இறை வெளிப்பாடு
கிறிஸ்தவ வாழ்வைப் புதுப்பிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் திருத்தந்தை 23ஆம் யோவான் தொடங்கிய திருச்சங்கம் கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படையாக அமையும் இறைவார்த்தையின்பால்தன் பார்வையைத் திருப்பி அது பற்றி ஒரு கோட்பாட்டு விளக்கத்தை வெளியிட்டதில் வியப்பில்லை.
விவிலியத்தை முந்திய காலங்களைவிடக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட இக்காலக்கட்டத்தில், அவர்களை ஊக்குவிப்பதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் இச்சங்க ஏட்டின் முக்கிய நோக்கங்கள்.
இக்கோட்பாட்டு விளக்கம் ஐந்து முறைகள் திருத்தம் பெற்று இன்றைய வடிவுக்கு வந்துள்ளது. 'இறைவெளிப்பாட்டின் மூலங்கள்' என்னும் பெயரில் 1962இல் தயாரிக்கப்பட்ட இதன் முதல் வரைவு சங்கத் தந்தையரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஊக்கப்படுத்தி வழிகாட்டுவதற்குப் பதிலாக அதில் கண்டனக் குரலும் எச்சரிக்கை உணர்வும் மேலோங்கி நின்றதால் கூடியிருந்த 2190 சங்கத் தந்தையருள் 1368 பேர் அதனை ஏற்கவில்லை.
எனவே, விரிவாக்கப்பட்ட ஒரு குழு இவ்வேட்டின் புது வரைவைத் தயாரித்தது. இவ்வரைவு 1963இல் தயாரானது. இது பற்றிய தம் கருத்துகளை 300க்கும் அதிகமான சங்கத் தந்தையர் எழுத்து வடிவில் கொடுத்தனர். இக்கருத்துக்களின் அடிப்படையில் 1964ஆம் ஆண்டு ஒரு துணைக்குழு இவ்வேட்டின் மூன்றாம் வரைவைத் தயாரித்தது.
இதுவே 'இறைவார்த்தை' என்னும் கோட்பாட்டு விளக்கத்தின் அடிப்படையாக அமைந்தது. சங்கத்தின் மூன்றாம் அமர்வில் இவ்வரைவு விவாதிக்கப்பட்டு ஒருசில திருத்தங்களும் புகுத்தப்பட்டன. இறுதியாக, சங்கத்தின் நான்காம் அமர்வில் திருத்தப்பட்ட இவ்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டு 18-11-1965 அன்று திருத்தந்தை ஆறாம் பவுலால் பிரகடனம் செய்யப்பட்டது.
இக்கோட்பாட்டு விளக்கம் 6 இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் இறைவெளிப்பாடு பற்றிப் பேசுகிறது. கடவுளோடு மனிதர்கள் உறவு கொள்ளவேண்டும் என்னும் நோக்குடன்தான் இறைவெளிப்பாடு அருளப்பட்டுள்ளது. தொடக்கமுதல் கடவுள் தம்மை வெளிப்படுத்தியுள்ளார். மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே கடவுள் தம்மை வெளிப்படுத்தி இருந்தாலும், கிறிஸ்துவில் அவரது வெளிப்பாடு நிறைவுபெறுகிறது.
கிறிஸ்துவே கடவுளின் வார்த்தை. அவரது வாழ்வு முழுவதும், குறிப்பாக அவரது இறப்பும் உயிர்த்தெழுதலும் இறை வார்த்தையாக - வெளிப்பாடாக இருந்தன. இவ்வளிப்பாட்டுக்கு மனிதர் தரும் பதில்மொழியே இறை நம்பிக்கை.
இரண்டாம் இயல் இறை வெளிப்பாடு மரபு வழியாக அளிக்கப்படுவது பற்றி எடுத்துரைக்கின்றது. திருத்தூதுதர்கள் தூய ஆவியின் ஏவுதலால் தாம் பெற்றுக்கொண்ட இறைவெளிப்பாட்டை வாய்மொழி வழியாகவும் நூல்கள் வழியாகவும் மக்களுக்கு அளித்தனர். எழுதப்பட்ட நூல்கள் இறைவெளிப்பாட்டின் முழுமையைக் கொண்டிருக்கவில்லை.
திருச்சபையின் மரபு வழியாகவும் இறைவெளிப்பாடு அருளப்பட்டது. திருநூல்களும் திருமரபும் ஒரே ஊற்றிலிருந்து உருப்பெற்ற காரணத்தால் இவை இரண்டும் தம்மில் நெருங்கிய தொடர்புடையன; இரண்டுமே சமமான வணக்கத்துக்குரியன. இவை இரண்டும் அனைத்து மக்களுக்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட கொடைகள். இவற்றிற்கு விளக்கம் தரும் உரிமை திருச்சபை ஆசிரியத்துக்கே உண்டு.
