Banner Image

17-09-2026
பொதுக்காலம் 24 வாரம் வியாழக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11
நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்.
சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிட வில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 118: 1-2. 16-17. 28 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். பல்லவி

28 என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-50
அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ``இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே'' என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, ``சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்'' என்றார்.

அதற்கு அவர், ``போதகரே, சொல்லும்'' என்றார். அப்பொழுது அவர், ``கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?'' என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, ``அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்'' என்றார்.

இயேசு அவரிடம், ``நீர் சொன்னது சரியே'' என்றார். பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ``இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்'' என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ``உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். ``பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?'' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, ``உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க'' என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் (பாவியான பெண்) அழுதுகொண்டே நின்றார்;
அவருடைய காலகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து,
தொடர்;ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்'' (லூக்கா 7:38)
சீமோன் என்னும் பரிசேயரின் வீட்டில் இயேசு விருந்து உண்பதில் ஈடுபட்டிருக்கின்றார். அப்போது அங்கே அழையாத ஒரு ''விருந்தினர்'' வருகிறார். அது ஒரு பெண். அவருடைய பெயர் நமக்குத் தெரியாது. அப்பெண் எந்தவொரு வார்த்தையும் பேசவுமில்லை. ஆனால் அவர் செய்த செயல்களை லூக்கா துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார். அக்கால வழக்கப்படி விருந்தினர் ஒரு மேசை முன் அமர்ந்து, தலையணையில் சாய்ந்த நிலையில் இடது முட்டுக்கையை ஊன்றிக் கொண்டு வலது கையால் உணவை எடுத்து அருந்துவர். அப்போது விருந்தினரின் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் அவர்களின் காலடிகள் பின்புறம் தெரியும். இதனால்தான் அந்தப் ''பாவி''யான பெண் (லூக் 7:37) ''இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் அழுதுகொண்டே நின்றார்'' (லூக் 7:38). தன் வாழ்க்கை பாழாகிப் போனதே என்னும் மனக் கவலையால் அவர் அழுதாரா? புதியதொரு வாழ்வைத் தொடங்கவேண்டும் எனத் தீர்மானித்து, தன் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதாரா? அவர் தேடி வந்தது இயேசுவை. உணவருந்திக் கொண்டிருந்த இயேசுவின் காலடிகளின் அருகில் நின்று அழுததால் கண்ணீர்த் துளிகள் அப்பாதங்களை நனைக்கின்றன. அப்பெண் தன் கூந்தலை அவிழ்க்கிறார். நனைந்த இயேசுவின் காலடிகளைத் தன் கூந்தலால் துடைக்கின்றார். இயேசுவின் பாதங்களை முத்தமிடுகிறார். தன் கையிலிருந்த படிகச் சிமிழிலிருந்து நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் கரிசனையோடு பூசுகின்றார் (காண்க: லூக் 7:38).



லூக்கா விவரிக்கின்ற இக்காட்சி உண்மையிலேயே வியப்புக்குரியதுதான். விருந்து நடக்கும்போது அங்கே நுழைவதற்கு அப்பெண்ணுக்கு அனுமதி இருக்கவில்லை. அதுவும் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயர் ஒருவர் ''பாவி''யான பெண்ணை வீட்டில் ஏற்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மேலும், ''இறைவாக்கினர்'' என மக்களால் கருதப்பட்ட இயேசுவிடம் சென்று அவருடைய காலடிகளை அப்பெண் தொட்டார் என்பது இன்னும் ஒரு பெரிய எல்லை மீறல். ஆனால் இயேசுவுக்கு அப்பெண்ணின் இதயத்தில் புதைந்துகிடந்த சிந்தனைகள் தெரியும். அப்பெண்ணின் உள்ளத்தில் எழுந்த அன்பும் நம்பிக்கையும் இயேசுவுக்கு வெளிச்சம். எனவே இயேசு பாவியான அப்பெண்ணைப் போற்றிப் பேசுகின்றார். இயேசுவை வீட்டுக்கு அழைத்துவிட்டு அவருக்கு உரிய மரியாதை காட்டாத சீமோன் எதையெல்லாம் செய்யாது விட்டாரோ அதையெல்லாம் அப்பெண் இயேசுவுக்குச் செய்கிறார். அதாவது, வீட்டுக்குள் நுழைவதற்கு முன் காலடிகளைக் கழுவுவது வழக்கம். அப்பெண் இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவித் தன் முடியால் துடைக்கிறார். விருந்தினரை முத்தமிட்டு வரவேற்க வேண்டும். ஆனால் அப்பெண்ணோ இயேசுவின் காலடிகளையே முத்தமிடுகிறார். விருந்தினரின் தலையில் எண்ணெய் பூச வேண்டும். ஆனால் அப்பெண்ணோ தன்னையே தாழ்த்திக்கொண்டு, இயேசுவின் காலடிகளைத் தொட்டு அவற்றில் நறுமணத் தைலம் பூசுகிறார். இவ்வாறு அவர் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இயேசு அப்பெண்ணின் அன்பையும் நம்பிக்கையையும் பாராட்டியதோடு அவருடைய பாவங்களையும் மன்னித்து, அவருக்கு மீட்பைபும் அமைதியையும் வாக்களிக்கின்றார் (லூக் 7:50). அன்பு இருக்கும் இடத்தில் கடவுளின் அருள் தோன்றும் என்பதற்குப் ''பாவியான பெண்'' சிறந்த எடுத்துக்காட்டு.

மன்றாட்டு:

இறைவா, அன்பு நிறைந்த உள்ளத்தோடு நாங்கள் உம்மை அணுகி வர எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media