Banner Image

14-10-2026
பொதுக்காலம் 28 வாரம் புதன்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25
கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவை உள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவு உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12a)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46
அக்காலத்தில் இயேசு கூறியது: ``ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது. ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.

ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.''
திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்'' என்றார். அதற்கு அவர், ``ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''ஆண்டவர், 'அறிவிலிகளே,...உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்.
அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்' என்றார்'' (லூக்கா 11:40-41)
உணவு அருந்துமுன் சட்டப்படி கைகழுவாத இயேசுவை லூக்கா ''ஆண்டவர்'' எனவும், சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயரை இயேசு ''அறிவிலிகளே'' எனவும் அழைப்பது நமக்கு முரண்பாடாகத் தோன்றலாம். ''அறிவிலி'' என்னும் சொல்லுக்கு விவிலியத்தில் ''தீயவர்'' என்றும் ''கடவுளை மறுப்பவர்'' என்றும் பொருளுண்டு (காண்க: நீமொ 6:12; திபா 14:1). மேலும் பரிசேயர்கள் பேராசை கொண்டு மக்களிடம் கொள்ளையடித்தார்கள் எனவும் இயேசு குற்றம் சாட்டுகிறார் (லூக் 39). இதற்கு மாற்று மருந்தாக இயேசு குறிப்பிடுவது ''தர்மம் கொடுத்தல்'' ஆகும் (லூக் 11:41). யூதர்கள் தர்மம் கொடுத்தலைச் சிறப்பான நற்செயலாகக் கருதினார்கள். நம்மை அணுகி வருகின்ற பிச்சைக்காரர்களுக்கு நாம் சில காசுகளைத் ''தர்மமாக''க் கொடுப்பது உண்மையான தர்மம் அல்ல. மாறாக, நாம் வாழ்கின்ற அநீதியான சமுதாயத்தில் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்னும் எண்ணத்தோடு நம்மிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதே உண்மையான ''தர்மம்''.



பரிசேயர் பிறரிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் ''தூய்மையடைவார்கள்'' என இயேசு குறிப்பிடுகிறார். தூய்மை என்பது வெளியிலிருந்து வருவதல்ல, மாறாக, உள்ளார்ந்த விதத்தில் மனமாற்றம் பெற்று, நம் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது (''தர்மம் கொடுத்தல்'') நாம் தூயவர்களாக மாறுவோம். சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் நாம் அடிப்படையான விதத்தில் மாற்றம் பெற வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, பிறரை அன்புசெய்வதில் நாங்கள் சிறந்தோங்கிட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media