மூன்றாம் இயல் இறை ஏவுதல் பற்றியும் இறை வெளிப்பாட்டிற்கான விளக்கம் பற்றியும் எடுத்துக்கூறுகிறது. இறைவெளிப்பாடு என்றால் என்ன என்னும் கொள்கை அளவிலான கேள்விக்கு விடை கூறாது, திருநூல்கள் தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பெற்றவை; கடவுளை ஆசிரியராகக் கொண்டவை எனத் திருச்சங்கம் இயல்புகிறது.
அதே வேளையில், திருநூல்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்த மனிதர்களும் உண்மையான ஆசிரியர்களே. அவர்கள் சிந்திக்கும் வகை, சொல்லும் வகை, எழுதும் வகை, அவர்கள் காலத்து இலக்கியம், பண்பாடு, வரலாற்று நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் திருநூல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
திருச்சங்கம் திருமறை நூல்களுக்கு விளக்கம் கொடுக்கும்போது மூன்று கருத்துகளை வலியுறுத்துகிறது:
1) இறை ஏவுதல் பெற்ற நூல்கள் யாவுமே மனித மீட்புக்காக எழுதப்பெற்றவை;
2) திருநூலில் உள்ளவை யாவும் தத்தம் இலக்கிய வகையின்படி புரிந்துகொள்ளப்பட வேண்டும்;
3) திருமறை நூல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அவற்றிற்குப் பொருள் தருபவர் இயேசு கிறிஸ்துவே.
நான்காம் இயல் பழைய ஏற்பாடு பற்றிப் பேசுகிறது. பழைய ஏற்பாடு இறைவார்த்தையைக் கொண்டுள்ளது. அது கடவுளின் செயல்பாடுகளை எடுத்துக் கூறிக் கடவுளை வெளிப்படுத்துகிறது. அதில் கூறப்பட்டுள்ள சில உண்மைகள் அவை எழுதப்பட்ட காலத்திற்கு இயைந்தவை; முழுமையான உண்மையாகக் கருதப்பட இயலாதவை.
இருப்பினும் பழைய ஏற்பாட்டிற்குத் திருச்சபை வாழ்வில் நிலையான மதிப்பு உண்டு. இரு ஏற்பாடுகளையும் இணைப்பவர் கிறிஸ்து; கிறிஸ்துவின் ஒளியில் பழைய ஏற்பாடு நிறைவு பெறவேண்டும்; பழைய ஏற்பாட்டின் ஒளியில் புதிய ஏற்பாடு புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
ஐந்தாம் இயல் புதிய ஏற்பாடு பற்றி எடுத்துரைக்கிறது. இறைவாக்கு மனிதரானார்; அதுபோன்றே இறைவெளிப்பாடும் மனிதப் பண்புகளில் எழுத்து வடிவம் பெற்றது.
புதிய ஏற்பாட்டு நூல்களுள் நான்கு நற்செய்திகளும் தனிச் சிறப்பிடம் பெற்றுள்ளன. அவை வரலாற்றுத் தன்மை கொண்டவை. அவற்றை நன்கு புரிந்துகொள்ளத் தற்கால ஆய்வு முறைகள் நமக்கு உதவுகின்றன. இவ்வாய்வு முறைகள் இயேசுவைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள உதவுகின்றனவே தவிர, அவற்றை மறுப்பதில்லை.
ஆறாம் இயல் திருச்சபை வாழ்வில் திருமறை நூல்கள் கொண்டுள்ள சிறப்பிடம் பற்றி எடுத்துக் கூறுகின்றது. எல்லா மக்களும் படித்து பயன் பெறும் முறையில் திருநூல்கள் எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அவை எளிதில் புரிந்துகொள்ளும் முறையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
அனைத்துக் கிறிஸ்தவச் சபைகளும் சேர்ந்து விவிலிய நூல்களை மொழிபெயர்த்துப் பயன்படுத்துவது சிறந்தது. திருநூல்களை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் விவிலிய ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இறையியலுக்கும் அருள்பணி வாழ்வுக்கும் இத்திருநூல்களே அடிப்படையாக அமையவேண்டும்.
திருப்பணிநிலையினரும் பொதுநிலையினரும் இறைவார்த்தையை ஊன்றிப் படித்து ஆழ்ந்து தியானிக்க வேண்டும். இவ்வாறு இறை வெளிப்பாடு பற்றிய சிறந்ததொரு கோட்பாட்டு விளக்கத்தை இரண்டாம் வத்திக்கான் சங்கம் நமக்குத் தந்துள்ளது.
இறைவார்த்தை, தூய ஆவி என்னும் இரு கருத்துகளும் ஏடு முழுவதிலும் இழையோடுகின்றன. மரபுப் பார்வைகள், மரபுச் சொற்கள், மரபு வரையறைகள் ஆகியவற்றை விட்டுவிட்டு நேர்முகமான விவிலிய அணுகுமுறையில் திருச்சங்கம் இறைவெளிப்பாடு பற்றிப் பேசுகிறது.
