Banner Image

13-09-2026
பொதுக்காலம் 24 வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
மனமார மன்னிக்காவிட்டால்...
மீட்புக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு மனமார மன்னிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. மன்னிப்பைப் பற்றி மிகவும் வலிமையாகப் பேசியுள்ளார் இயேசு. இன்றைய நற்செய்தி வாசகம் அத்தகைய வலிமையான பகுதிகளுள் ஒன்று. உடன் பணியாளரை மன்னிக்காத கடனாளி ஒருவரைப் பற்றிய உவமையை இயேசு படைப்பாற்றலோடு விவரித்திருக்கின்றார். இக்கதையைக் கேட்ட அனைவருமே அந்தப் பணியாளின்மீது ஆத்திரம் கொண்டிருப்பர். அதுதான் இந்த உவமையின் வலிமை. ஆனால், நாமே அந்தப் பணியாள் என்பதை உணரும்போது இன்னும் அதிக வலிமையோடு இந்த உவமை நம்மைத் தாக்குவதை அறியலாம். நமது பாவங்கள் அனைத்தையும் எந்த நிபந்தனையுமின்றி இறைவன் மன்னிக்க முன் வரும்போது, பிறரின் குறைகளை, குற்றங்களை நாம் ஏன் மனதில் வைத்திருக்க வேண்டும்? அவற்றை மன்னிக்க முன் வருவோம். அத்துடன், "மனமார மன்னிக்காவிட்டால்" என்னும் இயேசுவின் அழுத்தச் சொற்களை நினைவுகூர்ந்து, முழு மனத்துடன், அதாவது, எந்தத் தயக்கமும், நிபந்தனையுமின்றி பிறரை மன்னிக்க முன்வருவோம். அவர்களுக்காக இறைவனிடம் பரிந்துபேசுவோம். நாங்கள் பிறரை மனமார மன்னிக்கும் அருளைத் தந்தருள வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 30- 28: 7
உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக்கொள்கின்றார்கள். பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார்.

உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மனிதர் தம் போன்ற மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவ மன்னிப்புக்காக எப்படி மன்றாட முடியும்? அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்?

உன் முடிவை நினைத்துப் பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையும் நினைத்துப் பார்; கட்டளைகளில் நிலைத்திரு. கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர் மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 103: 1-2. 3-4. 9-10. 11-12 (பல்லவி: 8)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்ளுபவரல்லர்.
10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். - பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14:7-9
வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
சகோதரர் சகோதரிகளே, நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 18:21-35
அக்காலத்தில், பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா"? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய பொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
நல்லாயராம் இறைவா,

உம் திருஅவை கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
இறைவனின் அன்பின் அடையாளமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

இறைத் தந்தையின் முழு அன்பையும், இரக்கத்தையும் அவரது மன்னிப்பின் வழியாகப் பெற்றுத் தந்தீரே. உமக்கு நன்றி. நாங்கள் பிறரை மனமார மன்னிக்கும் அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.

மன்றாட்டு 3:
மன்னிப்பின் ஊற்றான இயேசுவே,

ஒவ்வொரு நாளும் உமது மன்னிப்பின் பேரன்பை நாம் அனுபவிக்கின்றோம். உமது இரக்கத்தை உணர்கின்றோம். உமக்கு நன்றி கூறுகிறோம். மண்ணிலிருந்து விண் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அவ்வளவுக்கு நீர் எங்கள் பாவங்களை எங்களிடமிருந்து அகற்றி விடுகின்றீர். உமது மன்னிக்கும் பேரன்பை அனுபவிக்கும் நாங்களும் பிறரை மன்னித்து மகிழும் வரத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.

மன்றாட்டு 4:
ஆற்றல் மிகு தந்தையே இறைவா!

எம் இளையோர் அனைவரும் உம் தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு உலகத்தின் பிழையான ஈர்ப்பினாலே தடம் புரண்டு செல்லாது நல்வாழ்வு வாழ்ந்து வளர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 5:
என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா!

எமது ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அவர்களுக்கு அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை
''என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்
நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?'' (மத்தேயு 18:21)
மன்னிப்பு என்பது எளிதில் நிகழும் காரியம் அல்ல. சாதாரண மனித இயல்பைப் பார்த்தால் நமக்கு எதிராக யாராவது தீங்கிழைக்கும் வேளையில் அவர்ளை உடனடியாகத் தண்டிக்கத்தான் மனம் வரும்; அல்லது பழிக்குப் பழி என்னும் எண்ணம் நம்மை ஆட்கொண்டுவிடும். எனவே, பேதுரு இயேசுவிடம் கேட்ட கேள்வி நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் எழுகின்ற, எழக் கூடுமான கேள்வியே என்றால் மிகையாகாது. எத்தனை முறை மன்னிப்பது என்று பேதுரு கேட்ட கேள்விக்கு இயேசு வழங்கிய பதில் என்ன? ''ஏழுமுறை மட்டும் மன்னித்தால் போதாது; ஏழுபது தடவை ஏழுமுறை நீ மன்னிக்க வேண்டும்'' (காண்க: மத் 18:23). இதை விளக்கிட இயேசு ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். மிகப் பெரிய தொகையைக் கடனாக வாங்கிய ஒருவருடைய முழுக்கடனும் மன்னிக்கப்பட்டது. ஆனால் அவரோ தன்னிடமிருந்து மிகச் சிறிய தொகை கடனாகப் பெற்ற ஒருவருக்கு மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார். பிறருடைய குற்றங்களை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளும் நமக்கு மன்னிப்பு அருளமாட்டார் என இயேசு இக்கதை வழி நமக்குப் போதிக்கிறார் (மத் 18:21-35).



மன்னிப்பு அன்பின் உயரிய வெளிப்பாடு. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் நன்மை செய்ய விரும்புவது இயல்பு. ஆனால் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்வது கடினமான செயல். நம் உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்தால்தான் நாம் பிறரை மன்னிக்க முன்வருவோம். கடவுள் நம் பாவங்களையும் குற்றங்களையும் மன்னிக்கிறார். ஆனால், நாம் பிறருக்கு மன்னிப்பு வழங்க மறுத்தால் கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது முரண்பாடாகத்தானே இருக்கும்! கடவுளிடம் மன்னிப்புக் கேட்போர் பிறரையும் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போது இயேசு பேதுருவுக்கு வழங்கிய பதில் நமக்கும் பொருத்தமாக அமையும். அதாவது எத்தனை தடவை மன்னிப்பது என நாம் விரல்விட்டு எண்ணிப் பார்க்காமல் எப்போதெல்லாம் பிறர் நமக்குத் தீங்கு இழைக்கின்றனரோ அப்போதெல்லாம் மனமுவந்து மன்னித்திட முன்வர வேண்டும். இத்தகைய தாராள மனம் இயேசுவிடம் இருந்தது. சிலுவையில் தொங்கிய வேளையிலும் அவர், ''தந்தையே, இவர்களை மன்னியும்'' (லூக்கா 23:34) என்று மன்றாடியதுபோல நாமும் உளமார மன்னிப்போம்.

மன்றாட்டு:

இறைவா, மன்னிக்கும் மனப்பான்மை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media