Banner Image

19-09-2026
பொதுக்காலம் 24 வாரம் சனிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 35-37, 42-49
அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது.
சகோதரர் சகோதரிகளே, ``இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?'' என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய். இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும்.

அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டு என்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு. மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார். தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 56: 9. 10-11. 12-13 (பல்லவி: 13b)
பல்லவி: உமது முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் காத்தீர் அன்றோ!
9 நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். பல்லவி

10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன். 11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? பல்லவி

12 கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். 13 ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15
அக்காலத்தில், பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு,
அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்'' (லூக்கா 8:15)
''விதைப்பவர் உவமை'' மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது. இந்த உவமையின் விளக்கமாக அமையும் பகுதியும் ஒர் உவமைபோலவே உள்ளது. அதை நாம் ''இறைவார்த்தை உவமை'' எனலாம் (காண்க: லூக் 8:11-15). மனிதர் கடவுளின் வார்த்தையை எவ்வாறு கேட்கிறார்கள், ஏற்கிறார்கள், வாழ்வில் பலன் விளையச் செய்கிறார்கள் என்பதை நான்கு விதமான நிலங்களை உருவகமாக்கி விளக்குகிறார் இயேசு. வழியோரம், பாறை நிலம், முட்செடி நிறைந்த நிலம் என்பவை வார்த்தை என்னும் விதையை முளைக்க விடுவதில்லை; அப்படியே அந்த விதை முளைத்தாலும் சரியாக வேரூயஅp;ன்றாமலும் முட்செடிகளால் நெருக்கப்பட்டும் பலன் தராமல் போய்விடுகிறது. ஆனால் நல்ல, பண்பட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட விதை நல்ல பலன் தரும். இதை இயேசு மூன்று நிலைகளாக விளக்குகிறார். முதலில் கடவுளின் வார்த்தையை நாம் ''சீரிய, நல்ல உள்ளத்தோடு கேட்க வேண்டும்'' (லூக் 8:15). அக்கால மக்கள் மனித உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் பிறப்பிடமாகக் கருதியது ''உள்ளம்'' (இதயம்) ஆகும். அதோடு கண்களும் தொடர்புடையவை. மனித உணர்வுகளும் சிந்தனைகளும் வெளிப்படுகின்ற வாயில்களாக வாய், காது, நா, உதடு ஆகியவை கருதப்பட்டன. உணர்வுகளும் சிந்தனைகளும் செயல் வடிவம் பெறுவது புயம், கை, கால், காலடி ஆகியவற்றின் வழியாக. சிந்தனைகளையும் உணர்வுகளையும் தோன்றச் செய்து, அவற்றை வெளிப்படுத்தி, அவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கும்போதுதான் அங்கே முழு மனித ஈடுபாடு உள்ளது. எனவே, திறந்த மனத்தோடு, தாராள இதயத்தோடு (''சீரிய நல் உள்ளத்தோடு'') கடவுளின் வார்த்தையைக் கேட்பபது முதல் நிலை. கேட்ட வார்த்தையைப் போற்றிப் பேணுவதும் அதைக் கரிசனையோடு ''காப்பதும்'' இரண்டாம் நிலை. நல்ல நிலத்தில் விழுகின்ற விதையை அந்நிலம் தன்னுள் ஏற்றுக் கொள்வதை இவண் நாம் கருதலாம்.



மூன்றாம் நிலை ''மன உறுதியுடன் பலன் தருவது'' ஆகும் (லூக் 8:15). இங்கே ''மன உறுதி'' எனக் குறிக்கப்படுவது துன்பங்களும் எதிர்ப்புகளும் வருகின்ற வேளையில் துவண்டுவிடாமல் நிலைத்து நிற்கின்ற பண்பு ஆகும். ''நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்'' (லூக் 21:19) என இயேசு தம் சீடர்களுக்குக் கூறியதையும் நாம் கருதலாம். ஆக, கடவுளின் வார்த்தையைக் கேட்பவர்கள் திறந்த, நேர்மையான உள்ளத்தோடு அதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்ட வார்த்தையை அவர்கள் கரிசனையின்றி விட்டுவிடாமல் அன்போடு ஏற்று, போற்றிப் பேண வேண்டும். எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் கடவுளின் வார்த்தை தங்கள் வாழ்வில் பலன் நல்கும் விதத்தில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் செயல்பட்டால் இறைவார்த்தைக்குச் சான்று பகர்கின்ற மக்களாகத் திகழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தை எங்கள் வாழ்வுக்கு ஒளி என நாங்கள் உணர்ந்து அதற்கேற்ப வாழ்ந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media