விவிலிய ஆய்வுகளையும் மொழிபெயர்ப்புகளையும் ஊக்கப்படுத்தி, மக்கள் அனைவரும் இறைவார்த்தையை வாசித்து தங்கள் அருள் வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும் எனத் திருச்சங்கம் விரும்புகிறது.
பணி.கு. எரோணிமுசு
விவிலியப் பேராசிரியர்
திருச்சி தூய பவுல் கல்லூரி
ஆகஸ்டு, 2000, திருச்சி 1
அடியார் ஆயர் பவுல் திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய கோட்பாட்டு விளக்கம்:
1. இறைவனின் வார்த்தைக்குப் பணிவுடன் செவிசாய்த்து, நம்பிக்கையுடன் அதைப் பறைசாற்றும் இத்திருச்சங்கம்
தூய யோவானின் கீழ்க்காணும் சொற்களைத் தன் கண்முன் கொண்டுள்ளது:
''தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ''நிறைவாழ்வு'' பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்.
நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.''
(1 யோவா 1:2–3)
ஆகவே நிறைவாழ்வின் செய்தியைக் கேட்பதால் உலகம் முழுவதும் நம்பவும், நம்புவதால் எதிர்நோக்கு கொள்ளவும், எதிர்நோக்கு கொள்வதால் அன்பு செய்யவும் இயலுமாறு முதலாம் வத்திக்கான் சங்கம் ஆகியவற்றின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இறை வெளிப்பாட்டையும் அது எவ்வாறு வழிவழியாக வழங்கப்படுகிறது என்பதையும் பற்றிய உண்மைப் படிப்பினையை எடுத்துரைக்க இச்சங்கம் விரும்புகிறது.
2. நன்னயமும், ஞானமும் உள்ள கடவுள் தம்மைத் தாமே வெளிப்படுத்தவும் தமது திருவுளத் திட்டத்தை அறிவிக்கவும் விரும்பினார் (காண் எபே 1:9). இத்திட்டத்தால் மனிதரான இறைவார்த்தையாம் கிறிஸ்துவின் மூலம் தூய ஆவியின் வழியாக மனிதர்கள் இறைத் தந்தையை அணுகுகின்றனர்; இறையியல்பில் பங்கு பெறுகின்றனர் (காண் எபே 2:18, 2 பேது 1:4).
இவ்வெளிப்பாட்டின் வழியாகக் கட்புலனாகாக் கடவுள் (காண் கொலோ 1:15; 1 திமோ 1:17) தம் அன்பின் மிகுதியால், மக்களைத் தம்மோடு உறவுகொள்ள அழைத்து, அவர்களோடு உறவு ஏற்படுத்துமாறு அவர்களைத் தம் நண்பர்களாகக் கொண்டு உரையாடுகிறார் (காண் விப 33:11; யோவா 15:14–15); அவர்களோடு குடிகொள்கிறார் (காண் பாரு 3:38).
வெளிப்பாட்டின் இத்திட்டம் செயல்களாலும் சொற்களாலும் நிறைவேறுகிறது. மீட்பின் வரலாற்றில் கடவுள் ஆற்றிய செயல்கள் போதனையையும் உறுதிப்படுத்துகின்றன. அவருடைய சொற்கள், செயல்களைப் பறைசாற்றி, அவற்றில் அடங்கியுள்ள இறைத்திட்டத்தைத் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு வெளிப்பாட்டின் மூலம் கடவுளையும், மனிதரின் நிறை வாழ்வையும் பற்றிய ஆழ்ந்த உண்மை கிறிஸ்துவில் நம்முன் சுடர்விட்டு ஒளிர்கின்றது.
3. வாக்கு வழியாக அனைத்தையும் படைத்து, காத்தும் வரும் கடவுள், படைக்கப்பட்ட பொருள்களின் வழியே தம்மைப் பற்றிய நிலையான சான்றினை மனிதருக்கு அளிக்கின்றார் (காண் உரோ 1:19–20); மேலும் விண்ணக நிறைவாழ்விற்கான வழியைத் திறக்க எண்ணித் தம்மைத்தாமே நம் முதற்பெற்றோருக்குத் தொடக்கத்திலிருந்தே வெளிப்படுத்தினார்.
அவர்களது வீழ்ச்சிக்குப் பின் மீட்பை வாக்களித்து, அதன் மூலம் அவர்களை நிறைவாழ்வு எதிர்நோக்கில் நிலைநிறுத்தினார் (காண் தொநூ 3:15); பின்னர் நிறைவாழ்வை நாடி நற்செயலில் நிலைத்து நிற்பவர்களுக்கு நிலைவாழ்வை அளிப்பதற்காக மக்கள் குலத்தை எந்நாளும் தம் ஆதரவில் வைத்துக்கொண்டார்.
