Banner Image

24-10-2026
பொதுக்காலம் 29 வாரம் சனிக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16
தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்.
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகையால்தான், `அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்' என்று மறைநூல் கூறுகிறது. `ஏறிச் சென்றார்' என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.

அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.

அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப்பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம். ஆகவே இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது.

மாறாக, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசைநார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 122: 1-2. 3-4 4-5
அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்'', என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி



3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். 4ய ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். பல்லவி



4b இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றிசெலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்
தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9
அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன்.

மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன்.

மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார்.

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ``ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், `பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார்.

தொழிலாளர் மறுமொழியாக, `ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்?
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (லூக்கா 12:51)
இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர் என்றும் நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள் ஒருங்கிணைந்து, ''உலகில் கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக் 2:14). இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை நோக்கி, ''அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என வாக்களித்தார் (காண்க: யோவா 14:27). மேலும், தாம் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு இயேசு தம் சீடர்களை நோக்கி, ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார் (காண்க: லூக் 24:36). இவ்வாறு அமைதியைப் போற்றிய இயேசுவா ''பிளவு உண்டாக்க வந்தேன்'' எனக் கூறுவார் என நாம் கேள்வி எழுப்பினால் அது தவறு எனக் கூற முடியாது. ஆக, இயேசு கொணர்ந்த அமைதி யாது, அவர் கொணர்ந்த பிளவு யாது என்னும் கேள்வி எழுகிறது. இயேசு தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களித்தார் என்பதில் ஐயமில்லை. அந்த அமைதி கடவுளுக்கும் நமக்கும் இடையே உருவாகின்ற நல்லுறவையும் பிறரோடு நாம் கொள்கின்ற நல்லுறவையும் குறிப்பதாகும். பாவத்தை முறியடித்து நம்மைக் கடவுளோடும் எல்லா மனிதரோடும் ஒப்புரவாக்குகின்ற பணியை இயேசு தம் சிலுவைச் சாவு வழியாக நிறைவேற்றினார். எனவே அவர் உலகுக்கு அமைதி கொணர்ந்தார் எனலாம்.



ஆனால் அதே இயேசு நாம் வாழும் உலகில் ''பிளவையும் உண்டாக்குகிறார்'' (லூக் 12:51). இயேசு கொணர்கின்ற பிளவு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்தின்போதே அறிவிக்கப்பட்டது. குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக மரியாவும் யோசேப்பும் செல்கிறார்கள். அங்கே சிமியோன் என்னும் இறைவாக்கினர் இயேசு மக்களிடையே பிளவு கொணர்வார் என முன்னறிவிக்கிறார்: ''இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்...'' (லூக் 2:34). ஒருசிலர் இயேசுவை ஏற்பர், வேறு சிலர் அவரை எதிர்ப்பர். இவ்வாறு மனிதரிடையே பிளவு உண்டாகும். இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் குடும்ப உணர்வு மிக ஆழமாக வேரூயஅp;ன்றியிருந்தது. துன்ப துயரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் மக்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெருங்கிய குடும்ப உணர்வோடு வாழ்ந்தார்கள். அவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பங்களிலும் இயேசுவின் பொருட்டு பிளவு எற்பட்டது. ஏனென்றால் அக்குடும்பங்களில் சிலர் இயேசுவை ஏற்றார்கள், பிறர் அவரை எதிர்த்தார்கள். இவ்வாறு இயேசுவின் வருகையால் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது தொடக்க காலத் திருச்சபையில் தெளிவாகத் தெரிந்தது. அதையே லூக்கா பதிவுசெய்துள்ளார். இன்றைய உலகிலும் இயேசுவை ஏற்போரும் அவரை எதிர்ப்போரும் உள்ளனர். இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போரும் அவருடைய போதனைகளைப் புறக்கணிப்போரும் உள்ளனர். ஏன், இயேசுவின் சீடர்களாகத் தம்மை அடையாளம் காட்டுவோர் கூட சிலவேளைகளில் அவருடைய போதனையை மறந்து விடுகிறார்கள். ஆக, இயேசு ''முரண்பாட்டு அறிகுறியாக'' இன்றும் உள்ளார் என்பதில் ஐயமில்லை. இயேசு கொணர்கின்ற அமைதி ஒருவிதமான மயான அமைதி அல்ல. கடவுளையும் மனிதரையும் ஒருங்கிணைக்கின்ற இயேசுவை நாம் ஏற்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதைப் பொறுத்தே நம் வாழ்விலும் நாம் வாழ்கின்ற உலக சமுதாயத்திலும் உண்மையான அமைதி நிலவும் என்பதே உண்மை.

மன்றாட்டு:

இறைவா, உண்மையான அமைதியை உம்மில் கண்டுகொள்ள அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media