Banner Image

01-10-2026
பொதுக்காலம் 26 வாரம் வியாழக்கிழமை

குழந்தை இயேசுவின் புனித தெரேசா - கன்னியர் நினைவு
முதல் வாசகம் – இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14
ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.
எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும் அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்கள் 131: 1. 2. 3
பல்லவி: என் ஆண்டவரே, என்னை சமாதானத்தில் நிலைபெறச் செய்தருளும்.
1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10
அக்காலத்தில், சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.”

“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசு, 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ
அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கச் சொல்கிறேன்' என்றார்}} (மத்தேயு 18:20)
இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று வாழ்கின்ற மக்கள் குழு திருச்சபை. இது இயேசுவின் போதனையைப் பிரமாணிக்கமாகப் பின்பற்ற அழைக்கப்படுகின்ற மக்கள் குழுவாகத் திகழ்கிறது. இச்சபையின் சிறப்புப் பண்புகள் யாவை என மத்தேயு பல இடங்களில் விளக்குகிறார். இயேசுவின் திருச்சபையில் நிலவ வேண்டிய ஒரு முக்கியமான பண்பு ''பாவ மன்னிப்பு'' ஆகும். கடவுளுக்கோ மனிதருக்கோ எதிராகச் செய்யப் படுகின்ற பாவங்கள் கிறிஸ்தவ சமூகத்தை உள்ளிருந்தே கொல்கின்ற சக்தி வாய்ந்தவை. எனவே, குற்றம் செய்வோரைத் திருத்தி நல்வழிப்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இயேசுவின் போதனை (காண்க: மத் 18:15-18).




திருச்சபைக்குள் நிலவ வேண்டிய ஒற்றுமை பல நிலைகளில் வெளிப்பட வேண்டும். இறைவழிபாட்டுக்காகக் கூடி வருகின்ற திருச்சபையில் இந்த ஒற்றுமை தோன்றும். எனவே, ஒருமித்த மனத்தோடும் ஒத்த கருத்தோடும் இறைவனை வேண்டும்போது நம் வேண்டுதல் கேட்கப்படும். இயேசுவின் பெயரால் நாம் ஒன்றுகூடி வரும்போது நம்மிடையே அவரும் உடனிருப்பார் (மத் 18:20). இந்த வாக்குறுதி உயிர்த்தெழுந்த இயேசு தம் திருச்சபையோடு இருந்து அதை வழிநடத்துவதைக் குறிப்பதாக மத்தேயு நற்செய்தியின் இறுதியில் காண்கின்றோம். ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என இயேசு வாக்களித்துள்ளார் (மத் 28:20). அதுபோலவே மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்திலும் இயேசுவின் பிறப்பின்போது அவர் ''இம்மானுவேல்'' (அதாவது ''கடவுள் நம்முடன் இருக்கிறார்'') என அறிமுகப்படுத்தப்படுகிறார் (மத் 1:23). ஆக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைத்திலும் ஒன்றித்திருந்து, ஒற்றுமையோடு செயல்பட அழைக்கப்படுகிறார்கள். பிளவுகள் தோன்றினாலும் அவற்றைப் போக்குவதற்கான வழிகளைத் தேட வேண்டும்; அன்பும் மன்னித்து ஏற்கும் பண்பும் நம்மில் மிளிர வேண்டும். அப்போது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை உலகுக்குத் தெளிவாகத் தெரியும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் ஒற்றுமையை வளர்க்க அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media