Banner Image

27-09-2026
பொதுக்காலம் 26 வாரம் ஞாயிற்றுக்கிழமை

முதல் வாசகம் – இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 25-28
பொல்லார் நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.
ஆண்டவர் கூறுவது: ‘தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.

பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 25: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 6a)
பல்லவி: ஆண்டவரே, உம் இரக்கத்தையும், பேரன்பையும் நினைந்தருளும்.
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். - பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

அல்லது குறுகிய வாசகம்


கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32
அக்காலத்தில், இயேசு கூறியது: “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர்.

இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை” என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்
சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28)
ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார். அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.



இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media