Banner Image

25-10-2026
பொதுக்காலம் 30 வாரம் ஞாயிற்றுக்கிழமை

முதல் வாசகம் – விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.
ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு.

ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 18: 1-2 2-3. 46,50
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.

1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன். 2ய ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். பல்லவி



2bஉ என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி



46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! 50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி


இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5-10
நீங்கள் கடவுளிடம் திரும்பி, அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.
சகோதரர் சகோதரிகளே, உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள்.

மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள். எப்படியெனில், ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது.

கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள்.

நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ``போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார்.

அவர், `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.

திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர்
ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்'' (மத்தேயு 22:34)
மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் எதிரிகளாகக் காட்டப்படுவோர் ''பரிசேயர்'', ''சதுசேயர்'' என்னும் இரு குழுக்களைச் சார்ந்தவர்கள். இவர்களுள் சதுசேயர் என்போர் பெரும்பாலும் எருசலேம் நகரில் வாழ்ந்தனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தினர். விவிலியத்தின் முதல் ஐந்து நூற்களை மட்டுமே அதிகாரப்பூர்வமான ஏடுகளாக இவர்கள் ஏற்றார்கள். அந்நூல்களில் கூறப்பட்டவற்றை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வாய்மொழி மரபாகவோ எழுத்து மரபாகவோ வழங்கப்பட்ட சட்ட விளக்கங்கள் விவிலியத்தின்; முதல் ஐந்து நூல் போதனையிலிருந்து மாறுபட்டால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இவர்கள் கருதினார்கள்.எனவே, இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் கருத்து விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் காணப்படவில்லை என்பதால் அதை ஏற்க முடியாது என்பது இவர்களுடைய கருத்து. ஆனால் இயேசு விவிலியத்தின் முதல் நூலாகிய ''தொடக்கநூல்'' என்பதில் ''கடவுள் இறந்தோரின் கடவுளல்ல, மாறாக, ''உயிர்வாழ்வோரின் கடவுள்'' எனக் காணப்படும் உண்மையைச் சுட்டிக்காட்டி, ''சதுசேயரின் வாயை அடைத்துவிட்டார்'' (மத் 22:23). தங்களோடு கருத்து வேறுபட்ட சதுசேயரை இயேசு முறியடித்தார் என்பதைப் பரிசேயர்கள் கேள்விப்படுகின்றனர். அவர்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் பரிசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன் அவரை அணுகி வருகின்றனர். ''பரிசேயர் ஒன்றுகூடினர்'' (மத் 22:34) என மத்தேயு குறிப்பிடுவது கருதத்தக்கது. இயேசுவுக்கு எதிராகத் திட்டம் வகுத்து அவரை ஒழிக்கத் தேடிய பரிசேயரோ பிறரோ ''ஒன்றுகூடி'' சதித்திட்டம் போடுவதை மத்தேயு பல இடங்களில் குறிப்பிடுகிறார் (காண்க: மத் 22:41; 26:3; 27:17,27; 28:12).



இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயருள் ஒருவர் திருச்சட்ட அறிஞர். அவர் இயேசுவிடம் ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்னும் கேள்வியைக் கேட்கிறார் (மத் 22:36). பல நூற்றுக்கணக்கான கட்டளைகளை உள்ளடக்கிய திருநூலில் காணப்படுகின்ற முதன்மையான கட்டளை எது என்னும் கேள்விக்கு யூத அறிஞர் அக்காலத்தில் பதில் தேடியது உண்டு. எடுத்தக்காட்டாக, ஹில்லல் என்னும் அறிஞரைக் குறிப்பிடலாம். அவரைத் தேடி ஒரு பிற இனத்தவர் வருகிறார். ''நான் ஒற்றைக் காலில் நிற்கும் நேரத்தில் எனக்குத் திருச்சட்டம் முழுவதையும் கற்றுத் தர முடியும் என்றால் நான் யூத சமயத்தைத் தழுவுகிறேன்'' என்கிறார் அவர். இதைக் கேட்ட ஹில்லல் அப்பிற இன மனிதரைப் பார்த்து, ''உனக்குத் தீங்கு இழைக்க நீ விரும்பாததுபோல பிறருக்கும் தீங்கு இழைக்க விரும்பாதே. இதில் திருச்சட்டம் முழுவதும் அடங்கும். எஞ்சியது விளக்கவுரையே'' எனப் பதிலளித்தார். இயேவிடம் சென்று ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது'' என்று கேட்டவருக்கு இயேசு அளித்த பதில் ''கடவுளை அன்புசெய்க; பிறரை அன்புசெய்க'' என்பதே. ''திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' (மத் 22:40) என்று இயேசு அளித்த பதிலுக்கு ஆதாரம் பழைய ஏற்பாட்டில் உள்ளது (காண்க: இச 6:5; லேவி 19:18). அன்புக் கட்டளையை இயேசு தம் வாழ்வில் முழுமையாகக் கடைப்பிடித்தார். கடவுளை முழுமையாக அன்புசெய்த அவர் நமக்காகச் சிலுவையில் உயிர் துறந்து நம்மை இறுதிவரை அன்புசெய்ததைச் செயல்முறையில் காட்டினார். அதே அன்பு நம்மில் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் சிந்தனை சொல் செயல் அனைத்தும் அன்பிலிருந்து பிறந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media