News

உதவிக்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய புலம்பெயர்ந்தோர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெருக்கத்தைத் தெரிவிப்பதற்காகவும், தேவையான மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்காகவும், உக்ரைன் சென்றுள்ள வத்திக்கானின் அதிகாரி ஒருவர், தன் கள அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

மார்ச் 8, இச்செவ்வாயன்று உக்ரைனின் Lviv நகர் சென்றடைந்துள்ள, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பாளரான, கர்தினால் Konrad Krajewski அவர்கள், தான் பெற்ற கள அனுபவங்களை வத்திக்கானின் செய்தித்துறைக்கு வழங்கியுள்ளார்.

தான் Lviv நகரில் இருப்பதாகவும், ஐரோப்பிய சமூகத்தின் பெரிய அளவிலான உதவிகள் போலந்து வழியாக இங்குதான் வந்து சேருகின்றன என்றும் தெரிவித்துள்ள கர்தினால் Krajewski அவர்கள், இங்கே கொண்டுவரப்படும் எல்லா வகையான உதவிப்பொருள்களும் பெரிய லாரிகளில் கீவ், ஒதேசா மற்றும் கார்கிவ் நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆதரவு இங்கே பெருமளவு நடைமுறையில் இருப்பதை எடுத்துக்காட்டியுள்ள கர்தினால் Krajewski அவர்கள், இங்கு எரிபொருளைப் பெறுவதில் அதிக சிரமங்கள் இருப்பதால், மக்களுக்கு உதவிப்பொருள்களைக் கொண்டுசெல்லும் லாரிகளுக்கு திருத்தந்தையின் அறக்கட்டளை அமைப்பிலிருந்துதான் எரிபொருளுக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார்.

நம்பிக்கை மலைகளை நகர்த்த முடியும் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு நாம் நற்செய்தியிலும் வாசிக்கிறோம், அதில் உறுதியாகவும் இருக்கிறோம் என்றுரைத்த கர்தினால் Krajewski அவர்கள், நமது இறைவேண்டலாலும், நம்பிக்கையாலும் இந்தப் போரை முழுவதுமாக நிறுத்துவதில் நாம் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையும் இறைவேண்டலும்தான் நம்பிக்கைக்கு உயிர்மூச்சு அளிக்கின்றது. இந்த இக்கட்டான நிலையில் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டாலும், ஒருநாள் மீண்டும் தங்கள் சொந்தநாடு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன்தான் உக்ரேனியர்கள் அனைவரும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்கின்றனர் என்ற அவர்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார் கர்தினால் Krajewski.

முந்தைய அடுத்தது