குறிப்பிட்ட காலத்தில் அவர் ஆபிரகாமை ஒரு திருவினாக் குலமாக்க அழைத்தார் (காண் தொநூ 12:2–3). குலமுதுவருக்குப் பின் மோசே வழியாகவும், இறைவாக்கினர் வழியாகவும், கடவுள் தம்மை உயிருள்ள ஒரே உண்மைக் கடவுள், பராமரிக்கும் தந்தை, நீதி நிறை வடுவர் என இவ்வினத்தார் ஏற்றுக்கொள்ளவும், தாம் வாக்களித்திருந்த மீட்பருக்காகக் காத்திருக்கவும் அவர்களுக்கு கற்பித்தார். இவ்வாறாகப் பல நூற்றாண்டுகளாக நற்செய்திக்கு வழியை ஆயத்தம் செய்தார்.
4. பற்பல முறையிலும் பல்வேறு வகையிலும் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள், ''இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்'' (எபி 1:1–2) எனும் வார்த்தைகளால் தம் முழுமை வெளிப்பாட்டைத் தெளிவாக காட்டியுள்ளார். என்றும் வாழும் இறைவாக்காகிய அவருடைய மகன் எல்லா மனிதருக்கும் ஒளியாய் இருக்கிறார். அவர் மக்களிடையே வாழ்ந்து தம் உள்ளார்ந்த உண்மைகளை எடுத்துரைக்கும்படி (யோவா 1:1–18) அனுப்பப்பட்டார்.
மனிதரான வார்த்தையும், ''மனிதருக்காக மனிதராக'' அனுப்பப்பட்டவருமான இயேசு கிறிஸ்து, ''கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார்'' (யோவா 3:34); தந்தை அவருக்களித்த நிறைவாழ்வுப் பணியை நிறைவேற்றுகிறார் (யோவா 5:36; 17:4). இயேசுவைக் காண்பது தந்தையைக் காண்பது எனக் கூறப்படுகிறது (யோவா 14:9).
தம் உடனிருப்பதாலும், தம் சொற்களாலும், செயல்களாலும், அருள் அடையாளங்களாலும், புதுமைகளாலும், குறிப்பாக தாம் இறந்து, மாட்சியுடன் உயிரெழுந்ததாலும், ஆவியானவரை அனுப்பியதாலும் கிறிஸ்து இறை வெளிப்பாட்டை முழுமைப்படுத்துகிறார். பாவம் மற்றும் சாவின் சக்திகளில் இருந்து நம்மை விடுவித்து, நிலைவாழ்விற்கு அழைத்துச் செல்வதன் மூலம் கடவுள் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.
ஆகவே, கிறிஸ்தவ அருள் திட்டம் – புதிய உடன்படிக்கையின் அளவில் – என்றும் அழியாமல் நிற்கும். மேலும் இயேசு கிறிஸ்துவின் மாட்சிமையின் வெளிப்பாடு வரை இனி வேறு எந்த புதிய பொதுவான வெளிப்பாடும் எதிர்பார்க்கப்படுவதில்லை (1 திமோ 6:14; தீத் 2:13).
5. வெளிப்படுத்தும் கடவுளுக்குப் பணிவுடன் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிவது மனிதரின் கடமையாகும் (உரோ 16:26; 1:5; 2 கொரி 10:5–6). இதன் வழியாக அவர்கள் தம்மை முழுமையாகக் கடவுளுக்குக் கையளிக்கின்றனர். இதற்கான துணை நம்முள் செயற்படும் கடவுளின் அருள் மற்றும் தூய ஆவியின் உதவிகள்.
தூய ஆவியே இதயங்களை நெகிழச் செய்து, நம் அறிவுக்கண்களைத் திறந்து, நம்மை உண்மைக்கு இசையும் நம்பிக்கையில் உறுதி பெறச் செய்கிறார். இதே தூய ஆவியே தம் கொடைகளால் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டே போகச் செய்கிறார்.
6. இவ்வெளிப்பாட்டின் மூலம் கடவுள் தம்மையும், மனிதரின் நிறைவாழ்வைப் பற்றிய தம் திருவுளத் திட்டத்தையும் வெளிப்படுத்த விரும்பினார் — “மனித அறிவுக்கு முற்றிலும் எட்டாத இறைச் செல்வங்களை” (ஊசு 2:9) மக்களோடு பகிர்ந்துகொள்வதற்காக.
திருச்சங்கம் அறிவிக்கிறது: “அனைத்திற்கும் தொடக்கமும் முடிவுமான கடவுளைப் படைக்கப்பட்ட பொருட்களிலிருந்து, மனித அறிவின் இயற்கை ஒளியால் உறுதியாகக் கண்டறிய இயலும்” (உரோ 1:20). ஆனால் இவ்வெளிப்பாடின் வழியாக, அந்த உண்மைகள் எல்லா மக்களுக்கும் எளிதாக, உறுதியாக, தவறின்றி புரிந்துகொள்ளும் வகையில் வழங்கப்படுகின்றன.
7. எல்லா தலைமுறைகளுக்கும் கிறிஸ்துவின் முழு வெளிப்பாடு நிலைத்திருக்கவேண்டும் என்பதற்காக கடவுள் தாமே ஏற்பாடு செய்தார். இந்த வெளிப்பாடானது கிறிஸ்துவில் நிறைவு பெற்றது (2 கொரி 1:20; 3:16–4:6).
