Banner Image

28-09-2026
பொதுக்காலம் 26 வாரம் திங்கட்கிழமை

முதல் வாசகம் – யோபு நூலிலிருந்து வாசகம் 1: 6-22
ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!
ஒரு நாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்து நின்றான். ஆண்டவர் சாத்தானிடம், ``எங்கிருந்து வருகிறாய்?'' என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், ``உலகைச் சுற்றி உலவி வருகிறேன்'' என்றான். ஆண்டவர் சாத்தானிடம், ``என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை'' என்றார்.

மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம், ``ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்'' என்றான்.
ஆண்டவர் சாத்தானிடம், ``இதோ! அவனுக்கு உரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே'' என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான். ஒரு நாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, ``எருதுகள் உழுது கொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்'' என்றான். இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, ``கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்து விட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்'' என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, ``கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்'' என்றான். இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, ``உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்'' என்றான்.
யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்; தம் தலையை மழித்துக் கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, ``என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!'' என்றார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 17: 1. 2-3. 6-7 (பல்லவி: 6cd)
பல்லவி: ஆண்டவரே, உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.
1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும். 3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். பல்லவி

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். 7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50
அக்காலத்தில், தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், ``இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்'' என்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார். இயேசு அவரை நோக்கி, ``தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்'' என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்
சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28)
ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார். அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.



இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media