Banner Image

02-10-2026
பொதுக்காலம் 26 வாரம் வெள்ளிக்கிழமை

தூய காவல் தூதர்கள் நினைவு
முதல் வாசகம் – யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4
காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?
ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்: உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுள்ளிருந்து உதறித் தள்ளுமே! முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.

அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்; அடிக்க ஓங்கிய கை முறிக்கப்படும். கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ? சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்! ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ? அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதன் உறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ! ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவே மாட்டேன்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 39: 1-3. 7-8. 9-10. 13-14ab (பல்லவி: 24b)
பல்லவி: இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.
1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

7 உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! பல்லவி

9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14ab அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 95:8,7
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா, அல்லேலூயா!
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில் இயேசு கூறியது: ``கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர்.

எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.''


நற்செய்தி வாசகம் தூய காவல் தூதர்கள் நினைவுக்கு உரியது

சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்


மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10

அக்காலத்தில், சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ?
இல்லை, பாதாளம்வரைத் தாழ்த்தப்படுவாய்'' (லூக்கா 10:15)
நற்செய்தி நூல்களில் கப்பர்நாகும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அங்கே இயேசு பல புதுமைகள் நிகழ்த்தினார். அங்கிருந்த தொழுகைக் கூடத்தில் இயேசு போதித்தார். நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளரை இயேசு குணமாக்கியது கப்பர்நாகுமில்தான் (லூக்கா 7:1-10). இயேசு தம் சீடராக அழைத்த பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோர் கப்பர்நாகும் ஊரைச் சார்ந்தவர்களே (மத் 4:12-22). பேதுருவின் வீடு கப்பர்நாகுமில்தான் இருந்தது. அங்கே இயேசு குடியிருந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்4:13). இவ்வாறு இயேசுவின் தனிப்பட்ட அன்பிற்கும் கரிசனைக்கும் உள்ளான கப்பர்நாகும் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது நமக்கு வியப்பாகத்தான் உள்ளது. ஆக, கப்பர்நாகும் வானளாவ உயர்த்தப்பட்டது உண்மைதான். இயேசுவின் பணியும் வாழ்வும் அங்கே நிகழ்ந்ததால் அவ்வூர் பேறுபெற்றது என நாம் கருதலாம். ஆயினும், அவ்வூர் மக்கள் பலர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.




கப்பர்நாகுமில் நிகழ்ந்ததைப் பார்க்கும்போது நம் உள்ளத்தில் எழுகின்ற கேள்வி இது: இயேசுவை நாம் எவ்வாறு அடையாளம் காண்பது? இயேசுவின் புதுமைகளும் ஆழ்ந்த போதனைகளும் மட்டுமே நம்மில் நம்பிக்கையை உருவாக்கிட இயலாது. இயேசுவை அணுகிச் செல்ல நமக்குத் திறந்த மனது வேண்டும். உறைந்துபோன உள்ளத்தில் கடவுளின் குரல் நிசப்தமாகிவிடும். நற்செய்தியைக் கேட்டு, அதன் வல்லமையை உணர்ந்த நமக்கு ஒரு பெரிய பொறுப்பும் வழங்கப்படுகிறது. அதாவது, நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் கண்டுகொள்ளாமல் தடுக்கின்ற தடைச்சுவர்களை நாம் தகர்த்தெறிய வேண்டும். தன்னலமும் ஆணவமும் நம்மை ஆட்கொண்டுவிட்டால் நாம் கடவுளின் அருள்செயலைக் காணத் தவறிவிடுவோம். எனவே, வானளாவ உயர்த்தப்பட்டோர் தாம் பெற்றுக்கொண்ட கொடைக்கு ஏற்ப தங்கள் வாழ்வையும் சீரிய முறையில் வாழ்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் வழங்குகின்ற கொடைகளை நன்றியோடு ஏற்று உமக்கு உகந்த வாழ்க்கை நடத்திட எங்களுக்கு அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media