News

மியான்மார், உக்ரைனின் அமைதிக்காக தவக்கால இறைவேண்டல்

இராணுவ மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் மற்றும் உக்ரைனுக்கு அமைதியைக் கொண்டுவர இந்தத் தவக்காலத்தின்போது கத்தோலிக்கர்கள் உண்ணா நோன்பிருந்து இறைவேண்டல் செய்யுமாறு, மியான்மாரிலுள்ள பியாவின் ஆயர் அலெக்சாண்டர் பியோன் சோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தவக்கால நாள்களில் சிறப்பு உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆயர் பியோன் சோ அவர்கள், உக்ரைன் அமைதிக்கான தினமாக சாம்பல் புதனை அறிவித்திருக்கும் திருத்தந்தையோடு இணைந்து இறைவேண்டல் செய்வதற்கும் அந்நாட்டுக் கத்தோலிக்கர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் உக்ரைனின் அமைதிக்காக இறைவேண்டல் செய்வதற்கு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மியான்மாரும் உள்நாட்டுப் போர் மற்றும் இராணுவத்தின் கொடுஞ்செயல்களுக்குச் சான்றாகி வருகிறது என்றும், இதன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் குடிமக்கள் காடுகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் தஞ்சம்புகும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், ஆயர் பியோன் சோ அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், யாங்கூனின் கர்தினால் பேராயர் சார்லஸ் போ அவர்கள், இந்நாள்களில் கத்தோலிக்கர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் சோர்வடையவேண்டாம் என்றும், தங்களின் நம்பிக்கையை இழக்கவேண்டாம் என்றும், விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் 2, புதனன்று, புனித மரியன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் திருப்பலியின் மறையுரையின்போது, நாம் கடவுளின் சாயல் மற்றும் அவருக்குச் சொந்தமானவர்கள், எனவே நாம் நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம் என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி விசுவாசிகளின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார், பேராயர் சார்லஸ் போ.

2021ம் ஆண்டு பிப்ரவரி முதல், மியான்மார் இராணுவம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இராணுவத்தின் கொடுஞ்செயல்களால், 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)

முந்தைய அடுத்தது