படைப்பு, ஊழல் சிறையிலிருந்து விடுதலைபெற காத்திருக்கிறது
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 55வது உலக அமைதி நாள் செய்தியை டிசம்பர் 21, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட குழுவில் ஒருவரான விவசாயிகள் அமைப்பின் தலைவர் டாக்டர் Aboubakar Soumahoro அவர்கள், இச்செய்தியை வெளியிட தனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு முதலில் நன்றி கூறினார்.
இக்காலத்தில், அமைதியை கட்டியெழுப்புவது, தவிர்க்கமுடியாத ஒரு பணியாக மாறியுள்ளது என்றும், நமக்குத் தேவையான அமைதி, இந்த உலகம் கொடுக்கும் அமைதி அல்ல, மாறாக, எவ்விதச் சவால்களையும் எதிர்கொள்வதற்கு, துணிவையும், சக்தியையும் கொடுக்கும், மற்றும், நம் ஆன்மாவுக்கு இளைப்பாற்றிதரும் அமைதியாகும் என்றும் Soumahoro அவர்கள் கூறினார்.
திருத்தந்தை, 55வது உலக அமைதி நாள் செய்தியில் கூறியிருப்பதுபோன்று, ஏழைகள், மற்றும், இப்பூமியின் அழுகுரலைக் கேட்பது, இக்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்று என்று கூறிய Soumahoro அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளால், இன்று உலகில் பத்து கோடிக்கு மேற்பட்ட மக்கள், கடும் ஏழ்மையில் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டார்..
இன்று படைப்பு அனைத்தும், பேராசை உணர்வில் இடம்பெறும் ஊழல் என்ற சிறையிலிருந்து விடுதலைபெறுவதற்காக பொறுமையின்றி காத்திருக்கிறது எனவும், ஏழைகள், மற்றும், இப்பூமியின் அழுகுரல், பணம் என்ற கடவுளால் ஆளப்படும் சமுதாயத்தில் பிறப்பிக்கப்படும் தன்னலம் மற்றும், தனிமனிதக்கோட்பாட்டால் உருவாகும் ஆன்மீக வெறுமையைக் களைவதன் தேவையையும் வலியுறுத்துகின்றது எனவும், Soumahoro அவர்கள் கூறினார்.
உண்மையான வாழ்க்கையில் நுழைவதற்கு, ஓர் ஆன்மீகப் புரட்சியை முன்னெடுக்கவும், மனிதக் குடும்பத்தில் நானும் ஓர் அங்கம் என்ற உணர்வில் வாழவும், நமக்கு துணிச்சல் தேவை எனவும், இவற்றை எட்டுவதற்கு, செவிமடுத்தல், மனத்தாராளம் மற்றும், தியாகம் அவசியம் எனவும், Soumahoro அவர்கள் கூறினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டவரான Aboubakar Soumahoro அவர்கள், விவசாயிகள் அமைப்பின் தலைவர் மற்றும், இத்தாலியில் புலம்பெயர்ந்தோருக்காகப் பரிந்துபேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.