Banner Image

31-08-2026
பொதுக்காலம் 22 வாரம் திங்கட்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5
இயேசுவைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.
சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 119: 97-98. 99-100. 101-102
பல்லவி: ஆண்டவரே! திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
97 ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன். 98 என் எதிரிகளை விட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது. பல்லவி

99 எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளவனாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்; 100 முதியோர்களை விட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன். பல்லவி

101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். 102 உம் நீதி நெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 4: 18
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30
அக்காலத்தில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப் பட்டது.

அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.''

பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ``இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், ``நீங்கள் என்னிடம், `மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, `கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.

மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது'' என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
இயேசுவைப்பின்பற்றுவோம்
பேதுரு இயேசுவால் இதற்கு முந்தையப்பகுதியில் பாராட்டப்படுகிறார். அவருக்கு பாறை என்ற பெயரை சூட்டி, திருச்சபையை இயேசு அவர்மீது கட்டுகிற மிகப்பெரிய பாக்கியத்தை தருகிறார். ஆனால், இன்றைக்கு நாம் வாசிக்கக்கேட்ட பகுதியில் “சாத்தானே“ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இயேசு எதற்காகக் கோபப்பட வேண்டும்? பேதுரு செய்த தவறு என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.



பேதுரு கடவுளுக்கு முன் நடக்க விரும்புகிறார். கடவுளை வழிநடத்த விரும்புகிறார். தனது திட்டத்தை இயேசு பின்பற்ற வேண்டும் என்ற பாணியில் பேசுகிறார். இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்ட பின்னரும், அவர் முன் பேதுரு நடக்க விரும்புகின்ற செயலை, இயேசு கண்டிக்கிறார்.



தொடக்கநூலில் நம்முடைய முதல் பெற்றோர் செய்த பாவமும் இதுதான். தங்களைப்படைத்தவர் கடவுள் என்று அறிந்திருந்தும், ஏதேன் தோட்டத்தின் மகிமையை அனுபவித்திருந்தும், கடவுளைப்போல ஆக வேண்டும், கடவுளாக மாற வேண்டும் என்கிற நன்றிகெட்டத்தனமான எண்ணம், அருள்வாழ்வை இழக்க காரணமாகியது. கடவுளின் இரக்கத்தை, அன்பை, மன்னிப்பை தவறாக பயன்படுத்துவோர்க்கு இந்தப்பகுதி ஓர் எச்சரிக்கை மணி. நம் வாழ்வில் இயேசுவின் பின்னால் செல்வோம். இன்றைய உலகில் மனிதர்கள் எல்லாருமே அவரவர் விருப்பப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களுக்குத்தாங்களே நியாயம் கற்பித்துக்கொண்டு, தாங்கள் சொல்வது தான் சரி, என்ற அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர். இது அழிவுக்கான பாதை. கடவுளின் வழியில் வாழ முயல்வோம்.

மன்றாட்டு:

இழப்பில்தான் நிறைவான இன்பம் எனக் கற்றுத் தந்த இயேசுவே உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்காக உம்மையே நீர் கையளித்தீர். உமக்காக நாங்கள் வாழும் வரத்தைத் தாரும். எங்கள் வாழ்வின் இன்பங்கள், நிறைவுகள் என்று நாங்கள் கருதுபவற்றை உமக்காக, பிறருக்காக விட்டுக்கொடுக்க, தியாகம் செய்ய நல்ல மனதை எங்களுக்குத் தாரும். நாங்கள் இழக்கின்ற ஒவ்வொன்றுக்கும் நீர் பல மடங்கு கைமாறு தருவீர் என்பதை உணரச் செய்யும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media