Banner Image

29-08-2026
பொதுக்காலம் 21 வாரம் சனிக்கிழமை

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு
முதல் வாசகம் – இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19
உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'
அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. ``நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன் மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 71: 1-2. 3-4. 5-6. 15,17
பல்லவி: என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்
1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். -பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்;
ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி

15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது.
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29
அக்காலத்தில் ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். ``நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே,
...நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை'' (மத்தேயு 23:13-14)
இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பலர். அவர்கள் நடுவே யூத சமயத்தின் நுணுக்கங்களைத் தெரிந்த மறைநூல் அறிஞரும், சமய நெறிகளைத் துல்லியமாகக் கடைப்பிடித்துவந்த பரிசேயரும் இருந்தனர். அவர்களைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலேயே கடினமானவை. அவர்களை இயேசு ''வெளிவேடக்காரர்கள்'' என்று கூறிக் கடிந்துகொண்டார். சமய நெறியை விளக்குகிறோம் என்று சொல்லி மக்கள்மீது கடினமான சுமையைச் சுமத்திவிட்டு, தாங்கள் மட்டும் அந்த நெறிப்படி நடக்காமல் இருந்த அந்த வெளிவேடக்காரர்களைப் பின்பற்றலாகாது என்று இயேசு கூறினார். அவர்களுடைய தவறான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டிய இயேசு அவர்கள் விண்ணரசில் நுழைவதுமில்லை, விண்ணரசில் நுழைய விரும்புவோரை விடுவதுமில்லை என்றுகூறிக் கடிந்தார். இக்கருத்தைக் கவிதையாக வடித்த கண்ணதாசன் இயேசுவின் எதிரிகளை ''வைக்கோற் போரில் படுத்த நாய்''க்கு ஒப்பிடுவது கருதத்தக்கது:

''வைக்கோற் போரில் படுத்த நாய்போல்
தானுண்ணாமல் உண்ண விடாமல்
தடுக்கும் உமக்கு ஐயோ கேடு!'' (இயேசு காவியம், பாடல் எண் 108, பக். 283).


பிறருக்கு நல்லதே செய்ய வேண்டும் என இயேசு வழங்கிய போதனையை மறந்துவிட்டு அவர்களுக்குத் தீங்கிழைக்க முனைவோர் இயேசுவின் வழியில் நடக்க மறுக்கின்றனர். அவர்கள் நல்லது செய்வதுமில்லை, பிறர் நல்லது செய்ய விடுவதுமில்லை. இத்தகையோர் நடக்கும் வழி அழிவுக்கே இட்டுச்செல்லும். மாறாக, இயேசுவைப் போல நாமும் பிறருக்காக வாழ்ந்தால் விண்ணரசில் புகுந்திடத் தகுதி பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, பிறருக்கு நன்மை செய்வதில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media