Banner Image

07-10-2026
பொதுக்காலம் 27 வாரம் புதன்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-2, 7-14
அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து கைகொடுத்தனர்.
சகோதரர் சகோதரிகளே, பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன். நான் போகவேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டபடியால்தான் அங்குப் போனேன். பிற இனத்தார் நடுவில் நான் அறிவித்துவந்த நற்செய்தியைப் பற்றி அங்கே எடுத்துக் கூறினேன். செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன். நான் இப்போது செய்யும் பணியும் இதுவரை செய்த பணியும் பயனற்றுப் போகக் கூடாதே என்பதற் காகத்தான் இவ்வாறு செய்தேன்.
ஆனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே, பிற இனத்தாருக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். ஆம், யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார்.
அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கைகொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம்.

ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில் தான் நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன். ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன். அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்; ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.
மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்துகொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக்கூடக் கவர்ந்து விட்டது.

இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், ``நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?'' என்று கேட்டேன்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 117: 1. 2 (பல்லவி: மாற்கு 16: 15)
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
உரோ 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4
அக்காலத்தில், இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ``ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்'' என்றார்.

அவர் அவர்களிடம், ``நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
இவ்வாறு வேண்டுங்கள் !
இயேசுவின் சீடர்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்களுக்கு இறைவேண்டல் கற்றுக்கொடும் என்று கேட்டவுடன், மிக அருமையான இறை வேண்டலை இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இந்த வேண்டுதலில் தந்தையைப் புகழ்தல், அவர் விருப்பத்துக்கு நம்மைக் கையளித்தல், நம் தேவைகளுக்காக மன்றாடல், மன்னிப்புக் கோருதல் என முழுமையான செபத்தின் அனைத்துக் கூறுகளும் அமைந்துள்ளன. இந்த செபத்தை மட்டும் செபிப்பதோடு, நிறுத்திவிடாமல், இந்த செபத்தில் உள்ள அனைத்துக் கூறுகளையும் நம் செபங்களில் இணைத்துக்கொள்வோம். நாள்தோறும் தந்தை இறைவனைப் புகழ்ந்து, அவரது விருப்பத்தை நம் வாழ்வில் நிறைவேற்ற அருள்கோருவோம்.




இன்று செபமாலை அன்னையின் விழா. அன்னை நம்மை செபமும், தவமும் செய்ய அழைப்பு விடுக்கின்றார்கள். செபமாலை ஒரு வலிமையான செப ஆயுதம். அந்த ஆயுதத்தை நாம் கையில் தாங்கி, நாள்தோறும் செபிப்போம். செப வீரர்களாக வாழ்வோம்.

மன்றாட்டு:

செபிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியரான இயேசுவே, நீர் கற்றுத் தந்ததுபோல நாள்தோறும் நாங்கள் செபிக்க எங்களுக்கு செப ஆர்வத்தைத் தந்தருளும். நாங்கள் நாள்தோறும் தந்தையைப் போற்றவும், உமக்கு நன்றி கூறவும், தூய ஆவியில் மகிழவும், அன்னை மரியாவை வாழ்த்தவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media