News

ஒருமைப்பாட்டுணர்வை அறச்செயல்களால் வெளிப்படுத்த அழைப்பு


துயர்நிறைந்த இக்காலக்கட்டத்தில் நாம் சந்திக்கும் மக்களுக்கு நமது தோழமையுணர்வை வெளிப்படையான செயல்களால் காட்டுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.



டிசம்பர் 20, இச்செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடைப்பிடித்த மனித ஒருமைப்பாட்டுணர்வு உலக நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் இருப்போருக்கு உதவிசெய்ய தூய ஆவியார் காட்டும் வழிகளில் நடக்குமாறு கூறியுள்ளார்.

“நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் துன்பம் நிறைந்த இக்காலக்கட்டத்தில் தூய ஆவியார் நம்மை நடத்தும் பாதைக்கு, கிறிஸ்தவ நம்பிக்கையில் பதிலுறுக்க அழைக்கப்படுகிறோம், இதனால், நமது உடன்பிறந்தஉணர்வைச் சார்ந்திருக்கும், நாம் சந்திக்கும் மக்களுக்குத் தோழமையுணர்வைக் காட்டுகிறோம் என்பதற்குச் சான்றுபகர முடியும்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.



மனித ஒருமைப்பாட்டுணர்வு உலக நாள்



ஏழ்மை மற்றும், அதனை ஒவ்வொரு நாட்டிலும் குறைக்கவேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை, ஐ.நா.வும், அதன் உறுப்பு நாடுகளும் உருவாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும்வண்ணம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 20ம் தேதி மனித ஒருமைப்பாட்டுணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

“ஒருமைப்பாடு” என்ற சொல்லாடல் ஐ.நா.வின் பன்னாட்டு உறவுகளுக்கு இன்றியமையாதவைகளாக, அதன் அடிப்படை விழுமியங்களில் ஒன்றாக, 2000மாம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி ஐ.நா.வின் மில்லென்யம் அறிக்கையில் இணைக்கப்பட்டது.



உலகளாவிய ஏழ்மையைக் குறைப்பதற்காக, உலக ஒருமைப்பாட்டு நிதி அமைப்பை ஐ.நா. பொது அவை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி உருவாக்கியது. இது 2003ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட அமைப்பில் (UNDP) சேர்க்கப்பட்டது.



இந்த நாளை நினைவுகூரும்விதமாக ஐ.நா. நிறுவனம், மனித ஒருமைப்பாட்டுணர்வு உலக நாளை அறிவித்தது.

முந்தைய அடுத்தது