Banner Image

08-10-2026
பொதுக்காலம் 27 வாரம் வியாழக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5
நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
அறிவிலிகளான கலாத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்: நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனித முயற்சியால் நிறைவு செய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத்தான் முடியுமா? உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடையே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68)
பல்லவி: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். பல்லவி

71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். 72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவுகூர்ந்தார். பல்லவி

74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13
அக்காலத்தில், இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: ``உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, `நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், `எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார்.

எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!''

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'' (லூக்கா 11:9)
கேட்டல், தேடல், தட்டுதல் ஆகிய செயல்களில் மனித ஈடுபாடு துலங்குவதைக் காணலாம். அந்த ஈடுபாடு தீவிரமாகும்போது அதன் விளைவாக மனிதர் கேட்டதைப் பெறுவார்கள்; தேடியதைக் கண்டடைவார்கள்; தட்டிய கதவு திறப்பதை உணர்வார்கள். கடவுளை நோக்கி நாம் வேண்டுதல் செய்யும்போது நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோம். எனவேதான் இறைவேண்டலுக்கு ''மன்றாட்டு'' என்னும் பெயரும் உண்டு. என்றாலும் இறைவேண்டலை இக்குறுகிய கண்ணோட்டத்தில் நாம் புரிதல் சரியல்ல. இங்கே நாம் இயேசுவின் முன்மாதிரியைக் கடைப்பிடிக்கலாம். அவர் தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டினார். பல மணி நேரம் இறைவேண்டலில் செலவிட்டார். தந்தையின் விருப்பம் யாதென உணர்ந்து அதைக் கடைப்பிடித்தலே இயேசுவின் வாழ்க்கைத் திட்டமாக இருந்தது. தம்மைப் போலத் தம் சீடரும் இறைவேண்டலில் ஈடுபட வேண்டும் என இயேசு கேட்டார்.




நாம் கேட்டது கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது இறைவேண்டலின் பண்பாக இருத்தலாகாது. நம் உள்ளத்தைக் கடவுளை நோக்கி எழுப்புதலே இறைவேண்டல். கடவுளின் முன்னிலையில் தாழ்ச்சியோடு நம்மை நிறுத்தும்போது அங்கே இறைவேண்டல் நிகழ்கிறது. நம் கவலைகளையும் கலக்கங்களையும் களைந்துவிட்டு, இறைப்பிரசன்னத்தின் அமைதியில் நாம் புகும்போது நம் இறைவேண்டல் அர்த்தமுள்ளதாகும். நம்மைக் கடவுளின் கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டால் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதைச் செயலாக்க நாம் முன்வருவோம். தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, அவருடைய உந்துதலுக்கு நம்மைப் பணிவுடன் கையளித்துச் செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். நம் இதயத்தில் தூய ஆவியின் சக்தியை நாம் உணர்ந்து, கடவுளிடத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்து, அவருடைய பாதுகாப்பில் நம்மைக் கையளிப்பதே உண்மையான இறைவேண்டல், நிறைவான மன்றாட்டு. அப்போது நாம் கேட்பதும் தேடுவதும் கடவுளின் புகழாக இருக்கும்; நாம் கடவுளின் இதயக் கதவுகளைத் தட்டும்போது அவர் நம்மைத் தம் இல்லத்தில் ஏற்று நம்மை அன்பின் அரவணைப்பில் பிணைத்திடுவார்; நாமும் இறையன்பு என்னும் ஆழ்கடலில் மூழ்கித் திளைத்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நோக்கி மன்றாடும்போது எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media