News

சிறந்த பங்கை வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்க

வருகிற நவம்பரில் நடைபெறவிருக்கும் COP26 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த 26வது உலகத் தலைவர்களின் மாநாட்டிற்கு தயாரித்துவரும் அரசியல்வாதிகள், பொறுப்புணர்வு, மற்றும் ஒருமைப்பாட்டுணர்வு ஆகிய இரு முக்கிய கொள்கைகளின் ஒளியால் தூண்டப்பட்டு செயல்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

“சனநாயகத்திற்காக, அனைத்து மக்களுக்காக” என்ற இலக்குடன் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவரும் IPU எனப்படும், தேசிய பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பின் ஏறத்தாழ 500 பிரதிநிதிகள், அக்டோபர் 09, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர்.

COP26 உலக உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பாக, அக்டோபர் 8, இவ்வெள்ளி, 9 இச்சனி ஆகிய இரு நாள்களில் உரோம் நகரில் கூட்டம் நடத்திய, இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இம்மாதம் 4ம் தேதி, பல்வேறு மதத் தலைவர்கள் மற்றும், அறிவியலாளர்களோடு இணைந்து, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்களுக்கு தான் விடுத்த விண்ணப்பம் குறித்து எடுத்துரைத்தார்.

அக்டோபர் 04, கடந்த திங்களன்று வத்திக்கானில், “நம்பிக்கை மற்றும் அறிவியல்: COP26 நோக்கி” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட மதத் தலைவர்களும், அறிவியலாளர்களும், தானும் இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்ட விண்ணப்ப அறிக்கை, பல மாதங்களாக இடம்பெற்ற ஆழமான உரையாடல்களின் வெளிப்பாடு என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த விண்ணப்பத்தின் வழியாக, காலநிலை மாற்றத்தால், நாமும், நமது அழகான பொதுவான இல்லத்தின் வாழ்வும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, எவ்வாறு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது என்ற விழிப்புணர்வையும், குறிப்பாக, பெருந்தொற்றுச் சூழலில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக் கூறியுள்ளோம் என்று திருத்தந்தை கூறினார்.

சூழலியல் கல்வி

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு நாம் மேற்கொள்ளும் எண்ணற்ற அர்ப்பணங்களில் கல்வி முக்கிய அங்கம் வகிக்கின்றது என்றும், ஒருங்கிணைந்த சூழலியல் கல்வியை ஊக்குவிப்பதற்கு, மதங்களின் பிரதிநிதிகள் உறுதியெடுத்துள்ளனர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அதேநேரம், உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் குறைப்பதற்கு, பன்னாட்டு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தி, காலதாமதமின்றி துணிச்சலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, மதங்களின் பிரதிநிதிகள், அரசுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர் எனவும் திருத்தந்தை கூறினார்.

புதுப்பிக்கப்படக்கூடிய மின்சக்தி தயாரிப்பு, நிலங்களைப் பேணிக் காத்தல், நிலங்கள் தரிசு நிலங்களாக ஆவதைத் தடுத்தல், காடுகளைப் பாதுகாத்தல், பல்லுயிர்களைப் பாதுகாத்தல், உள்ளூர் கலாச்சாரங்களை மதிக்கின்ற மற்றும், சூழலியலை நட்போடு அணுகும் உணவு அமைப்புமுறைகளுக்கு ஆதரவளித்தல், பசி மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நீக்குதல் உட்பட பல்வேறு விவகாரங்களில் அரசுகள் கவனம் செலுத்துமாறும் திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.

நல்ல அரசியல் தலைவர்களின் பண்புகள்

இதில் அனைவருக்கும், குறிப்பாக அரசியல் மற்றும் அரசுத் தலைவர்களுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது எனவும், இந்தச் சவால்களை எதிர்கொள்ள, மிகுந்த ஞானம், தொலைநோக்குப் பார்வை, மற்றும், பொதுநலன் மீது அக்கறை ஆகியவை தேவைப்படுகின்றன என்றும், இவையே நல்ல அரசியலின் அடிப்படைப் புண்ணியங்கள் எனவும் திருத்தந்தை கூறினார்.

இளையோரும் வருங்காலத் தலைமுறைகளும் நம்பிக்கையில் வாழ்வதை உறுதிப்படுத்தும்வண்ணம், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஞானத்தோடும் நீதியோடும் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு தன் உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

IPU எனப்படும் தேசிய பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பு, 1889ம் ஆண்டில் பிரித்தானியாவின் William Randal Cremer, பிரான்சின் Frédéric Passy ஆகிய அமைதியை விரும்பிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில், 179 பாராளுமன்றங்களின் உறுப்பினர்கள் உள்ளனர்.

COP 26 உலக உச்சி மாநாடு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இம்மாதம் 31ம் தேதியிலிருந்து நவம்பர் 12ம்தேதி வரை நடைபெறவுள்ளது.

முந்தைய அடுத்தது