கர்தினால் காச்சியாவில்லன் இறைபதம் சேர்ந்தார்
திருப்பீடத்தின் பாரம்பரியச் சொத்துக்கள் மேலாண்மை அமைப்பின் (APAS) முன்னாள் தலைவரும், இந்தியா, நேபாளம் உட்பட பல்வேறு நாடுகளில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியவருமான, கர்தினால் அகுஸ்தீனோ காச்சியாவில்லன் அவர்கள் (Agostino Cacciavillan), தனது 95வது வயதில், மார்ச் 05 இச்சனிக்கிழமை அதிகாலையில் இறைபதம் சேர்ந்தார்.
கர்தினால் அகுஸ்தீனோ காச்சியாவில்லன்
1926ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, வட இத்தாலியின் Novale di Valdagno என்ற ஊரில் பிறந்த கர்தினால் காச்சியாவில்லன் அவர்கள், 1949ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், பாப்பிறை திருஅவை நிறுவனத்தில் ஈராண்டுகள் (1957-1959) படிப்பை முடித்து, திருப்பீடச் செயலகத்தில் பணியைத் தொடங்கினார். பின்னர் பிலிப்பீன்ஸ், இஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களில் செயலராகப் பணியாற்றிய இவர், பின்னர் கென்யாவின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியபோது, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பில் திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகவும் பணியாற்றினார். 1981ம் ஆண்டில் இந்தியாவின் திருப்பீடத் தூதராகவும் பணியைத் தொடங்கிய கர்தினால் காச்சியாவில்லன் அவர்கள்,1985ம் ஆண்டில் நேபாளத்திற்கும் முதல் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். 1990ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதராகப் பணியைத் தொடங்கிய இவர், அமெரிக்க நாடுகள் அமைப்பில் திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகவும் பணியாற்றினார். இவர், 1998ம் ஆண்டில் திருப்பீடத்தின் பாரம்பரியச் சொத்துக்கள் மேலாண்மை அமைப்பின் தலைவராகவும், Centesimus Annus-Pro Pontifice பாப்பிறை அமைப்பின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
இவர், 2001ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். மார்ச் 05, இச்சனிக்கிழமை காலையில் இறைவனடி சேர்ந்த கர்தினால் காச்சியாவில்லன் அவர்களின் அடக்கச்சடங்கு, மார்ச் 07, இத்திங்களன்று இடம்பெறும்.
கர்தினால் காச்சியாவில்லன் அவர்களது இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 212 ஆகவும், அவர்களில் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆகவும் மாறியுள்ளன.