Banner Image

26-09-2026
பொதுக்காலம் 25 வாரம் சனிக்கிழமை

முதல் வாசகம் – சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9 -12: 8
கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.
ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. ``வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே'' என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை.

அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
2 திமொ 1: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43-45
அக்காலத்தில், இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார்.
அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்
சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28)
ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார். அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.



இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media