Banner Image

12-10-2026
பொதுக்காலம் 28 வாரம் திங்கட்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 22-24, 26-27, 31 - 5: 1
நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள்.
சகோதரர் சகோதரிகளே, ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்; மற்றவன் உரிமைப் பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது. அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்; உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது.

மேலே உள்ள எருசலேமோ உரிமைப் பெண்; நமக்கு அன்னை. ஏனெனில், ``பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு! பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு! ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளை விட ஏராளமானவர்கள்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது.

ஆகவே சகோதரர் சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள். கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 113: 1-2. 3-4. 5a,6-7 (பல்லவி: 2a)
பல்லவி: ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக!
1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப்பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவதாக! பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி

5a நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்; 7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32
அக்காலத்தில், மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!”

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்...திருமணத்திற்கு வாருங்கள்'' (மத்தேயு 22:4)
கடவுளாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்னவென்பதை இயேசு பல உவமைகள் வழியாக விளக்கினார். இத்தகைய உவமைகளில் சிறப்பான ஒன்று ''திருமண விருந்து உவமை'' ஆகும். விருந்து என்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. அதிலும் விதவிதமான உணவுகளைப் பரிமாறி அறுசுவை உண்டி வழங்கி விருந்தினரை மகிழ்விப்பது சாலச் சிறந்ததாக எண்ணப்பட்டது. விவிலியத்திலும் விருந்து பற்றிய குறிப்புகள் பல உண்டு. கடவுள் மனிதருக்குத் தம் கொடைகளை வாரி வழங்குவது விருந்துக்கு ஒப்பிடப்பட்டது (காண்க: எசாயா 25:6; லூக்கா 5:29; 14:13; யோவான் 2:2; 1 கொரிந்தியர் 11:20). எனவே, கடவுளின் ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் சுவையான விருந்து வழங்கப்படும் என்று இயேசு போதித்தார். கடவுளின் அன்பில் நாம் திளைத்திருக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்திற்கும் இதயத்திற்கும் நிறைவை அளிக்கும். இவ்வாறு, கொடை வள்ளலாகச் செயல்படுகின்ற கடவுளின் அழைப்பைச் சிலர் ஏற்காமல் இருப்பதும் உண்டு. முதலில் அழைக்கப்பட்டவர்கள் இஸ்ரயேலர். அவர்களில் பலர் இயேசுவை மெசியாவாக ஏற்கத் தயங்கினர். ஆனால் பிற இனத்தார் பலர் கடவுளின் அழைப்பை ஏற்று, இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அழைப்பை ஏற்று இயேசுவைப் பின்செல்ல வருவோருக்கும் சில பொறுப்புகள் உண்டு. அழைப்புக்கு ஏற்ப நடக்காதவர்க்கு உருவகமாகத் ''திருமண ஆடையின்றி வந்தவர்'' (காண்க: மத்தேயு 22:11) குறிக்கப்படுகிறார்.




கடவுள் நமக்குத் தருகின்ற விருந்து நம் உடலை வளர்க்க உதவுகின்ற உணவு மட்டுமல்ல. மனிதரின் முழு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நாம் கடவுளிடமிருந்து கொடையாகவே பெற்றுக்கொள்கிறோம். கடவுள் அளிக்கும் விருந்து வெறும் பொருள்கள் மட்டுமல்ல. இயேசுவின் வழியாகக் கடவுள் நமக்குத் தம்மையே விருந்தாக அளித்துவிட்டார். இதையே நாம் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூர்கின்றோம். தம்மையே விருந்தாகத் தரும் கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும். நம்மையே விருந்தாகப் பிறருக்கு அளிக்க முன்வரவேண்டும். அப்போது நமக்காகக் கடவுள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிறைவுக் கால விருந்து நம்மை மகிழ்ச்சியால் நிரப்பும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள்கொடைகளை நன்றியோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media