மத்தியக் கிழக்குப் பகுதியில், கிறிஸ்தவம் தொடர்ந்து நிலைக்க...
கிறிஸ்தவம் முதன் முதலாக அறிவிக்கப்பட்ட மத்தியக் கிழக்குப் பகுதியில், கிறிஸ்தவம் தொடர்ந்து நிலைத்திருப்பது, அங்கு வாழும் கிறிஸ்தவர்களின் கரங்களில் உள்ளது என்று, ஈராக் நாட்டில் பணியாற்றும் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.
மத்தியக் கிழக்குப் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்களையே ஒரு குறுகிய குழுவாக எண்ணிப்பார்க்காமல், ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒரு பகுதியாகக் கருதி, சமுதாயத்தின் அனைத்து கடமைகளிலும் கலந்துகொள்வது, கிறிஸ்தவர்களுக்கு முன் உள்ள அழைப்பு என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.
அக்டோபர் 12ம் தேதி, ஈராக் நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை மனதில் கொண்டு இவ்வாறு கூறிய கர்தினால் சாக்கோ அவர்கள், தாங்கள் சிறுபான்மையினர் என்ற எண்ணத்திலிருந்து விடுதலை பெற்று, கிறிஸ்தவர்கள், ஈராக் நாட்டின் மிக முக்கியமான கடமையான தேர்தலில், முழுமனதுடன் பங்கேற்பது அவசியம் என்று, வலியுறுத்திக் கூறினார்.
2003ம் ஆண்டு, சதாம் ஹுசெயின் அவர்களின் வீழ்ச்சிக்குப் பின், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளுக்கு பயந்து, 10 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் ஈராக் நாட்டை விட்டு வெளியேறினர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் சாக்கோ அவர்கள், இதற்கு மாறாக, ஒரு சில கிறிஸ்தவர்கள், இந்நாட்டில், அரசியல் கட்சிகளைத் துவக்கியது, ஊக்கமளிக்கும் அடையாளமாக இருந்தது என்று கூறினார்.
பிரித்து ஆள்வது அரசியல்வாதிகளின் போக்கு என்பதை நினைவுறுத்திய கர்தினால் சாக்கோ அவர்கள், இந்த போக்கிற்கு மாறாக, கிறிஸ்தவர்கள், பிரிவுகளை ஆதரிக்கும் குழுக்களாக இல்லாமல், மற்றவர்களோடு இணைந்து, ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பவர்களாக மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். (Fides)