News

புனித லூர்து அன்னை பெருவிழா: திருத்தந்தையின் காணொளிச் செய்தி

பிப்ரவரி 11, வெள்ளிக்கிழமை, அர்ஜென்டினா நாட்டின் El Challaoல் உள்ள புனித லூர்து அன்னை திருத்தலத்தின் பெருவிழாக் கொண்டாட்டத்தையொட்டி காணொளிச் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித லூர்து அன்னையின் விழாவை மிகுந்த தயாரிப்புடன் கொண்டாட ஒன்றாக வந்துள்ள பக்தர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவைப் போல வெளியே சென்று பிறருக்கு உதவும் ஒரு சமூகமாக வாழவேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சந்திப்பு என்பது உண்மையிலியேயே சவால் நிறைந்த ஒன்று என்றும், அது தன் உயிரையே பணயம் வைக்கும் உன்னதமான செயல் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சந்திப்பு என்பது ஒன்றாக நடப்பது என்றும் தனிமையில் இருப்பதைத் தவிர்த்து, மற்றவர்களுடன், நண்பர்களுடன், குடும்பத்தினருடன், கடவுளின் மக்களுடன், அன்னை மரியாவுக்கு முன்பாக இறைவேண்டலில் ஒன்றாகப் பயணிப்பது என்றும் அதில் விளக்கியுள்ளார்.

இதன் காரணமாகத்தான் நாம் எப்போதும் ஒரே சமூகமாக ஒன்றாகப் பயணிக்க அன்னை மரியாவின் செப உதவியையும், பரிந்துரையையும், பாதுகாப்பையும் வேண்டுகிறோம் என்றும், நாம் வெளியில் சென்று பிறரைச் சந்தித்து உதவிகள் புரிய ஒரே குழுமமாகச் செல்வோம் என்றும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்திப்பு என்பது எப்போதும் மற்றவர்களுக்குத் திறந்த இதயத்தைக் காட்டுவது என்றும், இதற்கு நேர்மாறானது ஒருவரின் இதயத்தை எப்போதும் மூடியே வைத்திருப்பது என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், “அன்னையே, நாங்கள் எப்போதும் மூடிய இதயங்களைக் கொண்டிராமல், பிறருக்குப் பணியாற்றத் தாயாராக இருக்கும் திறந்த இதயங்களைக் கொண்டிருக்க உதவுங்கள்” என்று அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முந்தைய அடுத்தது