Banner Image

06-10-2026
பொதுக்காலம் 27 வாரம் செவ்வாய்க்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-24
பிற இனத்தவர்க்கு நற்செய்தியை அறிவிக்குமாறு திருவுளங்கொண்டார்.
சகோதரர் சகோதரிகளே, பவுல் ஆகிய நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூத நெறியில் சிறந்து விளங்கினேன்.
ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன்.

அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி! பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.
ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன். ``ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்'' என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 139: 1-3. 13-14. 15 (பல்லவி: 24b)
பல்லவி: என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும் ஆண்டவரே.
1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி

15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ``ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, ``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக்
குத்தகைக்கு விடுவார்'' (மத்தேயு 21:41)
கடவுளின் திராட்சைத் தோட்டம் பரந்து விரிந்த இப்பாருலகைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இத்தோட்டத்தின் பொறுப்பு மனிதரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தைப் பண்படுத்தி, அதில் தரமான செடிகளை நட்டு, அவற்றிற்கு உரமிட்டு, நீர்ப்பாய்ச்சிக் கண்காணித்து, செழிப்பான விளைச்சலைக் கொணர்கின்ற பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவோர் தண்டனைக்கு உள்ளாவர்; ஆனால் பொறுப்பாகச் செயல்படுவோர் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவர். உலகத்தின் பொறுப்பு மனிதரிடம் உள்ளது என்றால் அவ்வுலகத்தை அவர்கள் தங்கள் விருப்பம்போல, மனம்போன போக்கில் சுறண்டலாம் என்று பொருளாகாது. இவ்வுலகத்தின் வளங்கள் எல்லைக்கு உட்பட்டவையே. நிலத்தின் கீழ் உள்ள தாதுப்பொருள்களும், எண்ணெய் வளங்களும் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கும் என நாம் நினைத்தலாகாது. அதுபோலவே, சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்ற நச்சுப் பொருள்களை நாம் உற்பத்திசெய்துகொண்டே இருக்கலாம் என நினைப்பதும் பொறுப்பற்ற சிந்தனையே.




இயற்கையைப் பொறுப்போடு பராமரிக்க வேண்டும் என்பதோடு மனித சமுதாயத்தையும் நாம் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பது தெளிவு. மனிதரிடையே நிலவ வேண்டிய உறவுகள் அன்பு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமே ஒழிய அதிகாரம் அடக்குமுறை போன்ற எதேச்சைப் போக்குக்கு அங்கே இடமில்லை. ''உரிய காலத்தில்'' கனி வழங்கும் பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளதால் அப்பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினால் நாம் திராட்சைத் தோட்ட உரிமையாளராகிய கடவுளின் ஆட்சியில் பங்கேற்கும் அருளைக் கடவுளே நமக்குத் தருவார் (மத் 21:43).

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media