இந்த நற்செய்தியை போதிக்கவும், கடவுளின் கொடைகளை வழங்கவும் கிறிஸ்து தம் திருத்தூதர்களுக்கு கட்டளையிட்டார். முன்னேறிய நற்செய்தி, இறைவாக்கினர்கள் வழியாக வாக்களிக்கப்பட்டதையும், கிறிஸ்து தம் வாயால் அறிவித்ததும், வாழ்ந்ததிலும், செயற்பட்டதிலும் வெளிப்படுகிறது.
இவற்றைத் தூய ஆவியின் தூண்டுதலால், திருத்தூதர்கள் தங்கள் வாய்மொழிப் போதனைகளால், வாழ்வின் எடுத்துக்காட்டுகளால், ஏற்படுத்திய அமைப்புகளால் வழிவழியாக வழங்கினர். அவர்கள் இதை எழுத்தில் வடித்தும் வழங்கினர். இவ்வாறு அவர்கள் கிறிஸ்துவின் கட்டளையை உறுதியாக நிறைவேற்றினார்கள்.
இந்த நற்செய்தி என்றும் உயிருடன் திருச்சபையில் நிலைத்து இருக்கும் பொருட்டு, திருத்தூதர்கள் தங்கள் வழித்தோன்றலாக ஆயர்கள் வழிமுறையையும், ஆசிரியப் பணியையும் பரம்பரையாகக் கொடுத்தனர்.
இந்த தூய மரபும், இரு ஏற்பாடுகளடங்கிய திருநூல்களும், “முகம் பார்க்கும் கண்ணாடி” போன்றவை; திருச்சபை இவ்வாறே கடவுளை, அவர் இருப்பது போல, நேருக்கு நேர் காணும் நாள்வரை தியானிக்கிறது (1 யோவா 3:2).
8. கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்ட திருநூல்களில் வெளிப்படும் திருத்தூதர்களின் போதனை, இறுதிக்காலம் வரை இடைவிடாது காக்கப்படவேண்டும். அதனால்தான், திருத்தூதர்கள் தாங்கள் பெற்றவற்றை வாய்மொழியாகவும், திருமுகம் வழியாகவும் வழிவழியாக அளித்தனர். இதுவே “மரபு”. (2 தெச 2:15; யூதா 3).
மக்களின் தூய வாழ்வுக்கும் நம்பிக்கையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்த அனைத்தும் இம்மரபில் அடங்கியுள்ளன. திருச்சபை தன் போதனை, வாழ்வு மற்றும் வழிபாட்டின் மூலம், இது போன்ற உண்மைகளை தலைமுறையினிடையே நிலைத்து வழங்குகிறது.
இம்மரபு தூய ஆவியின் வழிநடத்தலால் வளர்ச்சி அடைகிறது. கிறிஸ்தவர்கள் இதனை உள்ளத்தில் பதித்து, தியானித்து, ஆராய்ந்து, உய்த்துணர்ந்து, ஆயரின் போதனையால் உறுதி பெறுகின்றனர். இவ்வாறு, திருச்சபை இறை உண்மையின் முழுமையை நோக்கி தொடர்ந்து பயணம் செய்கிறது.
மரபின் வழியே முழுமையான விவிலியம் திருச்சபையிடம் தெரிவிக்கப்பட்டது. திருச்சபை அவற்றை ஆழ்ந்து கற்றுக் கொள்கிறது, செயல்படுத்துகிறது. முற்காலத்தில் பேசிய கடவுள் இன்று தம் மகனின் மணமகளான திருச்சபையோடு உரையாடுகிறார்; தூய ஆவி கிறிஸ்துவின் வாக்கு அவர்களுள் குடிகொள்ள இட்டுச் செல்கிறார் (கொலோ 3:16).
9. திருமரபும் விவிலியமும் ஒரே இறை ஊற்றிலிருந்து வெளிப்பட்டு, ஒன்றோடொன்று இணைந்த ஒரு குறிக்கோளை நோக்கி செல்கின்றன. விவிலியம் தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டதேயாகும்; திருமரபோ, ஆண்டவர் கிறிஸ்துவும் தூய ஆவியும் திருத்தூதர்களிடம் ஒப்படைத்த வார்த்தையை வழித்தோன்றல்களுக்கு முழுமையுடன் அளிக்கிறது.
இவை இரண்டும் ஒரே பக்திப் பற்றுதலுடன் ஏற்கப்பட வேண்டும். இறை வெளிப்பாட்டைப் பற்றிய முழுமையான உறுதியை விவிலியத்திலிருந்தும், மரபிலிருந்தும் திருச்சபை பெறுகிறது.
10. திருமரபும் விவிலியமும் – இரண்டும் சேர்ந்து – திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை வார்த்தையின் ஒரே திருக்களஞ்சியமாகும். இந்த வார்த்தையின் சாட்சியாக மக்களும், அருள்பணியாளர்களும் திருத்தூதர்களின் போதனையில் நிலைநிற்பதற்காக ஒன்றிணைகின்றனர் (திப 2:42).
