மை என்பது வெளியிலிருந்து வருவதல்ல, மாறாக, உள்ளார்ந்த விதத்தில் மனமாற்றம் பெற்று, நம் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது (''தர்மம் கொடுத்தல்'') நாம் தூயவர்களாக மாறுவோம். சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் நாம் அடிப்படையான விதத்தில் மாற்றம் பெற வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, பிறரை அன்புசெய்வதில் நாங்கள் சிறந்தோங்கிட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media