30-08-2026
பொதுக்காலம் 22 வாரம்
ஞாயிற்றுக்கிழமை
ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.
நான் பேசும்போதெல்லாம் `வன்முறை அழிவு' என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. ``அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்'' என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது
1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி
2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி
4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி
7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி
தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்.
மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி
எபே 1: 18 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.
அக்காலத்தில் இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, ``ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது'' என்றார்.
ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ``என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்றார்.
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இயேசுவைப்பின்பற்றுவோம்
பேதுரு இயேசுவால் இதற்கு முந்தையப்பகுதியில் பாராட்டப்படுகிறார். அவருக்கு பாறை என்ற பெயரை சூட்டி, திருச்சபையை இயேசு அவர்மீது கட்டுகிற மிகப்பெரிய பாக்கியத்தை தருகிறார். ஆனால், இன்றைக்கு நாம் வாசிக்கக்கேட்ட பகுதியில் “சாத்தானே“ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இயேசு எதற்காகக் கோபப்பட வேண்டும்? பேதுரு செய்த தவறு என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.
பேதுரு கடவுளுக்கு முன் நடக்க விரும்புகிறார். கடவுளை வழிநடத்த விரும்புகிறார். தனது திட்டத்தை இயேசு பின்பற்ற வேண்டும் என்ற பாணியில் பேசுகிறார். இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்ட பின்னரும், அவர் முன் பேதுரு நடக்க விரும்புகின்ற செயலை, இயேசு கண்டிக்கிறார்.
தொடக்கநூலில் நம்முடைய முதல் பெற்றோர் செய்த பாவமும் இதுதான். தங்களைப்படைத்தவர் கடவுள் என்று அறிந்திருந்தும், ஏதேன் தோட்டத்தின் மகிமையை அனுபவித்திருந்தும், கடவுளைப்போல ஆக வேண்டும், கடவுளாக மாற வேண்டும் என்கிற நன்றிகெட்டத்தனமான எண்ணம், அருள்வாழ்வை இழக்க காரணமாகியது. கடவுளின் இரக்கத்தை, அன்பை, மன்னிப்பை தவறாக பயன்படுத்துவோர்க்கு இந்தப்பகுதி ஓர் எச்சரிக்கை மணி. நம் வாழ்வில் இயேசுவின் பின்னால் செல்வோம். இன்றைய உலகில் மனிதர்கள் எல்லாருமே அவரவர் விருப்பப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களுக்குத்தாங்களே நியாயம் கற்பித்துக்கொண்டு, தாங்கள் சொல்வது தான் சரி, என்ற அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர். இது அழிவுக்கான பாதை. கடவுளின் வழியில் வாழ முயல்வோம்.
மன்றாட்டு:
இழப்பில்தான் நிறைவான இன்பம் எனக் கற்றுத் தந்த இயேசுவே உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்காக உம்மையே நீர் கையளித்தீர். உமக்காக நாங்கள் வாழும் வரத்தைத் தாரும். எங்கள் வாழ்வின் இன்பங்கள், நிறைவுகள் என்று நாங்கள் கருதுபவற்றை உமக்காக, பிறருக்காக விட்டுக்கொடுக்க, தியாகம் செய்ய நல்ல மனதை எங்களுக்குத் தாரும். நாங்கள் இழக்கின்ற ஒவ்வொன்றுக்கும் நீர் பல மடங்கு கைமாறு தருவீர் என்பதை உணரச் செய்யும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்