Banner Image

18-09-2026
பொதுக்காலம் 24 வாரம் வெள்ளிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 12-20
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே.
சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்? இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப் படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச் சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை, கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா?

ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப் படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்.
அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும் விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம். ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 17: 1. 6-7. 8,15 (பல்லவி: 15b)
பல்லவி: விழித்தெழும்போது, உம் உருவம் கண்டு நிறைவு பெறுவேன் ஆண்டவரே.
1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். 7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3
அக்காலத்தில் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் (பாவியான பெண்) அழுதுகொண்டே நின்றார்;
அவருடைய காலகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து,
தொடர்;ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்'' (லூக்கா 7:38)
சீமோன் என்னும் பரிசேயரின் வீட்டில் இயேசு விருந்து உண்பதில் ஈடுபட்டிருக்கின்றார். அப்போது அங்கே அழையாத ஒரு ''விருந்தினர்'' வருகிறார். அது ஒரு பெண். அவருடைய பெயர் நமக்குத் தெரியாது. அப்பெண் எந்தவொரு வார்த்தையும் பேசவுமில்லை. ஆனால் அவர் செய்த செயல்களை லூக்கா துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார். அக்கால வழக்கப்படி விருந்தினர் ஒரு மேசை முன் அமர்ந்து, தலையணையில் சாய்ந்த நிலையில் இடது முட்டுக்கையை ஊன்றிக் கொண்டு வலது கையால் உணவை எடுத்து அருந்துவர். அப்போது விருந்தினரின் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் அவர்களின் காலடிகள் பின்புறம் தெரியும். இதனால்தான் அந்தப் ''பாவி''யான பெண் (லூக் 7:37) ''இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் அழுதுகொண்டே நின்றார்'' (லூக் 7:38). தன் வாழ்க்கை பாழாகிப் போனதே என்னும் மனக் கவலையால் அவர் அழுதாரா? புதியதொரு வாழ்வைத் தொடங்கவேண்டும் எனத் தீர்மானித்து, தன் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதாரா? அவர் தேடி வந்தது இயேசுவை. உணவருந்திக் கொண்டிருந்த இயேசுவின் காலடிகளின் அருகில் நின்று அழுததால் கண்ணீர்த் துளிகள் அப்பாதங்களை நனைக்கின்றன. அப்பெண் தன் கூந்தலை அவிழ்க்கிறார். நனைந்த இயேசுவின் காலடிகளைத் தன் கூந்தலால் துடைக்கின்றார். இயேசுவின் பாதங்களை முத்தமிடுகிறார். தன் கையிலிருந்த படிகச் சிமிழிலிருந்து நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் கரிசனையோடு பூசுகின்றார் (காண்க: லூக் 7:38).



லூக்கா விவரிக்கின்ற இக்காட்சி உண்மையிலேயே வியப்புக்குரியதுதான். விருந்து நடக்கும்போது அங்கே நுழைவதற்கு அப்பெண்ணுக்கு அனுமதி இருக்கவில்லை. அதுவும் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயர் ஒருவர் ''பாவி''யான பெண்ணை வீட்டில் ஏற்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மேலும், ''இறைவாக்கினர்'' என மக்களால் கருதப்பட்ட இயேசுவிடம் சென்று அவருடைய காலடிகளை அப்பெண் தொட்டார் என்பது இன்னும் ஒரு பெரிய எல்லை மீறல். ஆனால் இயேசுவுக்கு அப்பெண்ணின் இதயத்தில் புதைந்துகிடந்த சிந்தனைகள் தெரியும். அப்பெண்ணின் உள்ளத்தில் எழுந்த அன்பும் நம்பிக்கையும் இயேசுவுக்கு வெளிச்சம். எனவே இயேசு பாவியான அப்பெண்ணைப் போற்றிப் பேசுகின்றார். இயேசுவை வீட்டுக்கு அழைத்துவிட்டு அவருக்கு உரிய மரியாதை காட்டாத சீமோன் எதையெல்லாம் செய்யாது விட்டாரோ அதையெல்லாம் அப்பெண் இயேசுவுக்குச் செய்கிறார். அதாவது, வீட்டுக்குள் நுழைவதற்கு முன் காலடிகளைக் கழுவுவது வழக்கம். அப்பெண் இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவித் தன் முடியால் துடைக்கிறார். விருந்தினரை முத்தமிட்டு வரவேற்க வேண்டும். ஆனால் அப்பெண்ணோ இயேசுவின் காலடிகளையே முத்தமிடுகிறார். விருந்தினரின் தலையில் எண்ணெய் பூச வேண்டும். ஆனால் அப்பெண்ணோ தன்னையே தாழ்த்திக்கொண்டு, இயேசுவின் காலடிகளைத் தொட்டு அவற்றில் நறுமணத் தைலம் பூசுகிறார். இவ்வாறு அவர் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இயேசு அப்பெண்ணின் அன்பையும் நம்பிக்கையையும் பாராட்டியதோடு அவருடைய பாவங்களையும் மன்னித்து, அவருக்கு மீட்பைபும் அமைதியையும் வாக்களிக்கின்றார் (லூக் 7:50). அன்பு இருக்கும் இடத்தில் கடவுளின் அருள் தோன்றும் என்பதற்குப் ''பாவியான பெண்'' சிறந்த எடுத்துக்காட்டு.

மன்றாட்டு:

இறைவா, அன்பு நிறைந்த உள்ளத்தோடு நாங்கள் உம்மை அணுகி வர எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media