ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை போருக்கு எதிராக குரல்எழுப்பவேண்டும்
இரஷ்யாவில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் Giovanni D'Aniello அவர்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் (Kiril) அவர்களை, மாஸ்கோவிலுள்ள ஆர்த்தடாக்ஸ் சபை தலைமையகத்தில் சந்தித்து, கிறிஸ்தவ சபைகள் அமைதிக்கு ஆற்றவேண்டிய முக்கிய பங்கு பற்றி எடுத்துரைத்தார்.
கியூபா நாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், முதுபெரும்தந்தை கிரில் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு பற்றிக் குறிப்பிட்ட பேராயர் Giovanni D'Aniello அவர்கள், கிறிஸ்தவ சபைகள் போரில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது, மாறாக, அவை, அமைதியை ஏற்படுத்தும் கருவிகளாகச் செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார். (AsiaNews)
WCC மன்றம் முதுபெரும்தந்தை கிரில் அவர்களுக்கு மடல்
மேலும், WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் இடைக்காலப் பொதுச்செயலர் பேராசிரியர் Ioan Sauca அவர்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில், உக்ரைனுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே இடம்பெறும் போரை நிறுத்தும்வண்ணம், அவ்விரு தரப்புகளுக்கும் இடையே அமைதிக்கான உரையாடலை ஊக்குவித்து, அதற்கு நடுவராயிருந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போருக்கு, ஓர் அமைதியான தீர்வு காணப்படுவதற்கு, நம்பிக்கையின் அடையாளங்களைக் காண, உலகினர் அனைவரும் மிகுந்த கவலையோடும், ஆவலோடும் உள்ளனர் என்று, அம்மடலில் Sauca அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதைய நம்பிக்கையின்மைச் சூழல்களில், அமைதியான ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கு, நம்பிக்கையின் ஓர் அடையாளமாக, முதுபெரும்தந்தை கிரில் அவர்களையே, WCC மன்றத்தைச் சேர்ந்த கிறிஸ்தவத் தலைவர்களும், கிறிஸ்தவர்களும் நோக்குகின்றனர் என்று, Sauca அவர்கள், தன் மடலில் கூறியுள்ளார்.
மிகுந்த வேதனையோடும், நொறுங்கிய இதயத்தோடும் எழுதுகிறேன் என்று, தன் மடலைத் தொடங்கியுள்ள Sauca அவர்கள், மேற்கத்திய கிறிஸ்தவர்கள், சாம்பல் புதனோடு தவக்காலத்தைத் துவக்கியிருக்கும் இவ்வேளையில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களாகிய நாம், மார்ச் 07, வருகிற திங்களன்று தவக்காலத்தை ஆரம்பிப்பதன் அடையாளமாக, மார்ச் 6, இஞ்ஞாயிற்றுக்கிழமையை மன்னிப்பு ஞாயிறாகச் சிறப்பிக்கிறோம் என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.
இத்தவக்காலத் திருவழிபாடுகள், மனவருத்தம், அமைதி, மற்றும், ஒப்புரவு ஆகியவற்றுக்கு அழைப்புவிடுக்கும்வேளை, இரத்தம்சிந்துதலையும், துன்பங்களையும் கொணரும் போரை நிறுத்துவதற்கு, முதுபெரும்தந்தை கிரில் அவர்கள், அதிகாரிகளோடு உரையாடலை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார், WCC மன்றத்தின் இடைக்காலப் பொதுச்செயலர் பேராசிரியர் Ioan Sauca அவர்கள். (ICN)