உக்ரைன், இரஷ்யாவை, அமல அன்னைக்கு அர்ப்பணிக்க..
நம் வாழ்வுக்கும், வரலாற்றுக்கும் தேவையான மருந்துகள் எவை என்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 04, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தவக்காலம் (#Lent) என்ற ஹாஸ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இறைவேண்டல், பிறரன்பு, மற்றும் உண்ணாநோன்பு ஆகியவை, நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் உரிய மருந்துகளாகும். அவை, வரலாற்றை மாற்றவல்லது. ஏனெனில் அவை, நம் வாழ்விலும், உலகிலும் கடவுளின் தலையீடு இடம்பெற முக்கியமான வழிகளாகும். அவை ஆன்மாவின் ஆயுதங்கள்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.
உக்ரைன், இரஷ்யா, அமல அன்னை மரியாவுக்கு அர்ப்பணம்
மேலும், உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் குறித்து தங்கள் கவலையையும், அச்சத்தையும் வெளியிட்டுள்ள அந்நாட்டு இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள், உக்ரைன், மற்றும், இரஷ்யா ஆகிய நாடுகளை, அன்னை மரியாவின் அமல இதயத்திற்கு அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
1917ம் ஆண்டில் பாத்திமாவில் அன்னை மரியா கேட்டுக்கொண்டதுபோல, எம் மக்கள் கணக்கிடமுடியாத கடுந்துயரங்களை எதிர்க்கொண்டுவரும் இந்நாள்களில், இவ்விரு நாடுகளையும் அன்னை மரியாவின் களங்கமற்ற திருஇதயத்திடம் பொதுப்படையாக அர்ப்பணிக்கவேண்டும் என்று, உக்ரைன் ஆயர்கள், திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள மடலில் கூறியுள்ளனர்.
கடந்த ஆறு நாள்களில், 4,53,000த்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் போலந்து நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளனர். மார்ச் முதல் தேதியன்று மட்டும், 98 ஆயிரம் பேர், போலந்துக்குச் சென்றுள்ளனர்.