News

திருத்தந்தை : இதயக் கதவை புலம்பெயர்ந்தோருக்கு திறப்போம்

மத்தியதரைக்கடல் பகுதியில், புலம்பெயர்ந்தோர் தொடர்ந்து கடுந்துயரங்களை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், அம்மக்களின் நெருக்கடி நிலைகளைக் களைவதற்கு, உடனடியாகவும், உறுதியானமுறையிலும், அரசியல் மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 22, இப்புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் அழைப்புவிடுத்தார்.

ஐரோப்பாவில் புகலிடம்தேடி வருகின்ற புலம்பெயர்ந்தோரின் வாழ்வும், மாண்பும் பாதுகாக்கப்படுவதற்கு, உறுதியான தீர்வுகளைக் காண, ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், மற்றும், அதிகாரிகளுக்கு இடையே ஒன்றிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

அண்மையில், லிபியா மற்றும், இத்தாலியின் லாம்பெதூசா தீவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில், பயணம் மேற்கொண்ட புலம்பெயர்ந்தோரில் குறைந்தது 160 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதை முன்னிட்டு, இப்புதன் மறைக்கல்வியுரையில் இவ்வாறு அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மையில் சைப்பிரசு மற்றும், கிரேக்க நாடுகளுக்கு தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோராகிய, காயமடைந்துள்ள ஒரு மனித சமுதாயத்தைச் சந்தித்ததுபற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்நாடுகளிலிருந்து சில புலம்பெயர்ந்தோரை இத்தாலிக்கு என்னால் அழைத்துவர முடிந்தது என்றும், இம்மக்கள் மீது இத்தாலிய அதிகாரிகள் காண்பித்துவரும் மனத்தாராளத்திற்கு நன்றி கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். .

இத்தாலிக்கு வந்துள்ள புலம்பெயர்ந்துள்ள மக்களில் சிலர், இப்புதன் மறைக்கல்வியுரையில் பங்குகொள்கின்றனர் எனவும், அவர்கள், வருகிற மாதங்களில் திருஅவையில் பராமரிக்கப்படுவார்கள் எனவும், பல பங்குத்தளங்கள், துறவு சபைகள் கத்தோலிக்க நிறுவனங்கள் போன்றவை, இம்மக்களை வரவேற்பதற்குத் தயாராக உள்ளன எனவும் திருத்தந்தை கூறினார்

புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகளை, சில ஐரோப்பிய நாடுகளே பெருமளவாக எதிர்கொள்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, திருஅவையின் இச்செயல், மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு முன்மாதிரிகையாய் இருக்கும் என்று தான் நம்புவதாகவும், நமக்குத் தேவைப்படுவதெல்லாம், நம் இதயக் கதவுகளைத் திறப்பதே எனவும் எடுத்துரைத்தார்.

சுலோவேனியா ஆயர்கள்

மேலும், திருத்தந்தையின் இந்த அழைப்பை ஏற்று, புலம்பெயர்ந்தோருடன் தோழமையுணர்வுகொண்டு, அவர்களுக்கு உதவிகள் ஆற்றுவதற்கு சுலோவேனியா நாட்டு ஆயர்கள் இசைவுதெரிவித்துள்ளனர்.

இன்னும், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (COMECE) தலைவர் கர்தினால் Jean-Claude Hollerich அவர்களும், புலம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு விண்ணப்பித்துள்ளார்.

ஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு

முந்தைய அடுத்தது