இந்த வார்த்தைகளுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கும் பொறுப்பு, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அதிகாரம் செலுத்தும் திருச்சபையின் உயிருள்ள ஆசிரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆசிரியம் இறைவார்த்தையின் மீது அல்ல — அது இறைவார்த்தையின் பணியாள்.
திருச்சபையின் ஆசிரியம், மரபு வழியாக வழங்கப்பட்ட அனைத்தையும் பக்தியோடு கேட்டு, தூய்மையாகக் காக்கிறது; தேவையானவாறு விளக்குகிறது. நம்பிக்கையால் நாம் ஏற்றுக்கொள்ளும் அனைத்தும், ஒரே திருக்களஞ்சியத்திலிருந்து பெறப்படுகின்றன.
எனவே, திருமரபு, விவிலியம் மற்றும் திருச்சபையின் ஆசிரியம் – இவை மூன்றும் கடவுளின் ஞானமிகு திட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்தவை. இவை ஒவ்வொன்றும் தத்தம் முறையில், ஒரே தூய ஆவியின் செயற்பாடாக மக்களின் நிறைவாழ்விற்கு உதவுகின்றன.
11. விவிலியத்தில் அடங்கியுள்ள இறைவெளிப்பாட்டு உண்மைகள் அனைத்தும் தூய ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்டவை. பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களின் எல்லாப் பாகங்களும் கடவுளையே ஆசிரியராகக் கொண்டவை. திருச்சபை, திருத்தூதர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து இவற்றை தூய மற்றும் திருமுறைச் சார்ந்தவையாக ஏற்றுக் கொள்கிறது.
கடவுள், மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் அவர்களுக்குள் செயலாற்றினார். அவர்கள் தங்கள் திறமையால் உண்மையான ஆசிரியர்களாகக் கடவுளின் எண்ணங்களை எழுத்தாக்கினார்கள். எனவே, திரு எழுத்தாளர்கள் கூறும் யாவும் தூய ஆவியால் உறுதியாக்கப்பட்டவை.
கடவுளின் தூண்டுதலால் எழுந்த நூல்கள், நம் நிறைவாழ்வுக்காக தேவையான உண்மைகளை உறுதியாகவும் தவறின்றியும் போதிக்கின்றன. "மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றது..." (2 திமோ 3:16-17) என்பதுபோல், நம் நற்செயல் வாழ்வுக்கு பயனுள்ள வார்த்தைகள் இவை.
12. கடவுள் மனிதர் வழியாகவும், மனிதருக்கே உரிய மொழி வழியாகவும் விவிலியத்தில் பேசுகிறார். எனவே, அவர் கூற விரும்பியதையும், திரு ஆசிரியர் உணர்த்த நினைத்ததையும் ஆராய்ந்து விளக்க வேண்டும்.
அவர்களது இலக்கிய அமைப்புகள், சொற்கள், காலப் பண்புகள், மக்களின் வழக்கமான பேச்சு முறைகள் – இவற்றை கருத்தில் கொண்டு பொருள் விளக்கம் செய்யவேண்டும். வரலாறு, கவிதை, இறைவாக்கு போன்ற வகைகளும் உண்மையை வேறுபட்ட முறையில் எடுத்துரைக்கின்றன.
விவிலியத்தின் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ள, அதன் உள்ளடக்கம் மட்டுமல்லாது, விவிலிய முழுவதன் ஒற்றுமையும், திருச்சபையின் உயிருள்ள மரபும், நம்பிக்கையின் உண்மைகளும் கவனிக்கப்பட வேண்டும்.
இந்த விதிகள் பின்பற்றப்படும் நிலையில், விவிலிய வல்லுநர்களின் ஆய்வுகள் திருச்சபையின் கருத்தை மேம்படுத்தும். இதனைத் தன் கடமையாக எண்ணி உண்மையின் ஆவியால் நடத்தப்பட வேண்டியது விவிலிய வல்லுநர்களின் பங்கு. இத்தகைய விளக்கங்கள் இறுதியாகத் திருச்சபையின் தீர்ப்புக்குட்பட்டவையாகும், ஏனெனில் இறைவார்த்தையை காத்துப் பரப்பும் பணி திருச்சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
13. "கடவுளின் சொல்லரிய நன்னயமும் அவர் நம்மீது கொண்ட பராமரிப்பும்" – இவை அனைத்தும் அவரது மொழி வழியாக எவ்வாறு எளிமையாக்கப்பட்டுள்ளன என்பதை விவிலியம் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், இறை உண்மை மற்றும் தூய்மை நிலை பாதுகாக்கப்படுகிறது.
கடவுள் தம்முடைய வார்த்தையை மனித மொழியில் தழுவினார். எவ்வாறு வலுவற்ற மனித உடலை ஏற்று, மனிதராகவே இருந்தாரோ, அதேபோல் அவர் சொற்களும் மனித மொழியை ஒத்தே இருக்கின்றன. இது அவரது இரக்கத்தின் பெருமையை வெளிப்படுத்துகிறது.
