News

பிரேசில் தவக்கால முயற்சிக்கு திருத்தந்தையின் செய்தி

மார்ச் 2, இப்புதனன்று பிரேசில் தலத்திருஅவையின் மனித உடன்பிறந்த உணர்வு நிலைகுறித்த முயற்சிக்கு, செய்தி ஒன்றை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்விக்கும், சகோதரத்துவ உடன்பிறந்த உணர்வு நிலைக்கும் இடையேயான உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் இவ்வாண்டுக்கான அவர்களின் மையப்பொருளானது, சமூகத்தின் விளிம்புகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய விடயங்களை முன்வைப்பதாகவும், கடவுளின் படைப்பைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி அனைவரையும் விழிப்படையச் செய்வதாகவும் கூறியுள்ளார்.

உண்மையில், இன்றையச் சமுதாயத்தைப் பார்க்கும்போது, ​​உலகளாவிய கல்வி உடன்படிக்கைக்கான அழைப்பில் நினைவுகூரப்பட்டபடி, உலகளாவிய உடன்பிறந்த உணர்வுநிலை மற்றும் ஒருங்கிணைந்த மனிதநேயத்தை ஊக்குவிக்கும் கல்வியைப் பெறுவதற்குக் கல்வித் துறையில் மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்கள் குழந்தைகளின் கல்வியில் குடும்பங்களுக்கு உதவுதல், அனைவருக்கும் கல்வி என்ற உத்தரவாதம் ஆகியவற்றில் அரசுகளின் பொறுப்பை அங்கீகரித்து மதிப்பிடும் அதேவேளையில், கல்வித் துறையில் திருஅவையின் முக்கியப் பணி அங்கீகரிக்கப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மதங்கள் எப்போதும் கல்வியுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளதுடன், கல்வியைத் தங்களின் மத நடவடிக்கைகளுடன் இணைத்துள்ளன என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த காலத்தைப் போலவே, இன்றும், நமது மத மரபுகளின் ஞானத்துடனும் மனிதநேயத்துடனும், உலகளாவிய உடன்பிறந்த உணர்வுநிலையை வளர்க்கக்கூடிய ஒரு புதுப்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைக்கு, நாம் ஒரு தூண்டுதலாக இருக்க விரும்புகிறோம் என்றும் விளக்கினார்.

"சகோதரத்துவம் மற்றும் கல்வி" என்ற மையப்பொருளின் தேர்வு, ஒவ்வொரு திருஅவைச் சமூகத்திலும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயனுள்ள புதுப்பித்தலுக்குக் காரணமாகவும் இருக்கவேண்டும் என்று, தான் முழு மனதுடன் நம்புவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு அன்புடன் கல்வி கற்பதன் வழியாக ஞானத்தை பரவச் செய்யலாம் என்றும், இதனால் மற்ற கல்வி நிறுவனங்களும் இந்த ஒருங்கிணைந்த உருவாக்கத்தின் மாதிரியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முந்தைய அடுத்தது