தாத்தா பாட்டிகள், முதியோருக்கான சிறப்பு நாள் கொண்டாட்டம்
உலகில் தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான ஒரு சிறப்பு நாளைக் கடந்த ஆண்டு துவக்கி வைத்துக் கொண்டாடியதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜூலை மாதம் 24ம் தேதி இத்தினம் சிறப்பிக்கப்படுமென திருப்பீடம் அறிவித்துள்ளது.
வரலாற்றின் இந்த இரண்டாவது உலகத் தினத்திற்குத் தலைப்பாக 'அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்' என்ற 92ம் திருப்பாடல் வாக்கியத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்வு செய்துள்ளதாகத் திருப்பீடத்தின் பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு அவை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
தாத்தா பாட்டிகளும் முதியோரும் எவ்வாறு திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் நிறைந்தவர்கள் என்பதை உணர்த்தும் இவ்வண்டிற்கான இத்தலைப்பு, அவர்களின் மதிப்பையும் தேவையையும் குறித்து மீண்டும் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுப்பதாக உள்ளது எனத் தன் அறிக்கையில் தெரிவிக்கிறது இத்திருப்பீட அவை.
வாழ்விலும் விசுவாசத்திலும் முதியோர் அடைந்துள்ள அனுபவங்கள், சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு உதவ முடியும் எனக் கூறும் இவ்வவை, திருஅவையின் ஒன்றிணைந்த பாதையில் இது மிக முக்கியத்துவம் நிறைந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
திருஅவையின் அனைத்து மறைமாவட்டங்களும், பங்குத்தளங்களும், அமைப்புகளும், சமுதாயங்களும் இச்சிறப்பு தினத்தை ஜூலை 24ம் தேதி ஞாயிறன்று நன்முறையில் கொண்டாடவேண்டும் என்றும், அதற்குத் தேவையான வழிகாட்டிகளையும் விவர ஏடுகளையும் விரைவில் வழங்கவுள்ளதாகவும், திருப்பீடத்தின் பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு அவை தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.