14. அன்புமிகு கடவுள், மனித குலம் முழுவதும் நிறைவாழ்வு பெறும் திட்டத்துக்காக ஆபிரகாம், மோசே ஆகியோரின் வழியாக இஸ்ரயேல் மக்களுடனும் உடன்படிக்கை செய்து, ஒரு தனித்தனி மக்கள் குலத்தினூடாக தம்மை வெளிப்படுத்தினார். அவர்தம் சொற்கள், செயல்கள் மூலமாக உயிருள்ள உண்மைக் கடவுளாகத் தம்மை அறிமுகப்படுத்தினார். இறைவாக்கினர் வழியாக, இஸ்ரயேலர் மேலும் தெளிவாகக் கடவுளைக் கண்டுகொண்டனர். இந்நூல்கள் நமக்குக் கொண்டுவரும் மன உறுதி, ஊக்கம் என்பன நம் எதிர்நோக்கைக் கூட்டுகின்றன (உரோ 15:4).
15. பழைய ஏற்பாடு, கிறிஸ்துவின் வருகையை முன்னறிவித்து, எதிர்பார்த்து, பல முன்குறிகளால் சுட்டிக்காட்டுகிறது. புதிய ஏற்பாட்டிற்குத் தக்க அறிவைத் தரும் இந்நூல்கள், கடவுளின் உண்மையான போதனையை, அவரைப் பற்றிய ஆழ்ந்த உணர்வையும், நற்செய்தி வாழ்க்கைக்குத் தேவையான ஞானத்தையும் கொண்டுள்ளன. எனவே, கிறிஸ்தவர்கள் இந்நூல்களை பக்திப் பற்றுதலுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
16. இரு ஏற்பாடுகளும் ஒரே கடவுளால் ஏவப்பட்டவை. பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாடு மறைந்திருப்பதுபோலவும், புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாடு தெளிவாய் விளங்குவதுபோலவும், இரண்டும் ஒரே வெளியீட்டின் பகுதிகள். கிறிஸ்து தம் இரத்தத்தால் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார் என்றாலும், பழைய ஏற்பாட்டின் நூல்களும் நற்செய்தி அறிவிப்பின் ஒரு பகுதியாகவே உள்ளன.
17. கடவுளின் நிறைவாழ்வுப் பொறுப்பை மிகச் சிறப்பாகக் கூறும் நூல்கள் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. வார்த்தை மனிதரானார்; அருளும் உண்மையும் நிறைந்தவர் நம்மிடம் குடிகொண்டார். இயேசு கிறிஸ்து, தம் உயிர், இறப்பு, உயிரெழுந்தல், தூய ஆவியை அனுப்புதல் ஆகியவற்றால் தம் ஆலயத்தை நிறைவு செய்தார். அவரே முடிவில்லா வாழ்வுக்கான வார்த்தைகள் கொண்டவர் (யோவா 6:68).
18. நான்கு நற்செய்திகள் — மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் — அனைத்தும் திருத்தூதர் மரபிலிருந்தும் அவர்களோடு இருந்தோரிடமிருந்தும் தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டன. இவை கிறிஸ்துவின் வாழ்வும் போதனையும் பற்றிய முக்கியமான ஆதாரமாகவும் நமது நம்பிக்கையின் அடித்தளமாகவும் உள்ளன.
19. நற்செய்திகள் வரலாற்றுத் தன்மை கொண்டவை. அவை இயேசுவின் வாழ்க்கை, அவரின் போதனை மற்றும் செயல்களை உண்மையோடு தருகின்றன. திருத்தூதர்கள், இயேசுவின் சொற்களையும் செயல்களையும் ஞாபகத்தில் வைத்தும், வான்பார்வையால் விளக்கப்பட்டும், உண்மையை மட்டுமே எழுதியுள்ளனர். இவை நமக்கு இயேசுவைப் பற்றிய உண்மை அறிவைத் தருகின்றன.
20. நான்கு நற்செய்திகளைத் தவிர, தூய ஆவியால் ஏவப்பட்டுப் பவுல் எழுதிய திருமுகங்கள் மற்றும் பிற திருத்தூதர்களின் நூல்களும் புதிய ஏற்பாட்டுத் திருமுறையில் அடங்கியுள்ளன. இவை கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளை உறுதிப்படுத்துகின்றன; அவருடைய போதனையை விளக்குகின்றன; திருச்சபையின் தொடக்க வளர்ச்சியையும் மாட்சிமிகு நிறைவும் எடுத்துக்காட்டுகின்றன. ஆண்டவர் இயேசு தம் திருத்தூதர்களுக்கு வாக்குத்தந்தபடி அவர்களுடன் இருந்தார் (மத் 28:20) மற்றும் உண்மையின் ஆவியினை அனுப்பினார் (யோவா 16:13).
21. திருச்சபை, நம் ஆண்டவரின் திருவுடலுக்கு செலுத்தும் வணக்கத்தைப்போல், விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வருகிறது. திருமரபுடன் இணைந்து, திருச்சபை விவிலிய நூல்களை நம்பிக்கையின் அளவாகக் கொண்டுள்ளது. இந்நூல்கள் தூய ஆவியின் குரலுக்குச் சாட்சியாக அமைவதால், திருச்சபையின் போதனை விவிலியத்தால் ஊட்டப்பட வேண்டும். இறை வார்த்தை திருச்சபையின் மக்களுக்கு ஆற்றல், நம்பிக்கை, ஆன்ம உணவாகவும் அருள்வாழ்வின் ஊற்றாகவும் உள்ளது.
22. விவிலியத்தை நன்கு அறிந்து பயனடைய, பல மொழிகளில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட வேண்டும். பழைய ஏற்பாட்டின் எழுபதின்மர் பெயர் பெற்ற கிரேக்க மொழிபெயர்ப்பு, இலத்தீனில் உள்ள வுல்காத்தா மொழிபெயர்ப்பு ஆகியவையும் மதிப்புடன் ஏற்றப்பட்டுள்ளன. தற்போது, சரியான மொழிபெயர்ப்புகள் உரிய அதிகார ஒப்புதலுடன், பிற கிறிஸ்தவ சகோதரர்களுடன் இணைந்து செய்யப்பட வேண்டும்.
23. திருச்சபை, திருவழிபாட்டு முறைகளையும் கீழை, மேலையச் சபைத்தந்தையரின் போதனைகளையும் கற்றறிய ஊக்குவிக்கின்றது. கத்தோலிக்க விவிலிய வல்லுநர்கள் திரு ஆசிரியரின் கண்காணிப்பில் விவிலியத்தை ஆராய வேண்டும். இறைவார்த்தைப் போதகர்கள் உணவாகக் கருதி மக்களுக்கு பயனுள்ளதாக அளிக்க வேண்டும். இப்பணியை மகிழ்வுடன், உறுதியாகத் தொடர்ந்து செய்யும் பணிக்கு திருச்சபை ஊக்கம் தருகிறது.
24. தூய இறையியல், திருமரபும் இறைவார்த்தையும் அடிப்படையாகக் கொண்டு வளர்கின்றது. விவிலிய நூல்களில் உள்ள இறைவார்த்தை உண்மையாகவே கடவுளின் சொற்கள் என்பதால், அவை இறையியலுக்குப் பிழையற்ற அடிப்படை. திருவார்த்தைப் பணியும் இதிலிருந்து ஊட்டமடைகின்றது. இறையியல், மறைக்கல்வி, திருவழிபாட்டு மறையுரை ஆகிய அனைத்தும் இச்சாரம் சார்ந்து இருக்கின்றன.
25. திருப்பணி நிலையினர், கிறிஸ்துவின் திருப்பணியாளர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் விவிலியத்தை ஆர்வத்துடனும் கவனத்துடனும் படித்து ஆராயவேண்டும். “கிறிஸ்துவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம்” என்பதுபோல, அனைத்து கிறிஸ்தவர்கள், குறிப்பாகத் துறவிகள், விவிலியத்தை நன்கு அறிந்து பயன்படுத்த வேண்டும். “விவிலியத்தை அறியாமை என்பது கிறிஸ்துவையே அறியாமை” என்றும் கூறப்படுகிறது. இறைவேண்டலோடும் வாசிப்பதன் மூலமே நம் உள்ளத்தில் கடவுள் உரையாடுகிறார்: “நாம் செபிக்கும்போது அவரை நோக்கி பேசுகிறோம்; அவருடைய வார்த்தைகளை வாசிக்கும்போது அவர் பேசுகிறார்.” (வழிகாட்டி வாக்கியம்). ஆயர்கள், கிறிஸ்தவ மக்கள் நற்செய்தியை நன்கு பயன்படுத்தவும், உரிய மொழி பெயர்ப்புகளை வழங்கவும் உறுதி செய்ய வேண்டும். கிறிஸ்தவரல்லாதோருக்கான பதிப்புகளும் பயன்பாட்டுடன் தயாரிக்கப்படவேண்டும்.
26. “ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது” (2 தெச 3:1) என்பதுபோல், இறைவார்த்தைக்கு அதிக மரியாதை செலுத்தும்போது நம் அருள் வாழ்வு வளர்ச்சி பெறும். இக்கோட்பாட்டு விளக்கத்தில் கூறப்பட்ட அனைத்தும் திருச்சங்கத்தந்தையரின் ஒப்புதலுடன், திருத்தூது அதிகாரத்தின் பேரில், தூய ஆவியில் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இவை அனைத்தும் கடவுளின் மாட்சிமைக்காக செயல்படுத்தப்பட வேண்டும்.
பவுல்
தூய பேதுரு பேராலயம்
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்,
நவம்பர் 18, 1965
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media